

வசதிகளையும் வெற்றியையும் தேடிச் செல்லும் பயணத்தில், அன்பானவர்களை விட்டு அதிக தூரம் விலகிச் செல்லக் கூடாது. பணம், புகழ் போன்றவற்றை மீண்டும் சம்பாதித்துக் கொள்ளலாம்; ஆனால், இழந்த தருணங்களையும் உறவுகளையும் மீண்டும் பெற முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வாழ்க்கையின் இறுதி இலக்கு நிம்மதியும் மகிழ்ச்சியும்தான். அதை அன்பானவர்களுடன் பகிர்வதில் தான் உண்மையான அர்த்தம் உள்ளது. எனவே, அன்பானவர்களை விட்டு அதிக தூரம் சென்றால், திரும்பி வருவதற்கு வழிகள் கிடைக்காமல் போகலாம் அல்லது அதற்கான காலம் கைகூடாமல் கூடப் போகலாம்.
இந்த உலகில் அன்பைத் தருபவர்களை விட, அனுபவத்தைத் தருபவர்கள் தான் அதிகம். உண்மையில் அன்பு என்பது ஒரு மாபெரும் வரம். இது வெறும் உணர்வு மட்டுமல்ல; நம் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும் உயிரோட்டமான சக்தி என்பதை உணர்ந்தாலே போதும். அன்பு இல்லாத வாழ்க்கை பாலைவனம் போன்றது. அன்பே உலகை இயக்கும் அச்சாணி! வாழ்வில் அன்பும், நேர்மையான எண்ணங்களும் பெருக, யாரையும் வார்த்தையால் காயப்படுத்தாமல் இருப்பதே சிறப்பு. அன்பின் வலிமை மன்னிப்பில் உள்ளது.
நம் மீது அன்பும் அக்கறையும் கொள்ளும் மனிதர்களை மதிப்பதும், அவர்களுடன் செலவழிக்கும் ஒவ்வொரு கணத்தையும் பொக்கிஷமாகக் கருதுவதும், அப்படிப்பட்டவர்கள் நம் அருகில் இருக்கும்பொழுது நம் உலகமே அழகாகத் தெரிவதும் மறுக்க முடியாத உண்மை. ஒருவருக்கொருவர் காட்டும் அன்பு, மனிதர்களுக்குள் ஒரு பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்தும். கோபத்தையும் வெறுப்பயும் மாற்றக்கூடிய ஒரே ஆயுதம் உண்டென்றால், அது உண்மையான அன்பு மட்டுமே. அன்பு இருக்கும் இடத்தில் தான் உண்மையான மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும். பிரதிபலன் எதிர்பாராத, எந்தவிதமான நிபந்தனையும் இல்லாத அன்புதான் உயர்வானது.
பெரும்பாலும் நம்மைச் சுற்றி அன்பானவர்கள் இருக்கும்பொழுது அதன் அருமை நமக்குத் தெரிவதில்லை, புரிவதில்லை. அவர்கள் இல்லாத போதுதான் அதன் மதிப்பு புரிகிறது. மனிதநேயம் மிக்க ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றால், அங்கு அன்பு என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். அன்பு என்பது 'மழை' போல – சில சமயம் தூறலாய், சாரலாய் மனதை வருடும் இதமாக இருக்கும்; சில சமயம் வெள்ளம் போல் பெருக்கெடுக்கும். வெள்ளமாய்ப் பெருக்கெடுத்தாலும் கூட, அடுத்த ஆண்டும் அதே மழை நமக்குத் தேவையாய்த்தானே உள்ளது? மழை போலத் தான் அன்பும் இங்கு அனைவருக்கும் தேவையாய் இருக்கிறது.
அன்பான, மெத்த படித்த, செல்வச் செழிப்புள்ள குடும்பம் ஒன்று இருந்தது. இவர்களைச் சோதிக்க அன்பு, அறிவு, செல்வம் என்ற மூவரும் அவர்கள் வீட்டு வாசலுக்கு வந்து குரல் கொடுத்தனர். வெளியே வந்த குடும்பத்தினர், "நீங்கள் யார்?" என்று கேட்க, அவர்களும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.
வந்த விருந்தினர்களை வீட்டுக்குள் வருமாறு அவர்கள் அழைக்க, அவர்களோ, "எங்கள் மூன்று பேரில் ஒருவர் மட்டுமே உங்கள் வீட்டுக்குள் வந்து உங்களுடன் வசிக்க முடியும். எங்கள் மூவரில் யார் உங்களுடன் இருக்க வேண்டும் என்று நீங்களே முடிவு செய்யுங்கள்" என்று கூறினர்.
கணவன், "அறிவைக் கூப்பிடலாம்" என்று கூற, மனைவியோ, "செல்வத்தை அழைக்கலாம்" என்று சொன்னாள். ஆனால் குழந்தையோ, "நமக்குத்தான் பொன், பொருள், படிப்பறிவு எல்லாம் ஏற்கனவே உள்ளதே! நாம் அன்பைக் கூப்பிட்டுக் கொள்ளலாமே" என்று கூறியது. அதன்படியே அவர்களும் 'அன்பை' வீட்டுக்குள் வருமாறு அழைத்தனர்.
அன்பு மகிழ்ச்சியுடன் வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்க, அதைவிட்டுப் போக மனம் இல்லாமல் அறிவும் செல்வமும் சேர்ந்தே அந்த வீட்டில் வசிக்கத் தொடங்கின!
அன்பு என்பது வெறும் உணர்வு மட்டுமல்ல; வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும் உயிரோட்டமான சக்தி(love-wisdom-wealth-story) என்பது உண்மைதானே நண்பர்களே!