"எந்த ஒரு பிரச்னையையும் நாசூக்காக கையாளுங்கள்..." என்கிறார் வேதாத்திரி மகரிஷி.
பிரச்னையை நாசூக்காக கையாள்வதன் மூலம் பிரச்னை பெரிதாகாமல் தடுக்கப்படுகிறது. யார் மனதும் நோகாதவாறு பிரச்னை கையாளப்படுகிறது.
இதனைக் குறித்த ஒரு கதையைப் பார்ப்போம்.
ஸாம் என்ற ஒரு வணிகனுக்கு டாம் என்ற ஒரு வட்டித் தொழில் செய்பவன் கடன் கொடுத்தான். பணத்தைத் திருப்பி கொடுக்கும் காலம் வந்தது. ஸாமினால் பணத்தை திருப்பிக் கொடுக்க முடியவில்லை.
ஸாமிற்கு அழகான ஒரு பெண் இருந்தாள். அவள் தந்தையிடம் மிகவும் அன்பாக இருந்தாள். பணத்தை திருப்பி தராவிட்டால் ஸாமின் பெண்ணை தான் மணந்து கொள்வேன் என்று டாம் கூறினான்.
ஸாமிற்கு என்ன செய்வது என்று புரியவில்லை. கெட்ட எண்ணம் கொண்ட டாம் ஸாமிடம் ஒரு புதிய நிபந்தனையை விதித்தான். டாம் நின்று கொண்டிருந்த இடத்தில் சில கூழாங்கற்கள் இருந்தன. அவை வெள்ளை நிறத்திலும் கருப்பு நிறத்திலும் இருந்தன. டாம் தனது இரண்டு கைகளில் ஒன்றில் வெள்ளைக் கூழாங்கல்லும் மற்றொன்றில் கருப்புக் கூழாங்கல்லும் வைத்திருந்து, ஸாமின் பெண் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றான்.
அந்தப் பெண் கருப்புக் கூழாங்கல்லைத் தேர்ந்தெடுத்தால் கடன் தள்ளுபடி செய்யப்படும். ஆனால், அந்தப் பெண்ணை டாம் திருமணம் செய்து கொள்வான்.
அவள் வெள்ளைக் கூழாங்கல்லைத் தேர்ந்தெடுத்தால் கடன் தள்ளுபடி செய்யப்படும். அந்தப் பெண்ணும் டாமைத் திருமணம் செய்து கொள்ள வேண்டியதில்லை.
இந்தப் புதிய நிபந்தனையை கூறிவிட்டு டாம் குனிந்து கீழே கூழாங்கற்களை எடுத்தபோது, இரண்டு கைகளிலும் கருப்பு கூழாங்கல்லை எடுப்பதை ஸாமின் பெண் கவனித்து விட்டாள். இந்த இக்கட்டானச் சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது என்று நினைத்தாள். தனது தந்தையிடம் இதனைக் கூறினாலோ, கூழாங்கல் எடுக்க மாட்டேன் என்றாலோ டாம் பிரச்னையைப் பெரிதாக்குவான். கருப்பு கூழாங்கல்லை எடுத்தால் தனது வாழ்க்கையைத் தியாகம் செய்ய நேரிடும். அந்தப் பெண் இந்தப் பிரச்னையை நாசூக்காக கையாளத் தீர்மானித்தாள். டாம் எதிர்பாராத ஒன்றை அவள் செய்தாள்.
டாமின் கையில் இருந்த கூழாங்கல்லை வாங்கிய அந்தப் பெண், அதனைக் கீழே தவற விட்டாள். தான் எடுத்தது கருப்புக் கூழாங்கல்லா வெள்ளைக் கூழாங்கல்லா என்ற அறிய டாமின் மற்றொரு கையை அவள் திறக்கச் சொன்னாள். டாமின் மற்றொரு கையைத் திறந்தபொழுது அங்கு கருப்புக் கூழாங்கல் இருக்க, தான் எடுத்தது வெள்ளைக் கூழாங்கல் என்று கூறி தந்தையையும் தன்னையும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து நாசூக்காக விடுவித்துக் கொண்டாள்.
இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் பதட்டம் அடையாமல் வித்தியாசமாக யோசித்து பிரச்னையை நாசூக்காக கையாண்டு, ஸாமின் மகள் தந்தையையும் தன்னையும் காப்பாற்றிக் கொண்டாள்.
எனவே, எந்த ஒரு பிரச்னை ஏற்படும் பொழுதும் அதை எவ்வாறு நாம் நாசூக்காக கையாளலாம் என்று சிந்திக்க வேண்டும். நாசூக்காக கையாள்வதன் மூலம் பிரச்னை சுமூகமாக தீர்க்கப்படுகிறது.