ஒரு மனிதன் வெற்றிபெற வேண்டும் எனில் கற்றுக் கொள்ள வேண்டிய பண்புகளும் விலக்க வேண்டிய விஷயங்களும் நிறைய உண்டு. அப்படி விலக்க வேண்டிய விஷயங்களுள் முதன்மையானது நான் எனும் "ஈகோ" ஈகோ என்பது லத்தீன் மொழியில் "நான்" எனும் பொருள். அதுவே உலகம் முழுவதும் பேசப்படுகிறது.
ஈகோ என்பது சுயநலம். எப்போதும் தன்னைப் பற்றியே சிந்திப்பது. தன்னைப்போல் யாருமில்லை என்று தலைக்கனம். தான் சொல்வதே சரி என்ற அகங்காரம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த குணங்களின் வெளிப்பாடுதான் ஈகோ. உண்மையில் ஈகோ இல்லாத மனிதரே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எந்த நிலையில் இருந்தாலும் நான் எனும் அகங்காரம் இருப்பது சகஜம்.
ஆனால் வெற்றி பெற்ற மனிதராக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த ஈகோவை புறம் தள்ளினால் மட்டுமே சாதிக்க முடியும். ஈகோ எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்தில் பிரச்னைகள் மட்டுமே வளரும். தீர்வை தேடுவதற்கும் ஈகோவானது இடம் தராது. தீர்வு கிடைத்தாலும் அந்த தீர்வை ஏற்பதற்கு ஈகோ ஒப்புக்கொள்ளாது. இங்குதான் வாழ்க்கை இழுபறியாகிறது. நீங்கள் மெத்தப் படித்து இருக்கலாம் மொத்த உலகத்தையும் சுற்றி வந்து இருக்கலாம். ஆனால் ஈகோ இருந்தால் அத்தனையும் மதிப்பற்றதாகிவிடும்.
ஒரு மனிதனுக்கு பணம், அழகு, செல்வாக்கு ஆகியவை கூடும் பொழுது அவனை அறியாமலேயே அவனுள் இந்த ஆணவம், செருக்கு, கர்வம், அகங்காரம் போன்ற சுய சிந்தனைகள் மேலாங்குகின்றன. அந்த நேரத்தில் அவருடைய பணிவு அவரை விட்டு நீங்குகிறது. இந்த பணிவு அவரை விட்டு நீங்குவதன் சுருக்கமே 'ஈகோ".எனப்படுகிறது.
சில புதுப் பணக்காரர்களை பார்த்திருப்பீர்கள் அதற்கு முன்பு அனைவரையும் மதித்து அன்போடு பழகியவர்கள் பணம் வந்தபின் தான் என்னும் கர்வத்துடன் மற்றவருடன் ஒட்டாமல் ஆணவத்துடன் பழகுவார்கள்.
அவர்கள் பலவீனத்தை யாராவது சுட்டிக்காட்டினால் அந்த ஈகோ விழித்துக் கொண்டு மோதலுக்கு தயாராவார்கள். தன்னைவிட மற்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்ற எண்ணம் ஏற்படும்.
இந்த ஈகோ பல விஷயங்களில் முரண்டு பிடிப்பது, முட்டுக்கட்டை போட்டு இழுத்தடிப்பது போன்றவைகளை வழக்கமாக்கி வெற்றியை நெருங்கவிடாமல் செய்துவிடும். ஆகவே ஈகோவை முற்றிலும் விலக்கி வெற்றிக்கு வித்திடுவோம்.