காலம் கனியும் வரை காத்திருப்பது வெற்றிக்கு அவசியம்!

Motivation Image
Motivation Imagepixabay.com

ந்த மாமரத்தில் குரங்கு ஒன்று அமர்ந்து மாம்பழங்களை சுவைத்துக் கொட்டைகளை கீழே போட்டது. திடீரென்று அதற்கு ஒரு ஞானோதயம் வந்தது. மனிதர்கள் கொட்டையை விதைத்துதானே மரங்களை வளர்க்கிறார்கள். அதே போல் நாமும் இந்த கொட்டையை விதைத்து மரம் வளர்த்தால் இன்னும் நிறைய மாம்பழங்களை சாப்பிடலாமே என்று நினைத்து மாம் பழத்தின்  கொட்டையை மண்ணில் விதைத்தது.

மண்ணில் விதைத்து தண்ணீரை ஊற்றிய பிறகு அடுத்த நாள் வந்து அது முளைத்திருக்கிறதா என்று பார்த்தது. முளைக்காததால் அதைத் தோண்டி எடுத்து அந்த கொட்டையை பார்த்துவிட்டு மறுபடியும் மண்ணில் போட்டு புதைத்து விட்டது.

அடுத்த நாள் வந்தது. அதிலே ஏதாவது முளை விட்டிருக்கிறதா என்று பார்த்தது. எதுவுமே இல்லை என்றதும் கொட்டையை சரியாகத்தானே வைத்தோம் என்று கூறி மண்ணைப் பறித்து அந்த கொட்டையை எடுத்து  பார்த்துவிட்டு மீண்டும் அதை மண்ணில் புதைத்தது.

இப்படியே சில நாட்கள் சென்றது.
ஒரு கட்டத்தில் குரங்குக்கு மிகவும் கோபம் வந்து அந்த குழியைப் பறித்து கொட்டைகளை எடுத்து தூக்கிப் போட்டு ரகளை செய்து விட்டு "சீ போ எனக்கு பழமும் வேண்டாம் மரமும் வேண்டாம்" என்று கோபத்துடன் சொல்லிவிட்டு போய்விட்டது.

இந்த குரங்கு போலத்தான் நாம் சில சமயங்களில் சில விஷயங்களுக்காக காத்திருக்காமல் அவசரப்பட்டு அந்த விஷயத்தையே தோல்வியில் முடியும் அளவுக்கு விட்டு விடுவோம்.


காத்திருப்பவர்களே வெற்றியை சுவைக்கிறார்கள். காத்திருக்கும் பொறுமையின்றி விலகியவர்களுக்கு தோல்வியே மிஞ்சும்.


சுவாமி விவேகானந்தர் தனது இறுதி நாளில் தனது சேவையாளரிடம் இறுதியாக சொன்ன வார்த்தைகள் இதுதான். 'தியானம் செய். நான் அழைக்கும் வரை காத்திரு'  எத்தனை சத்தியமான வார்த்தைகள்.
நாம் வாழ்க்கையில் பல்வேறு  அனுபவங்ளை எதிர் கொள்கிறோம். அவற்றில் காத்திருப்பு என்பது மிக அவசியமாகிறது. பத்து மாதம் காத்திருந்தால்தான் புது உயிர் பூமிக்கு வருகிறது. பருவம் அறிந்து காத்திருந்தாலே நிலத்தில் விதைத்த விதை உணவாக விளையும். சில மணி நேரக் காத்திருப்புக்கு பின்தான் பசியாற அறுசுவை உணவு கிடைக்கிறது. சிக்னலில்  பச்சை விளக்கு காட்டும் வரை காத்திருப்பதுதான் பாதுகாப்பு தருகிறது. இப்படி வாழ்க்கை முழுவதும் பலவித  காத்திருப்புகளால் நிறைந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
சூப்பர் சுவையில் பீன்ஸ் பருப்பு உசிலி!
Motivation Image

காத்திருக்கும் நேரத்தைத் தவிர்த்து பொறுமையின்றி செய்யும் எந்த செயலும் திருப்தியைத் தராது. நாம் வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களில் விரும்பிக் காத்திருக்க பழகினால் மட்டுமே எதிலும் நிறைவு நமதாகும். பசிக்கும் வரை காத்திருக்கப் பழகினால் உடல்நலம் பெறலாம். வைத்த செடி மரமாகும் வரை காத்திருந்தால் கனிகளை ருசிக்கலாம். பிறர் கோபம் மட்டுமல்ல நம் கோபமும் தணியும் வரை காத்திருந்தால் தெளிவு பிறக்கும்.

எதிலும் எங்கும் அவசரம்  நம்மை மட்டுமல்ல நம் சந்ததியையும் அழிக்கும் ஆயுதம் ஆகிவிடும். நமது அன்பிற்கும் அக்கறைக்கும் எத்தனை உள்ளங்கள் காத்திருக்கின்றன என்று நாம் அறிவதில்லை. நாம் நிதானமாக இதற்கெல்லாம் காத்திருந்தால்
நம் உயிரும் நம்மை விட்டுப் பிரியும் வரை அவசரமின்றி காத்திருக்கும்.

வெற்றி வேண்டும் எனில் காத்திருக்கப் பழக வேண்டும். காத்திருக்கப் பழகினால் வாழப் பழகுவோம். எல்லையற்ற அமைதி, ஆற்றல், அபரிமிதம் நமக்காக காத்திருப்பதை உணர்வோம். இறை ஆற்றல் காத்திருப்பினால் வசமாகும். இது நாம் நிதானமாக அனுபவித்துச் செல்லவேண்டிய வாழ்க்கைப் பாதை. ஓடித் தீர்க்க வேண்டிய ஓட்டப் பந்தயமல்ல. இதைப் புரிந்து தக்க சமயம் வரும் வரை காத்திருந்தால்  வெற்றிக் கோப்பையும் கைவரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com