
நாம் எல்லோருமே இரண்டு மனங்களை வைத்திருக்கிறோம். ஒரு மனம் - அகங்காரம் ஆசை, கோபம், அச்சம் ஆகிய உணர்வுகளைப் பல்வேறு விகிதங்களில் பதிவு செய்து நாம் உருவாக்கிக் கொண்டிருக்கும் சிறிய மனத்தையே நாம் உண்மையான மனம் என்று கருதிக்கொண்டிருக்கிறோம்.
இரண்டாவது மனம் - நம்மோடு வந்த பிரபஞ்ச மனம்
நாம் வெறும் சாட்சியாக நின்று, எண்ணங்களற்று பற்றற்று ஒன்றைக் கவனிக்கும்போது அது செயல்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் நம் வீட்டிற்குள் எரியும் விளக்கை அணைத்தால்தான் வெளியே பரவி கொண்டிருக்கும் பூரண நிலவொளி அறைக்குள் ஊடுருவ முடியும்
அதைப்போலச் சிறிய மனம் செயல்படாதபோதுதான் பிரபஞ்ச மனத்தை நாம் தரிசிக்க முடியும். பயிற்சி இல்லாமலேயே சிலநேரம் நம் சிறிய மனம் செயல்படாமல் இருக்கின்றது. அப்போதுதான் நம்மையறியாமல் பிரபஞ்ச மனத்திற்குள் பிரவேசித்து நம் எண்ணத்தைக் கூட அடுத்தவர்களுக்குச் சொற்களில்லாமலேயே நாம் உணர்த்தி விடுகின்றோம்.
நாம் தண்ணீர் வேண்டும் என எண்ணும்போதே ஒருவர் தண்ணீர்க் குவளையுடன் நம்மிடம் வருவார். இது எதேச்சையாக நிகழ்ந்தது இல்லை. நம் பிரபஞ்ச மனம் செயல்பட்டிருக்கிறது எனப் பொருள்.
பிரபஞ்சமனம் செயல்படும்போது காலம், இடம் ஆகியவை' மறைந்து விடுகின்றன. பிரபஞ்சமனம் செயல்படும்போது நாம் உச்சக்கட்ட விழிப்புணர்வில் வீட்டில் இருக்கிறோம்.
நாம் சிறிய மனத்தை அமைதிப்படுத்தினால் அது உதிர்ந்துபோகிறது. அப்போது பிரபஞ்சமனம் தன்னறிவாய், தன்னுணர்வாய்ச் செயல்படுகிறது. இந்தப் பெரிய மனம் தனக்குத்தானே அடையும் அனுபவங்கள் மூலம் தன்னையே விரிவுபடுத்திக்கொள்கிறது. இந்தப் பெரிய மனத்தின் விரிவாக்கத்தால் ஏற்படும் இன்பம்தான் பேரின்பம்.
நம் மனம் பெரிதாக விரியும்பொழுதுதான் நம்முடைய உலகமும் விரிவடைகிறது. அப்பொழுது உலகில் உள்ள எல்லாப் பொருட்களும் நமக்குள் ஒரு பகுதியாக ஆகிவிடுகின்றன.
வள்ளலார் ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுவார்.
இரண்டு துறவிகள் ஒரு கிராமத்தின் வழியாகச் சென்று கொண்டிருப்பார்கள். அதில் ஒரு துறவி "அய்யோ!" என்று திடீரென வருத்தப்படுவார்.
உடனே மற்றவர் "என்னாயிற்று?" என்பார்.
"உங்கள் கால்பட்டு ஒரு மண்கட்டி உடைந்துவிட்டதே என வருந்துகிறேன்" என்றாராம். எவ்வளவு பெரிய மனம்!
பிரபஞ்சமனத்தின் விளிம்புகளைக்கூட அனுபவிக்க முடியாத ஆத்மாக்களும் இருக்கிறார்கள்.
நம்மிடம் கருணையையும், அன்பையும் உருவாக்கிக் கொண்டால் நாம் பிரபஞ்சமனத்தை நோக்கி அடியெடுத்து வைக்கிறோம் என்று பொருள்.
ஒருவன் இன்னொருவரிடம் அதிசயத்துடன் கேட்டார்:
"நேத்து உங்க வீட்டுத் தோட்டத்தில் ஒரு பாம்பு இருந்ததாமே! ஆனால் நீங்க அதை அடிக்காம கருணை உள்ளத்தோட நடந்துகிட்டீங்களாமே!"
"ஆமாமாம்! அதுக்குள்ள விஷயம் அவ்வளவு தூரம் பரவிடுச்சா"
"அதெப்படி உங்களுக்கு அவ்வளவு கருணை!"
வேறொன்றுமில்லை அது நல்ல விஷமுள்ள பாம்பா இருந்தது.
விஷமுள்ள பாம்பைக்கூட நீங்க அடிக்கலையா! பெரிய மனசுதான்.
ஏதுக்கு வீணா ஒரு உயிரைக் கொல்லணும். அதனால் நான் அதை நைசா பக்கத்து வீட்டுக்கு விரட்டிவிட்டுட்டேன்.
இப்படித்தான் இரண்டு மனங்களுடன் மனிதர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.