“அவரைப்போல நாம் இல்லையே” இந்த எண்ணத்தை முதலில் மாற்றுங்கள்!

Motivation Image
Motivation ImageImage credit -pixabay.com

வ்வொருவருக்கும் வாழ்நாள் முழுவதும் ஏதாவது ஒரு கவலை இருந்து கொண்டேதான் இருக்கிறது. இருந்து கொண்டேதான் இருக்கும். பணக்காரர்களைப் பார்த்து அவரைப் போல நாம் இல்லையே என்று ஏழைகள் நினைக்கிறார்கள். பிரச்சினைகள் ஏதுமின்றி மகிழ்ச்சியாய் உள்ளவரைப் பார்த்து பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பவர்கள் அவரைப் போல நாம் இல்லையே என கவலைப்படுகிறார்கள். ஆரோக்கியமானரைப் பார்த்து உடல் நலம் குன்றியவர் அவரைப் போல் நாம் இல்லையே என்று கவலைப்படுகிறார்.

ஒரு நாட்டின் இரண்டாவது பணக்காரர் முதல் பணக்காரைரைப் பார்த்து அவரைப் போல நாம் முதல் பணக்காரராக இல்லையே என்று கவலை கொள்ளுகிறார். இரண்டாவது பணக்காரருக்கு எல்லா வசதிகளும் இருக்கின்றன. அவர் நினைத்தால் பணத்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். ஆனாலும் அவருக்கும் ஒரு கவலை இருக்கத்தான் செய்கிறது. ஒரு நாட்டின் முதல் பணக்காரரோ உலகத்தின் முதல் பணக்காரரைப் பார்த்து அவரைப் போல நாம் முதல் பணக்காரராக இல்லையே என கவலைப்படுகிறார். உலகின் முதல் பணக்காரரோ தான் இரண்டாவது பணக்காரனாகி விட்டால் என்ன செய்வது என்று கவலையுடன் நாட்களைக் கழிக்கிறார். ஆக ஏழையானாலும் சரி பணக்காரரானாலும் சரி ஒருவர் மற்றவரைப் பார்த்து அவரைப் போல நாம் இல்லையே என்று கவலைப்படுவது மனித வாழ்க்கையில் இயல்பாகிப் போய்விட்டது.

இயற்கை எப்போதும் மாறாத தன்மையுடன் விளங்குவதாலேயே அது இன்றுவரை பழமையும் பெருமையும் மாறாமல் தலைநிமிர்ந்து நிற்கிறது. இயற்கையைப் போலவே விலங்குகளும் இயல்பான வாழ்க்கை வாழ்கின்றன. சிங்கம் புலியைப் போல வாழ எண்ணுவதில்லை. புலி யானையைப் போல வாழ எண்ணுவதில்லை. ஒருவர் பிறரைப் போல வாழ முயற்சிக்கும் போது பிரச்சினைகள் தோன்றுகின்றன. இதனாலேயே மனிதன் ஏராளமான பிரச்சினைகளை சந்திக்கிறான். விலங்குகள் பெரிய பிரச்சினைகள் ஏதுமின்றி இயல்பாக வாழ்க்கையை நடத்துகின்றன.

அவரைப் போல நாம் இல்லையே என்று ஏங்குவதைப் போலவே அவரை விட நாம் எவ்வளவோ மேல் என்ற எண்ணமும் நமது வாழ்க்கையில் சில சந்தர்ப்பங்களில் தோன்றும். அது எப்போது என்றால் நாம் சிலருடைய வாழ்க்கையைப் பார்த்து அவரைப் போல வாழ்க்கை நமக்கிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்திருப்போம். ஆனால் அவர் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எதிர்பாராதவிதமாக பெரும் பிரச்சினையில் மாட்டிக்கொண்டு இழக்கக்கூடாததை எல்லாம் இழந்து தவித்து வேதனைப்படும்போது நமக்கு ‘அவரை விட நாம் எவ்வளவோ பரவாயில்லை’ என்ற எண்ணம் தோன்றும். உண்மையில் சொல்லப்போனால் மனிதனாய்ப் பிறந்த அனைவருக்கும் ஏதாவது ஒரு பிரச்சினையும் வேதனைகளும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.

இதையும் படியுங்கள்:
பொன்னான 15 புத்தர் மொழிகள்...! வாழ்க்கைக்கான நல்வழி பாடங்கள்!
Motivation Image

கடவுள் புழு பூச்சி முதல் மிகப்பெரிய யானை வரை அனைத்தையும் ஏதோ ஒரு காரணத்திற்காகவே படைத்திருக்கிறார் என்று திடமாக நம்புங்கள். அவரைப் போல நாம் இல்லையே என்று எண்ணி எண்ணி அற்புதமான வாழ்க்கையைத் தொலைக்காதீர்கள். இந்த பூமியில் பிறந்த ஒவ்வொருவரும் பாக்கியசாலிகள். அனைவருக்கும் திறமை இருக்கிறது. அனைவருக்கும் ஆற்றல் இருக்கிறது. அனைவருக்கும் சாதித்து உயரக்கூடிய தகுதி இருக்கிறது. அனைவருமே ஏதோ ஒரு வகையில் சிறந்தவர்கள்தான். இதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

மிகப்பெரிய பணக்காரராய் வாழ்ந்தவர்கள் ஒரே நாளில் பிச்சைக்காரர்களைவிட மோசமான நிலைக்கு வருவதைப் பார்க்கிறோம். அடுத்தவேளை சாப்பாட்டிற்கே வழியில்லாத சிலர் எதிர்காலத்தில் மிகப்பெரிய பணக்காரர்களாய் ஆவதையும் நாம் பார்க்கிறோம். ஒரு ஏழை ஏழையாக இருக்கும்போதே பணக்காரனாய் தன்னை பாவித்து அவனைப் போலவே வாழ விரும்பும் போதுதான் பிரச்சினைகளும் சிக்கல்களும் தோன்றுகின்றன.

அவரைப் போல நாம் ஏன் வாழ்க்கையில் உயரக் கூடாது என்று மட்டும் யோசியுங்கள். சலிக்காது உழையுங்கள். வெற்றியும், நிம்மதியும், புகழும் உங்களைத் தேடி வரும். நாம் நாமாக இருப்போம். புதிதாய் பிறந்து வெற்றிகளைக் குவிப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com