ரயிலில் இரண்டு பயணிகள் பிரயாணம் செய்து கொண்டு இருந்தார்கள். ஒரு பயணி இன்னொருவரைப் பார்த்து, "திருச்சி எப்போது வரும்?" எனக் கேட்டார். உடனே அடுத்த பயணி சொன்னார், "திருச்சி நம்மிடம் வராது, நாம்தான் திருச்சிக்குப் போக வேண்டும்."
இது வேடிக்கையாக சொல்லப்பட்ட விஷயம்போல் தோன்றினாலும் இதற்குப் பின்னே ஒரு பெரிய மனோதத்துவ உண்மை அடங்கி இருக்கிறது. நம்முடைய தேவையினை வெளிப்படுத்தும்போது கூட, அந்தத் தேவை நமக்காக செயல்பட வேண்டும் என்று எண்ணுகிறோம்.
கல்லை நாம் இடித்துக் கொண்டாலும், கல் நம்மை இடித்து விட்டது என்றுதான் சொல்லுகிறோம். குழந்தைப் பிராயத்திலிருந்தே நம்முடைய குறைபாடுகளை நாம் ஒத்துக் கொள்ளாத மனோபாவம் நம்மிடம் உருவாக்கப்பட்டு விடுகிறது. கல் இடித்து விட்டது என்று பெற்றோர்கள் சொன்னார்கள். நம்முடைய ஆழ்மனதில் அது ஆழமாக பதிந்து விட்டது அதையே சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.
குழந்தைகளிடம் 'செய்' என்று நாம் சொல்லுவதை விட 'செய்யாதே' என்று சொல்லுவதுதான் அதிகமாக இருக்கும். எதை செய்யக் கூடாது என்று நாம் குழந்தைகளுக்குப் போதிக்கிறோம். அவற்றின் பாதுகாப்புக்காகவும், நல்ல வழியில் அவை நடக்கவேண்டும் என்பதற்காகவும் இதைச் செய்யாதே, அதைச் செய்யாதே என்று சொல்லுகிறோம். இப்படிச் சொல்லுவதில் தவறு இல்லை ஆனால் செய்யாதே' எனச் சொல்லுகின்றபோது மிகவும் யோசித்துச் சொல்லுவது அவசியம்.
எதிர்மறையாக குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டிய விடியங்கள் இருக்கின்றன. அவற்றை நாம் சொல்லித்தான் ஆகவேண்டும். உதாரணமாக நெருப்பைத் தொடாதே என்கிறோம். நெருப்பின் அருகில் குழந்தை செல்லுவது ஆபத்தானது. அதைச் சொல்லத்தான் வேண்டும்.
வளர்ந்து விட்ட நிலையில் நம்மிடம் மேலோங்கிக் காணப்படுகின்ற பலவகையான குணங்களுக்கு குழந்தைப் பருவத்தில் ஏற்படுகின்ற பதிவுகளே காரணமாகி விடுகின்றன. இந்தக் குணங்கள் எல்லாம் இயற்கையிலேயே நமக்கு அமைந்திருக்கும் குணங்கள் என்று தவறாக எண்ணிக் கொண்டு விடுகிறோம். ஏனெனில் இந்தக் குணங்கள் எப்படி ஏற்பட்டன என்று தமக்குத் தெரியாது. ஆகவே நம்முடைய குணங்களாக அவற்றை ஏற்றுக் கொண்டு இந்தக் குணங்களை மாற்றிக் கொள்ளவே முடியாது என்கிற முடிவுக்கு வந்து விடுகிறோம்.
சமூக உறவில் நாம் மேற்கொள்ளுகின்ற ஒவ்வொரு நிலைக்கும் தம்முடையகுணங்களே காரணமாகின்றன. பெரும்பாலான குணங்கள் குழந்தைப் பருவத்தில் தம்முடைய பெற்றோர்கள் அறிந்தும் அறியாமலும் உருவாக்கிய குணங்களே ஆகும். எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறோம் என்றால் குழந்தைப் பருவ அனுபவம் ஒன்று அதற்குக் காரணமாக இருக்கும்.
எதைப் பார்த்தாலும் பயப்படுகிறோம் என்றால் அதற்கும் குழந்தைப் பருவத்தில் நமக்கு ஏற்படுத்தப்பட்ட ஏதோ ஓர் அச்சம் காரணமாக இருக்கும். முரட்டுத்தனம், எதிர்த்து போதல், மற்றவர்களை அலட்சியப்படுத்துதல், அடுத்தவர் சொல்லுவதை பொருட்படுத்தாது இருத்தல், எவரிடமும் இணங்கிப் போகாமை, ஒதுங்கி இருத்தல், தன்னம்பிக்கைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை, கோழைத்தனம் போன்ற பலவற்றுக்கும். குழந்தைப் பருவத்தில் நமக்கு ஏற்படுகின்ற அனுபவங்களே காரணமாக இருக்கின்றன.
ஆகையால் குழந்தை பருவ பதிவுகளின் விளைவு மேற்கண்டவைகளுக்கெல்லாம் காரணம் என்பதை நாம் புரிந்து கொண்டு இதனை களைய சில சாதாரண பயிற்சிகளை மேற்கொண்டாலே மோசமான குணங்களின் பிடியிலிருந்து நம்மை நாமே விடுவித்துக் கொண்டு விட முடியும்.