
அது ஒரு வகுப்பறை. மாணவர்கள் அனைவரும் வாழ்வியல் நீதிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்று அந்த பள்ளி ஆசிரியர் ஒவ்வொரு வகுப்புக்கும் தனி கவனம் செலுத்தி வந்தார். அதன்படி தன்னம்பிக்கையை ஒவ்வொரு மாணவனும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற என்று தினமும் ஒரு செயல்முறை வகுப்பை நடத்துவது வழக்கம்.
அதன்படி ஒரு டம்ளரில் பாதி அளவு நீரை எடுத்துக் கொண்டார். இரு மாணவர்களை அழைத்தார். அவர்களை நோக்கி "நீங்கள் இப்போது என்ன பார்க்கிறீர்கள்?" என்று கேட்டார். ஒருவன் சொன்னான் "ஐயா தம்ளரில் பாதி அளவு தண்ணீர் நிரம்பி இருக்கிறது" என்று மற்றொருவன் சொன்னான் "அட பாதி டம்ளர் காலியாக இருக்கிறதே" என்று.
இதில் யாருடைய மனோபாவம் எத்தகையது என்று உங்களுக்கு புரிந்திருக்கும். அந்த ஆசிரியர் சொன்னார் "பாதி அளவு தண்ணீர் நிரம்பி இருக்கிறது என்று நேர்மறையுடன் பார்த்த அந்த மாணவன் பிற்காலத்தில் பெரிய வெற்றியாளனாக வருவான்" என்று சொல்லி அவனை பாராட்டினார்.
ஏனெனில் அவன் அந்த டம்ளரில் இருந்த நீரின் குறையை காணவில்லை. நீர் நிறைந்திருந்ததை மட்டுமே பார்த்தான். அடுத்தவனோ காலியானதை மட்டுமே கவனித்து எதிர்மறையாக பேசினான்.
இப்படித்தான் சிலரை கவனித்துப் பார்த்தால் அவர்கள் பேசுவதெல்லாம் எதிர்மறையாகவே இருக்கும். " சே என்ன வாழ்க்கை இது? காலையில எழுந்திருச்சா குழாயில் தண்ணி வரல… பக்கத்து வீட்டுக்காரனோட சண்டை.. ஸ்கூல் பஸ் ஒழுங்கா வரல.. அட அந்த காய்காரன் கிட்ட காய் எல்லாம் ஒழுங்கா இருக்கா?" இப்படி காணும் எல்லா விஷயங்களிலும் எதிர்மறையை காண்பவர்கள் எப்படி வெற்றியை பெறுவார்கள்? அவர்களின் அந்த எதிர்மறையான எண்ணமே அவர்கள் முன்னேறுவதை தடுக்கும் காரணியாக மாறிவிடுகிறதே.
நமக்குள் ஒரு குற்ற உணர்வு எப்போதுமே இருந்து கொண்டிருக்கும். நாம் செய்வது தவறோ அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்று அந்த நாலு பேர் என்ன சொல்லி விடுவார்கள் என்ற அச்சத்தில் நம் வாழ்க்கையை முழுவதுமாக தொலைத்து விடுகிறோம். ஆனால் அந்த நான்கு பேர் என்பவர்கள் நம்மை கவனிப்பதில்லை என்பது வேறு விஷயம். இப்படித்தான் நம்முடைய சிந்தனை எதிர்மறையாக இருந்தால் எப்படி நம்மால் முன்னேற முடியும்?
தனது சிறகுகள் சுமை என்று பறவை நினைத்து இருந்தால் அது வானில் பறந்திருக்க முடியாது. அதே போல்தான் ஒரு சிறு எறும்பும். அதன் உருவத்தைவிட பெரியதாக தனது உணவுத்துகளை எடுத்துக் கொண்டு செல்லும்போது நம்மை வியக்க வைக்கும். ஏனெனில் அடுத்த நொடி அது நம் கால் பட்டு இறக்கலாம் என்ற அச்சமின்றி தனக்கான உணவுத்துகளை அது சுமந்து செல்கிறது வாழ்வோம் எனும் நேர்மறை எண்ணத்துடன்.
நிச்சயதன்மையும் நம்பிக்கையும் கொண்டது நேர்மறை எண்ணம். எதிலும் நல்லதை மட்டுமே அது காண்கிறது. வளர்ச்சி என்பது மாற்றத்தை அடிப்படையாய் கொண்டது என்று நம்புகிறது.
நேர்மறை எண்ணம் கொண்டவர் தம்மை பற்றி ஒருபோதும் தாழ்வாக எண்ணுவதில்லை. தம்முடைய திறமைகளை குறைத்து மதிப்பிட்டு வைத்துக் கொள்வதில்லை. என்னால் முடியும் என்ற எண்ணத்தோடு தான் அவர்கள் செயலில் இறங்குகிறார்கள்.
ஆகவே உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாமல் எந்த சூழலிலும் எங்கும் எதிலும் நிறையை மட்டுமே கண்டு செயலில் இறங்கினால் வெற்றியும் உங்கள் மனதை நிறைக்கும். இது உறுதி.