நமது வாழ்க்கையின் முன்னேற்றம் யாரிடம் இருக்கிறது? இந்த கேள்வியை உங்களுக்குத் தெரிந்தவரிடம் கேட்டுப் பாருங்கள். எல்லோருமே யாரையாவது ஒருவரை கைகாட்டுவார்கள். ஆனால் ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நமது வாழ்க்கையின் முன்னேற்றம் யாரிடமும் இல்லை. நம்மிடம் மட்டுமே இருக்கிறது.
நமது வாழ்க்கை முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லாமல் பின்தங்கிப் போவதற்கு முக்கியமான காரணம் என்ன தெரியுமா? நாம் ஒரே குறிக்கோளோடு அடுத்தது என்ன அடுத்தது என்ன என்று யோசித்து அடியெடுத்து வைக்கவேண்டும். இத்தகைய ஒவ்வொரு அடியும் உங்களை உயர்த்திக் கொண்டே போகும். ஆனால் நாம் என்ன செய்கிறோம்? அடுத்தவரை பின்தொடர்ந்து கொண்டே செல்கிறோம். அடுத்தவர் என்ன செய்கிறார். அடுத்தவர் என்ன வாங்குகிறார் என்பதைத் தெரிந்து கொள்ளுவதே நமது வாழ்வின் இலக்காகிப் போகிறது.
அடுத்தவர் கார் வாங்கினால் நாமும் அதேபோல ஒரு காரை வாங்க வேண்டும் என்று முடிவு செய்து அதை நோக்கியே பயணிக்கிறோம். ஒருவர் வாழ்க்கை போல மற்றவர் வாழ்க்கை இல்லை. இது நிச்சயம். அடுத்தவருக்கு கார் வாங்கியே ஆகவேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டிருக்கலாம். அல்லது அவருக்கு தேவைக்கு அதிகமான வருமானம் இருக்கலாம். அதனால் அவர் கார் வாங்கலாம். நாமும் அதைப் பார்த்து கார் வாங்க வேண்டும் என்று முடிவு செய்வது சரியல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கார் என்பது ஒரு உதாரணம்தான்.
அடுத்தவர் தனது மகனை மருத்துவராக்க விரும்பி அதற்காக முயற்சிகளை மேற்கொள்ளுவார். அவருடைய மகன் சிறப்பாக படிப்பவனாக இருக்கலாம். அல்லது அவரிடம் நிறைய பணம் இருக்கலாம். அவருடைய மகனுக்கு மருத்துவத்தில் அதிக விருப்பம் இருக்கலாம். ஒவ்வொருவருடைய வாழ்க்கைச் சூழலும் வெவ்வேறு என்பதை நாம் உணர வேண்டும். உங்கள் மகனுக்கு மருத்துவம் படிப்பதில் விருப்பம் இல்லாமல் இருக்கலாம். அவன் வேறு ஏதாவது ஒரு துறையில் பயின்று அதில் சிறப்பாக முன்னேற திட்டம் போட்டிருக்கலாம். ஆனால் அடுத்தவர் மகன் மருத்துவம் படிக்கப் போகிறான் என்பதற்காக உங்கள் மகனும் மருத்துவராக வேண்டும் என்று முடிவு செய்யாதீர்கள். இதனால் உங்கள் மகன் படிப்பில் ஆர்வத்தை இழந்து அவன் வாழ்க்கையின் முன்னேற்றம் தடைபடலாம்.
நாம்தான் அடுத்தவருக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டுமே தவிர அடுத்தவரை நாம் நமது முன்னுதாரணமாக எண்ணிக் கொண்டு நமது வாழ்க்கையை பின்னோக்கி அழைத்துச் செல்லக்கூடாது. நமது வாழ்க்கைப் பயணம் தெளிவான நீரோடையைப் போல இருக்க வேண்டும். ஆற்று நீரானது தனது பாதையில் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருக்கும். அதுபோலவே நீங்களும் உங்கள் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு திட்டம் போட்டு முன்னேறிக் கொண்டே செல்ல வேண்டும்.
அடுத்தவர் என்ன செய்கிறார் அடுத்தவரிடம் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுவதில் உங்கள் நேரத்தைச் செலவிட்டு அவர் போலவே நாமும் வாழ வேண்டும். அவர் செய்வதை நாமும் செய்ய வேண்டும் என்று நினைத்து உங்கள் முன்னேற்றத்திற்கு நீங்களே தடையாக இருந்து விடக்கூடாது.
அடுத்தது என்ன என்பது படிக்கல். அடுத்தவரிடம் என்ன என்பது தடைக்கல். உங்களுக்கு எது வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.