
பயந்து பயந்து எத்தனை நாள்தான் வாழாமல் இருக்கின்றது. இந்த ஐந்து பயங்கள்தான் நம்மை வாழவே விடாமல் நம் திறனை வளரவும் விடாமல் செய்கின்றது.
தோல்வியைக் கண்டு பயம்
‘இந்தச் செயலை செய்தால் அதனால் என்ன நடக்குமோ?’ என்று பயம்தான் பலருக்கு இருக்கும். ஆனால், ஒரு சிலருக்கு அந்தச் செயலை ஆரம்பிப்பதே பயமாக இருக்கும். செயலை ஆரம்பிப்பதற்கு முன்பே நாம் தோற்று விடுவோமோ என்று பயம். இதைச் செய்தால் அவர்கள் என்ன சொல்வார்கள்? அவர்கள் என்ன நினைப்பார்கள்? என்று பயந்தே அதனால் ஏற்படும் தோல்வியை நினைத்து அவர்கள் அந்தச் செயலை தொடங்காமலேயேகூட இருப்பார்கள்.
நிராகரிப்பைக் கண்டு பயம்
ஒரு தனியார் நிறுவனத்தில் புதிதாக ஒரு ப்ராஜெக்ட் எடுத்து அதனைத் தனிநபராகச் செய்து முடித்தபின்னர் அல்லது செய்துகொண்டிருக்கும்போதே நாம் ஒரு செயலை கஷ்டப்பட்டுச் செய்தால் அது மற்றவர்கள் அங்கீகரிப்பார்களா? அல்லது நிராகரித்து விடுவார்களா? என்ற பயத்தால் அந்தச் செயலைக் கைவிட்டு. அதைச் செய்யத் தொடங்கவும் மாட்டார்கள் அல்லது செய்ததைப் பாதியிலேயே விட்டுவிடுவார்கள்.
மாற்றங்களைக் கண்டு பயம்
வாழ்க்கையில் சில வாய்ப்புகள் நம்மைத் தேடி வரும். அந்தத் தருணத்தில் என்னிடம் பணம் இல்லை, அல்லது அதற்கான தகுதி எனக்கு இல்லை, இந்தச் செயலை நான் செய்தால், நன்றாக வந்தால் என் குடும்பம் நன்றாக இருக்கும், இல்லை என்றால் நாங்கள் எப்படி இருப்போம் என்று எனக்குத் தெரியாது என்று பல காரணங்களைக் கூறி வந்த வாய்ப்பை தவிர்த்துவிடுவது. தனக்கான ஒரு சுய பாதுகாப்பு வட்டத்தை ஏற்படுத்தி, அதைத் தாண்டி வந்தால் அதனால் வரும் மாற்றங்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று பயந்து அதே வட்டத்துக்குள் வாழ்வது.
அடுத்து என்ன நடக்கும் என்ற பயம்
ஒரு பேருந்திலோ, வாகனத்திலோ அல்லது நடந்தோ செல்லும் பொழுது எதிரில் வரும் வாகனம் நம் மீது மோதினால் என்ன ஆகும் என்பது போன்ற எதிர்மறையான எண்ணங்களை சிந்தித்துக்கொண்டே இருப்பார்கள் ஒரு சிலர். இந்தச் செயலை செய்தால் இதனால் என்ன விளைவு நடக்கும். அப்படி நடந்தால் என்ன ஆகும். இப்படி நடந்தால் என்ன ஆகும் என்று அடுத்து என்ன நடக்கும் என்ற பயத்திலே வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
வெற்றிகளைக் கண்டு பயம்
ஒரு சில மக்கள் வெற்றிகளைக் கண்டு கூட அச்சப்படுகிறார்கள். வெற்றியால் ஒரு நிலையை அடைந்தபின்னர் அந்நிலையிலிருந்து மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி விடுவோமோ? என்று ஒரு பயம் அவர்களை விடாமல் துரத்திக்கொண்டே இருக்கும். இதனால் அந்த வெற்றியைக்கொண்டாடாமல் அந்தப் பயத்திலேயே வாழ்ந்துகொண்டிருப்பார்கள்.
இந்த 5 பயங்களைத் தாண்டி வாழ்க்கையில் ஒரு அடி எடுத்து வைத்துப்பாருங்கள். பயங்களே உங்களைக் கண்டு பயப்படும்.