
வெற்றி பெற விரும்பும் மனிதர்களுக்கு உதவும் 7 முக்கியமான காரணிகளைப் பற்றி இநதப் பதிவில் பார்ப்போம்.
1. தன்னம்பிக்கை;
தன்னம்பிக்கை ஒரு மனிதனின் மிகப்பெரிய பலம். சிறந்த ஆயுதம். தன் மீது நம்பிக்கை இல்லாத மனிதனால் எதுவும் சாதிக்க முடியாது. தன்னுடைய லட்சியத்தை அடைவதற்கும் இலக்குகளை சரியாக பின்பற்றி செல்வதற்கும் ஆபத்துகளை எதிர்கொள்வதற்கும் ஒரு மனிதன் தன்னை நம்புவது முக்கியம். தன்னம்பிக்கை உள்ள மனிதர் தோல்விகள் மற்றும் பின்னடைவுகளில் இருந்து மீண்டு வரும் வந்துவிடுவார்.
தன்னம்பிக்கை நேர்மறையான கண்ணோட்டத்தைத் தருகிறது. இதனால் படைப்பாற்றல், உற்பத்தி திறன் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வு மேம்பாடு ஆகியவை கிடைக்கும். இவை அனைத்தும் வெற்றியை நோக்கிய பாதையில் இட்டுச் செல்லும்.
2. ஆரோக்கியம்;
நல்ல உடல் ஆரோக்கியம், ஒரு மனிதனின் ஆற்றல் அளவுகளை அதிகரித்து உற்பத்தி திறனையும் அதிகரிக்கிறது. அதே சமயத்தில் மன ஆரோக்கியமும் மிக முக்கியமானது. உறவுகளை பேணுவதற்கும் நட்பு வட்டத்தை சரியான முறையில் பாதுகாப்பதற்கும் பணியிடத்தில் சகஊழியர்களுடன் நல்லுறவு பேணுவதற்கும் மன ஆரோக்கியம் மிக முக்கியம். மேலும் மிக முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு உணர்ச்சி நிலைத்தன்மை அவசியம்.
இவை அத்தனைக்கும் அடித்தளமாக அமைவது மன ஆரோக்கியம். எனவே ஒரு மனிதர் உடல் ஆரோக்கியத்துடன் சேர்த்து மன ஆரோக்கியத்தையும் சிறப்பான முறையில் பராமரிப்பது மிக அவசியம். உடற்பயிற்சி, சீரான உணவு, போதுமான தூக்கம், யோகா, தியானம் போன்ற தளர்வு நுட்பங்கள் மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைக்கும்.
3. ஆதரவு அமைப்பு;
தன்னைச் சுற்றிலும் நல்ல நேர்மறை எண்ணங்களை உடையவர்கள் மற்றும் நேர்மறையான செயல்பாடுகளைக் கொண்டவர்களை நண்பர்களாக ஆதரவாளர்களாக வைத்திருப்பது மிக முக்கியம். ஏனென்றால் சவாலான காலங்களில் வலுவான உறவுகள் உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்குகின்றன.
மேலும், அர்த்தமுள்ள தொடர்புகள் புதிய வாய்ப்புகள் மற்றும் ஒத்துழைப்புகளுக்கு வழிவகுக்கும். பலதரப்பட்ட மக்களிடம் தொடர்புகொள்வது அனுதாபத்தை வளர்க்கவும் வெவ்வேறு கண்ணோட்டங்களை புரிந்து கொள்ளவும் உதவுகிறது. நம்பிக்கையும் புரிதலையும் வளர்க்க மற்றவர்கள் சொல்வதை கவனமாக கேட்க வேண்டும்.
4. நோக்கம் மற்றும் ஆர்வம்;
வெற்றி பெறவேண்டும் என்கிற உயர்ந்த நோக்கம் இருக்க வேண்டும். மேலும் அதில் செயல்படும் ஆர்வம் எப்போதும் இருக்க வேண்டும். ஆர்வமுள்ள மனது ஒருவரை உந்துதலாகவும் ஈடுபாட்டுடனும் வைக்கும். ஆர்வமுள்ள நபர்கள் சவால்களை எதிர்கொண்டு விடாமுயற்சியுடன் போராடுவார்கள்.
5. நிபுணத்துவம்;
தன்னுடைய துறையில் நிபுணத்துவத்தை வளர்த்துக் கொள்வது மிகவும் முக்கியம். இது மரியாதையையும் வளர்ச்சியையும் அங்கீகாரத்தையும் பெற்றுத்தரும். தொடர்ச்சியான கற்றல் மற்றும் முன்னேற்றம் தொழில் முன்னேற்ற வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும். தன்னம்பிக்கையையும் திருப்தியையும் அதிகரிக்கும்.
6. தனிப்பட்ட திறன்கள்;
தனிப்பட்ட திறன்களை வளர்த்துக்கொள்வது வெற்றிக்கு முக்கியமான ஒரு காரணியாக அமைகிறது. தான் எதில் சிறந்த விளங்குகிறோம் என்பதில் தெளிவான அறிவும் புரிதலும் இருக்கவேண்டும். அவற்றை செம்மைப் படுத்திக் கொண்டு முயற்சியில் இறங்க வேண்டும். பல்வேறு நிபுணர்களுடன் தொடர்புகொண்டு புதிய நுண்ணறிவுகளையும் கண்ணோட்டங்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
7. மீள் தன்மை;
முயற்சிகளில் சவால்கள் போராட்டங்கள் இருக்கக்கூடும். அவற்றை நல்ல ஆற்றலுடன் எதிர்கொள்ள வேண்டும். தோல்விகள் மற்றும் பின்னடைவுகளை சந்திக்கும்போது உறுதியான நெஞ்சத்துடன் அவற்றிலிருந்து மீண்டு வரவேண்டும். மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளும் திறன் இருப்பவர்கள் இலக்குகளை நோக்கி தொடர்ந்து முன்னேறுகிறார்கள்.
தகவமைப்புத் திறன் கொண்ட நபர்கள் புதுமைகளைப் புகுத்தி புதிய தீர்வுகளை கண்டறிந்து விடுவார்கள். சவால்களையும் பின்னடைவுகளையும் அச்சுறுத்தல்களாக கருதுவதற்குப் பதிலாக வளர்ச்சிக்கான வாய்ப்புகளாகக் கருதவேண்டும். கடினமான காலங்களில் உணர்ச்சி ரீதியான மீள் தன்மையை பராமரிக்க முயற்சி எடுக்கவேண்டும்.