நாம் ஏன் வித்தியாசமாக சிந்தித்து செயல் பட வேண்டும்? அதனால் நமக்கு என்ன பயன்?
மற்றவர்களிடம் இருந்து நாம் மாற்றி யோசிக்கின்ற முறையைத்தான், இங்கே வித்யாசமான சிந்தனை என்கிறோம். இதனால் கிடைக்கும் பயன்கள் ஏராளம். இதன் சிறப்பை பற்றி விவரிக்க இந்த ஒரு பதிவு போதாது.
இந்த சிந்தனை குறித்து யோசிக்கும் பொழுது , எல்லோரும் ஒரு வழியினில் பயணப்படும் வேளையில், நாம் வேறு வழியில் பயணம் செல்ல வேண்டுமென அர்த்தம் கொள்ளக்கூடாது.
ஒருவேளை, எல்லோருக்குமான அந்த வழி போதுமானதாக இல்லை எனும் பொழுதோ .... அல்லது வேறு வழியில்லாமல் அதை அவர்கள் உபயோகிக்கின்றார்கள் என்கிற பொழுதோ ... இந்த சிந்தனையை பயன்படுத்தலாம். அங்கே ஒரு மாற்று வழியை கண்டுபிடிக்க, ஒரு மாறுபட்ட சிந்தனையை உபயோகிக்க தேவையான உத்தி இதுவென்று சொல்லலாம் .
எந்த ஒரு விஷயத்திலும் நீங்கள் வித்தியாசமாக சிந்திக்கும் போது அல்லது செயல்படும் பொழுது… நீங்கள் மற்றவர்களின் கவனத்தை கவர ஆரம்பிக்கிறீர்கள்.!
பத்தோடு பதினொன்னு என்பது போலவோ, ஆட்டுமந்தை கூட்டம் போல் சுய சிந்தனை இன்றி மற்றவரை சார்ந்தோ அல்லது எடுப்பார் கைப்பிள்ளையாக நீங்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தால்... உங்களை நல்லவர் என்றோ, நமக்கு வாய்த்த நல்ல அடிமை இவரென்றோ அல்லது அப்பாவியெனவோ மற்றவர்களை நினைக்க வைக்கலாம் .
ஆனால் அதே சமயம், உங்கள் வாழ்வில் மெச்சத்தகுந்த ஒரு நல்ல முன்னேற்றம் கிடைக்குமா என்பது சந்தேகமே.!?
ஆறறிவுள்ள, சிந்திக்க தெரிந்த மனிதர்கள் செம்மறி ஆடுகள் போல செயல்படுவது என்பது , இறக்கைகள் இருப்பது பறப்பதற்காக என்பதை அறியாத பறவை ஒன்று , மற்ற விலங்குகளை பார்த்து சிரமப்பட்டு நடந்து சென்று இரையை தேடி உண்பதற்கு ஒப்பானது ஆகும்.
நீங்களாக சிந்தித்து, நீங்களாக செயல் படும் பொழுது... உங்கள் திறமை மீது உங்களுக்கு நம்பிக்கை பிறக்கும். மற்றவர்களை சார்ந்து வாழும் போது தன்னம்பிக்கை இல்லாமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது.
பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கை என்று யாருக்கும் இல்லை . அதே போல்.. தினசரி வாழ்க்கையும் ஒரே மாதிரி இருக்கும் என்றும் சொல்வதற்கு இல்லை. ஆக, மாறிக்கொண்டே இருக்கும் இந்த மனித வாழ்வில், மாற்றி யோசிக்க வேண்டியது அவசியமாகிறது.
"ஒரு பிரச்சனையை உருவாக்கிய அதே மனநிலையில் இருந்து கொண்டே அதற்கு தீர்வு காண முடியாது. எனவே ஒரு சிக்கலைத் தீர்க்க, முதலில் அதைத் வேறு தெளிவான மனநிலையில் பார்க்க வேண்டும்." என்கிறார் மேலை நாட்டு அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
நீங்களும் வெற்றி பெறலாம் (YOU CAN WIN) என்ற புத்தகத்தில் எழுத்தாளர் ஷிவ் கேரா சொல்வது போல,
"வெற்றியாளர்கள் வெவ்வேறு விஷயங்களைச் செய்ய மாட்டார்கள், அவர்கள் செய்ய வேண்டியதை வித்தியாசமாக செய்கின்றார்கள் - Winners don't do different things. They do things differently!"
அதனால் எந்த ஒரு செயலில் ஈடுபடும் போதும்...வித்தியாசமாக சிந்தித்து செயல்படுங்கள். கடுமையாக செய்து முடிக்க வேண்டிய ஒன்றை, எளிதாக மற்றும் செலவு குறைவாக (எளிமையாக) செய்ய வேண்டுமெனில் நாம் மாற்றி யோசிக்க வேண்டும் .
முன்பு இருந்த வானொலி பெட்டி, TV என்னும் தொலைகாட்சி பெட்டி மற்றும் வீடியோ, டேப்ரிக்கார்டர் போன்றவை எல்லாம், இன்று மாறி விட்டது. வேறு வடிவத்தில் அதே வசதியை பயனர்கள் அனுபவிக்கிறார்கள். இப்போது கைபேசி எந்த அளவில் ... எந்தெந்த வழிகளில் மனிதர் வாழ்வில் உபயோகப் படுகிறது என்பதை பார்க்கிறீர்கள்.
இவையெல்லாம் எப்படி இப்படி நமக்கு தகுந்தது போல மாறியது?!.
'இருப்பதை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ்ந்து விடாமல்... மேலும் மேலும் வித்தியாசமாக சிந்தித்து மாற்றி அமைக்க நினைத்து, சிலர் செயல் பட்ட காரணத்தால் மாற்றியமைக்க பட்டவை'.
ஒரு பிரச்சனையை சரி செய்ய முயலும் போது அதை ஒரு இடையூறு, தொல்லை என்று நினைத்து அணுகுவதை விட, அதை உங்களுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு என்றும் ... இதன் மூலமாக எதையோ ஒன்றை சாதிக்க போகிறீர்கள் அல்லது கற்றுக்கொள்ள போகிறீர்கள் ...என்றும் நினைக்க வேண்டும்.
நாம் எந்த விதமான சோதனையான சூழ்நிலையில் இருந்தாலும் , நம்முடைய வித்தியாசமான சிந்தனை மற்றும் செயல்களே, நாம் தொடர்ந்து முன்னேறவும், சாதிக்கவும் உறுதுணையாக இருக்கின்றது.
இதை உணர்ந்து செயல்படுங்கள்.