
எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருப்பது என்பது ஒருவருடைய அன்றாட வாழ்க்கையில் ஆர்வம் இல்லாததையும், செயலற்ற தன்மையையும் குறிக்கும். எதிலும் ஈடுபாடு இல்லாமல் வாழ்க்கையை ஓட்டுவது சலிப்பை உண்டாக்கும். சிலர் வாழ்க்கையில் எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருப்பார்கள். வாழ்க்கையில் எந்த ஒரு தேடலோ, முயற்சியோ இன்றி இருப்பார்கள்.
காரணம் அதற்கான நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்படாமல் இருந்திருக்கலாம். அவர்களுக்கு வாழ்க்கை சொகுசாக அமைய யார் மூலமோ அல்லது எதன் மூலமோ வாய்ப்புகள் அமைந்து விடுவதால் சிலர் எதிலும் ஈடுபாடு கொள்ளாமல் இருப்பார்கள். இவர்களை ஒரு வகையில் கொடுத்து வைத்தவர்கள் என்று சொன்னாலும் இது சரியான போக்கு கிடையாது.
இன்னும் சிலர் வாழ்க்கையில் நிறைய ஏமாற்றங் களையும், துன்பங்களையும் சந்தித்து நொந்து போனவர்களாக இருப்பார்கள். இதனால் வாழ்க்கை வெறுத்துப்போய் எந்த விஷயத்திலும் எந்தவிதமான ஈடுபாடும் காட்டாமல் இருப்பார்கள். வேலை அல்லது வாழ்க்கைச் சூழல் ஒருவரது ஆர்வமின்மைக்கு காரணமாக இருக்கலாம். இதிலிருந்து வெளிவருவதற்கு முயற்சிகள் எடுக்க வேண்டியது அவசியம். இதற்கு முதலில் நமக்கு பிடித்த விஷயங்களில் ஈடுபடுவதும், இலக்குகளை நிர்ணயித்து அதை நோக்கி செயல்படுவதும் நல்ல பலனைத்தரும்.
எதிலும் ஈடுபாடு வருவதற்கு நமக்கு மகிழ்ச்சியைத் தரும் விஷயங்களில் நேரத்தை செலவழிக்கலாம். பிடித்த இசையை கேட்பது, பிடித்த இடங்களுக்கு சென்று வருவது, பிடித்த வேலையை செய்வது, ஆர்வத்தைத் தூண்டும் விஷயங்களில் ஈடுபடுவது என்று நம்மை முதலில் சிறிது சிறிதாக நடைமுறை வாழ்க்கையில் ஈடுபடுத்திக் கொண்டால் போதும். சிறிது காலத்திலேயே நம்மால் எல்லா விஷயங்களிலும் ஈடுபாடு காட்ட முடியும். அன்றாட வாழ்க்கையில் சலிப்பு ஏற்படுவது என்பது இயல்பானது தான். புதுப்புது விஷயங்களை முயற்சிப்பதன் மூலம் நம்மால் வாழ்வில் மீண்டும் ஆர்வத்தையும், ஈடுபாட்டையும் கொண்டுவர முடியும்.
முக்கியமாக தனிமை என்பது நம்மை செயலற்றவராக ஆக்கிவிடும். எனவே நண்பர்களுடனும், உறவினர் களுடனும் தொடர்பில் இருப்பதும், சமூக செயல் பாடுகளில் பங்கேற்பதும், புதுப்புது விஷயங்களை கற்றுத் தெளிவதும், புதிய நபர்களை சந்திப்பதும் நம்மை எப்போதும் சுவாரஸ்யப்படுத்தும். தோல்வி, ஏமாற்றங்கள் போன்றவை நம்மை விரக்தி நிலைக்கு கொண்டு சென்று எதிலும் ஈடுபாடு கொள்ள முடியாமல் இருக்க வைக்கும்.
அதனால் நாம் தோல்விகளையும், வருத்தங்களையும், ஏமாற்றங்களையும் மனதில் ஏற்றிக்கொள்ளாமல் அவற்றை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, அவற்றைக் கடந்து செல்வதற்கான வழியைத்தான் தேடவேண்டும். அப்போதுதான் வாழ்க்கையில் சலிப்பு ஏற்படாமல் ஈடுபாடு உண்டாகும்.
சில சமயங்களில் நம் உடல் நல பிரச்னைகள் காரணமாகவும் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு இல்லாமல், எதிலும் ஈடுபாடு கொள்ளாமல் இருக்கலாம். இதற்கு தகுந்த மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று உடல் நலத்தை பேணி காப்பது அவசியம். அத்துடன் தினமும் மூச்சுப் பயிற்சி, தியானம், நடைப்பயிற்சிகள் செய்து உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் வாழ்க்கை இனிதாகும்.
ஆரோக்கியமான உணவும், போதுமான தூக்கமும் நம் உடல் மற்றும் மனநிலையை மேம்படுத்தி வாழ்க்கையை சுவாரசியமாக அனுபவிக்கத் தூண்டும். எல்லா விஷயங்களிலும் ஈடுபாடு காட்டத்தோன்றும்.
எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருப்பதற்கு தன்னம்பிக்கை குறைவதும், எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவதும் கூட காரணமாகலாம். எனவே நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொண்டு, நம் திறமைகளில் நம்பிக்கை வைத்து செயல்பட தொடர்ந்து முயற்சிப்பதே நம்மை எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருப்பதை போக்கி வாழ்க்கையை சுவாரசியமாக்க உதவும்.
என்ன நான் சொல்வது சரிதானே நண்பர்களே!