
உலகம் முழுவதிலும் கதைகளுக்கு செல்வாக்கு உண்டு. சின்ன வயதில் அம்மாவின் மடியில் கதை கேட்காமல் தூங்கிய குழந்தைகள் பெரும்பாலும் குறைவாகவே இருக்கும்.
பாட்டியின் கதைக்கு ‘உம்' கொட்டுகிற குழந்தைகள் இயற்கையோடு இயற்கையாக கலந்துவிடுகிறார்கள். கனவுகளும் கதைகளும் இல்லாத வாழ்க்கை வறண்ட பாலைவனமே!
அமெரிக்காவில் கதை சொல்லிகள் இயக்கம் என்று ஓர் இயக்கம் இருக்கிறது. பெரிய தொழிற்சாலைகளில், வேலை முடிந்ததும் ஆற அமர உட்கார்ந்து, ஒருவர் கதை சொல்ல, விரும்புகிறவர்கள் அமர்ந்து கேட்கிற வழக்கம் இப்போதும் இருக்கிறது. இந்த கதை சொல்லிகள் சம்பளத்திற்கு கதை சொல்லுகிற உழைப்பாளிகள்.
இவ்வாறு கதைகளைக் கேட்பதால் மனிதனின் பரபரப்பு உடலில் இருந்தும், உள்ளத்தில் இருந்தும் நீங்கிப் போவதோடு, இல்லத்திலும் அமைதி உண்டாகிறது. தொழிற்சாலைகளில் வேலை திறனும் அதிகரிக்கிறது என்பதை அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
உலகம் முழுவதிலும் இவ்வாறான "கதை சொல்லிகள்" இருக்கிறார்கள். இவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் எரிக்மில்லர். அவர் சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிற்கு வந்து சில நாட்கள் கதை சொன்னார்.
இன்னும் சொல்லப்போனால் நாம் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும்போது, Story telling என்னும் ஒரு வகுப்பே உண்டு. கதை சொல்லும் போட்டி வைத்து, நம் திறனை ஆராய்ந்து, பரிசு கொடுத்து, நம்மை உற்சாகப்படுத்துவார்கள். மீண்டும் மீண்டும் உயர்வான கதைகளை நம்மிடமிருந்து எதிர்பார்ப்பார்கள்.
குழந்தைகளிடம் காக்கை பாடியது, நரி தந்திரம் செய்தது என்று நாம் கதையாக சொன்னால் பதில் கேள்வி கேட்காமல் அதை அப்படியே ஏற்றுக்கொள்வார்கள். அது அவர்களுக்கும் தெரியும் கதை என்றால் அப்படித்தான் இருக்கும் என்று. அதையே சாதாரணமாகச் சொன்னால் எதிர்கேள்வி கேட்பார்கள். இதுதான் கதைக்கும் நிஜத்திற்கும் உள்ள வித்தியாசம்.
மாவீரன் சிவாஜியை அவனது தாயார் ஜீஜிபாயின் கதைகள் மாபெரும் வீரனாக வளர்த்தெடுத்தன என்ற தகவலை நாம் அறிவோம்.
உலக அளவில் பஞ்சதந்திரக் கதைகள், ஈசாப் கதைகள், ஜென் கதைகள், ஆயிரத்தொரு அரேபிய இரவுகள், மாப்பசான் கதைகள் இன்றளவும் பேசப்படுகின்றன.
ஓ. ஹென்றி உலகப் புகழ்பெற்ற சிறுகதை எழுத்தாளராக கருதப்படுகிறார். இவர் திருடினார் என்கிற குற்றச்சாட்டுக்கு ஆளாகி சிறையில் இருந்தபோது ஒன்றும் செய்யத் தோன்றாமல் கதை எழுதினார். அப்படித்தான் உலகப் புகழ்பெற்ற சிறுகதை எழுத்தாளர் ஆனார் என்று இலக்கிய வரலாற்றில் கூறப்படுவது உண்டு. அவரைப் பற்றிய கதையைப் பார்ப்போமா?
உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரான ஓ. ஹென்றி ஆரம்பத்தில் ஒரு வங்கியில் காசாளராகப் பணியாற்றினார். ஒரு தடவை வங்கியின் கணக்கு சரிபார்க்கப்பட்ட போது ஒரு பெருந்தொகை குறைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. யாரோ செய்த மோசடி அப்பாவியான ஓ.ஹென்றி மீது விழுந்தது. வங்கி பணத்தை மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஓ. ஹென்றிக்கு நிரபராதியான தான் சிறையில் அடைக்கப்பட்டது மனதில் பெரும் வேதனையை ஏற்படுத்தியது. அதை மறப்பதற்காக சிறைச்சாலை யிலேயே கதை, கட்டுரைகள் எழுத முயற்சி செய்தார் அவர்.
நல்ல கதைகளை எழுதினார் ஓ. ஹென்றி. சிறையை விட்டு வெளியே வந்த அவருக்கு வேறு வேலை கிடைக்கவில்லை. எனவே அவர் எழுதுவதையே தொழிலாக்கிக்கொண்டார். பின்னாளில் பிரபல கதா ஆசிரியரான ஓ. ஹென்றி பேரும், புகழும், பொருளும் ஈட்டினார் என்று கூறப்படுவது உண்மை கதை.
உலகப் புகழ்பெற்ற கதைகளுக்கு எல்லாம் பொதுவான ஒரு குணம் உண்டு. எப்போதும் வாழத்தக்கதான நித்திய உண்மைகளை அவை கொண்டிருக்கும்.
சவால்களே இல்லாத வாழ்க்கையில் திறமை என்பது வெளிப்பட வாய்ப்பே இல்லை. சவால்களையும் இடர்பாடுகளையும் எதிர்கொண்டு வெற்றி பெறும்போது தான் உழைப்பு, முனைப்பு, மாறுபட்டு சிந்தித்தல், பயன்பாடு சார்ந்த அணுகுமுறை, வாழ்வதின் அர்த்தம் ஆகியவை வெளிப்படுகின்றன.
இளைஞர்களே! சவால்களை வரவேற்று எதிர்கொண்டு வெற்றிபெற்று அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொள்ளுங்கள்! அது பல கதைகளுக்கு வித்திடும்.