
இரத்தத் திமிரில் சிலர் அடாவடித்தனம் செய்கிறார்கள். என்னவோ இவர்களுக்குத்தான் பலம் உள்ளது போல் நடந்து கொள்கிறார்கள். இவர்களைப் போல் அனைவருக்கும் மன பலமும் உள்ளது. உடல் பலமும் உள்ளது. இவர்கள் செய்யும் ரெளடித்தனத்தை அனைவரும் செய்தால், இவர்கள் காணாமல் போய் விடுவார்கள்.
இதை இவர்கள் நன்கு தெளிவாகப் புரிந்து கொள்ளவும் வேண்டும். பிறரை அடித்து, வதைத்து இம்சை செய்வதினால் இவர்களுக்கு என்ன மகிழ்ச்சி வந்துவிட்டது. இதேபோல் இவரை அடித்துத் துன்புறுத்தினால் தான் அந்த வலி என்னவென்று உணர்வார்கள். உலகில் மனிதனாகப் பிறப்பது ரௌடித்தனம் செய்யவும் அயோக்கியத்தனம் செய்யவும் அல்ல. மனித நேயம் கொண்டு, மனிதனாக வாழ வேண்டும்.
ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டும் அழித்துக் கொண்டும் வாழ்வது தான் வாழ்க்கையா? இது மனித வாழ்க்கையே அல்ல, மிருகத்தைப் போன்ற வாழ்க்கை தான் ஆகும். இயற்கை என்னும் மனச்சாட்சி அவர்களைக் கண்காணித்துக் கொண்டு தான் இருக்கிறது. இளமையில் போடும் ஆட்டத்தின் பலனை முதுமையில் அவர்கள் அனுபவித்தே ஆக வேண்டும்.
நல்லெண்ணக் கொள்கைகளை மனதில் விதைத்தவர்களே நல்லபடியாய் வாழ முடியும். காலம் கடந்து ஞானம் தெளிவு பெறுவதால், யாருக்கு என்ன பயன் கிடைத்து விடப் போகிறது. தவறு செய்வதற்கு முன்பே எச்சரிக்கையுடன் உணர்ந்து விட்டால், அனைவருக்கும் நன்மைதானே.
கலிங்கத்துப் போரில் மாவீரன் அசோகன் வெற்றி பெற்றதாக எண்ணி மகிழ்ந்து கொண்டிருந்தான். அசோகன் போர்க்களத்தில் நின்றுகொண்டு தானே மாவீரன் என நினைத்தான். புத்தர் பெருமான் அங்கு வந்தார். போர்க் களத்தில் நிலைமையைப் பார்த்தார். மனம் வேதனை அடைந்தார். அசோகச் சக்கரவர்த்தியே நீர் வெற்றி பெற்று விட்டதாய் நினைத்துக் கொண்டிருக்கிறாய். அது மிகவும் தவறு.
புத்தரைப் பார்த்த அசோகன் கேட்டார், 'என்ன கூறுகிறீர்கள் எதிரியை அழித்து நான்தான் வெற்றிகண்டேன்!' என்றார் இறுமாப்புடன்.
புத்தர் பெருமான் விளக்கினார்.... "அதுதான் இல்லை. இத்தனை உயிர்களையும் பலி கொடுத்து நீ என்ன சாதித்து விட்டாய்? அத்தனை ஆன்மாக்களும் உன்னை மன்னிக்குமா! உன் ஒருவனின் மகிழ்ச்சிக்காக மற்றவர்கள் உயிர்த் தியாகம் செய்ய வேண்டுமா என்ன?
பிணக்குவியல்களில் தர்பார் நடத்துகிறாய். ஒரு வேளை இந்தப் போரில் நீ உயிர் இழந்திருந்திருந்தால் உன் மனைவியும், பிள்ளைகளும் மகிழ்ந்து இருப்பார்களா? இதனால் நீ என்ன சாதித்து விட்டாய்? இதனால் உன்னைக் கொல்ல வேண்டும் என்று பிற நாட்டவரும் துடிப்பார்களே இது தேவையா?"
அசோகரின் மனம் மாறியது. அவரது ஆட்சியும் அமைதியானதாக ஆயிற்று.
அமைதியாகவும், நல்லதை நினைத்து, நல்லதை செய்பவர்கள் ஒழுக்கமாக வாழ்பவர்கள் தலை நிமிர்ந்தல்லவா வாழ்கிறார்கள். இப்படித் தலை மறைவாக ஓடித் திரிய வேண்டிய அவசியம் இல்லையே!
சட்டத்தையும் மறந்து தர்மத்தையும் மீறித் தன் வம்சத்திற்காக அடாவடித்தனம் செய்து சொத்து சேர்த்து வைப்பார்கள். ஆனால், இவர் வயதான காலத்தில், அம்சம் மாறாமல் இவரின் வம்சமோ. இவரைப் போட்டுத் தாக்கிவிடும். தன் பிள்ளைகளுக்கு அன்பின் வழியைக் காட்ட வேண்டும். இப்படிச் சேர்த்து வைக்கும் சொத்துக்கள். உண்மையான பாசத்தைத் தந்து விடாது. எனவே, நன்மைகளை உணர்ந்து செயல்படுபவர்களே நலம் பெறுகிறார்கள் என்பதே உண்மை ஆகும்.