பதட்டமா இருக்கீங்களா? இரவில் தூக்கம் வரலையா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க...

peaceful sleep
peaceful sleep
Published on

இன்றைய வாழ்க்கை முறை இளைஞர்களுக்கு போட்டிகள் நிறைந்ததாக உள்ளது. பல்வேறு துறைகளில் முன்னேற வேண்டும் என்ற கட்டாய உணர்வும், தன்னம்பிக்கையின் குறைபாடும் இளைஞர்களை ஒவ்வொரு நாளும் மன அழுத்தத்திற்கு தள்ளி விடுகிறது. படிப்பில் சிறந்து விளங்க வேண்டும், ஒரு நல்ல வேலையில் சேர வேண்டும் என்ற அழுத்தம், பெற்றோர், உறவினர்கள் மற்றும் சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளால் மேலும் பெரிதாகிறது.

சமூக ஊடகங்களில் ஒவ்வொருவரும் தங்கள் சிறந்த தருணங்களையே பகிரும் இந்த காலத்தில், தங்களை மற்றவர்களுடன் ஒப்பிடும் மனப்பான்மை இளைஞர்களிடம் உருவாக்குகிறது. அவனுக்கு/அவளுக்கு எல்லாம் இருக்கு எனக்கு ஏன் இல்லை? போன்ற கேள்விகள் மனதிற்குள் இடம் பிடிக்கின்றன.

அத்துடன் எதிர்காலம் பற்றிய தீர்மானங்களும், குற்றவுணர்வுகளும் மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. இதனாலேயே, இரவு நேரங்களில் பல இளைஞர்கள் பதட்டத்தால் உறங்க முடியாமல் தவிக்கின்றனர்.

இப்படி இரவு நேரங்களில் ஏற்படும் பதட்டத்தை குறைக்க சில எளிய வழிமுறைகள் பற்றி இங்கே வாசிக்கலாம்.

1. சமூக ஊடக பயன்பாட்டை கட்டுப்படுத்துங்கள்

சமூக ஊடகங்கள், பொழுதுபோக்கு மற்றும் தகவல் தொடர்புக்கான சிறந்த கருவியாக இருந்தாலும் இரவில் அதிக நேரம் அவற்றைப் பயன்படுத்துவது பதட்டத்தை அதிகரிக்கலாம்.

தூங்கச் செல்லும் ஒரு மணி நேரத்திற்கு முன்பே சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை நிறுத்துவது சிறந்தது. அதற்கு பதிலாக புத்தகம் வாசிப்பது அல்லது குடும்பத்தினருடன் பேசுவது போன்ற மன நிம்மதியை அளிக்கும் செயல்களில் ஈடுபடுங்கள். சில செயலிகள் குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு சமூக ஊடக பயன்பாட்டைத் தடுக்க உதவுகின்றன, அவற்றைப் பயன்படுத்தலாம்.

2. ஆன்லைன் தியான செயலிகள்

இன்றைய தொழில்நுட்ப உலகில், மனதை அமைதிப்படுத்தவும், பதட்டத்தைக் குறைக்கவும் பல செயலிகள் மற்றும் ஆன்லைன் வளங்கள் உள்ளன. இத்தகைய செயலிகள் தியானம், சுவாசப் பயிற்சி, தூக்கக் கதைகள் போன்றவற்றை வழங்கி மனதை அமைதிப்படுத்த உதவுகின்றன. இவை இரவில் உங்கள் மனதை அமைதிப்படுத்தவும், தூக்கத்தை மேம்படுத்தவும் உதவும். உங்களுக்குப் பிடித்த அமைதியான இசையை ஆன்லைனில் கேட்டு மனதை மகிழ்ச்சிப்படுத்தலாம்.

3. உடற்பயிற்சி – மன நலத்திற்கான இயற்கை மருந்து

வழக்கமான உடற்பயிற்சி மன அழுத்தத்தைக் குறைக்கவும், தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும் உதவும். இருப்பினும், தூங்க செல்வதற்கு முன் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்கவும்.

4. பொழுதுபோக்கு மற்றும் பிடித்த செயல்களில் ஈடுபடுதல்

தூங்க செல்வதற்கு முன் உங்களுக்குப் பிடித்தமான மற்றும் அமைதியான செயல்களில் ஈடுபடுவது மனதின் கவனத்தை மாற்றவும், பதட்டத்தைக் குறைக்கவும் உதவும்.

5. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பேசுதல்

உங்களுக்கு மன வருத்தத்தை அளிக்கும் விஷயங்களைப் பற்றி நம்பகமான நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் பேசுவது மன அழுத்தத்தைக் குறைக்க உதவும். அவர்கள் உங்களுக்கு ஆதரவை வழங்குவதால் பதட்டம் குறையலாம்.

6. நாளைய பட்டியலை தயார் செய்யுங்கள்

நாளைய வேலைகளின் எண்ணம் உங்கள் தூக்கத்தைக் குறைத்துவிட்டால், தூங்க செல்வதற்கு முன் நீங்கள் செய்ய வேண்டிய செயல்களை ஒரு பட்டியலில் எழுதுங்கள். இது உங்கள் மனதை ஒழுங்குபடுத்தவும், கவலைகளைத் தள்ளி வைக்கவும் உதவும்.

7. நேர்மறையான எண்ணங்களில் கவனம் செலுத்துதல்

எதிர்மறை எண்ணங்கள் உங்கள் மனதில் வட்டமிட்டால், அவற்றை நேர்மறையான எண்ணங்களால் மாற்ற முயற்சி செய்யுங்கள். உதாரணமாக இன்று நடந்த நல்ல விஷயங்களை நினைத்துப் பாருங்கள் அல்லது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் எதிர்காலத்தைப் பற்றி கற்பனை செய்யுங்கள்.

இதையும் படியுங்கள்:
காத்திருப்பும் பொறுமையும் வாழ்க்கையை உயர்த்தும்!
peaceful sleep

8. போதுமான தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்

போதுமான தூக்கம் கிடைக்காததும் பதட்டத்தை அதிகரிக்கலாம். ஒரு நிலையான தூக்க அட்டவணையை பராமரிப்பது முக்கியம்.

9. நிபுணர்களின் உதவி

நீண்ட காலமாக பதட்டம் உங்களைத் தொந்தரவு செய்தாலோ அல்லது வாழ்க்கையை பாதித்தாலோ, ஒரு மனநல நிபுணரை அணுகுவது அவசியம். அவர்கள் உங்களுக்கு சரியான சிகிச்சையையும் ஆலோசனையையும் வழங்க முடியும்.

இளைஞர்களுக்கு இந்த உலகம் போட்டியுடையதாக இருக்கலாம், ஆனால், நம்மை நாமே புரிந்து கொண்டு சீரான வழியில் பயணிக்க முடியும் என்ற நம்பிக்கை, அவர்களின் பயணத்தை மாற்றக்கூடிய சிறந்த சக்தியாக அமையும். இந்த எளிய வழி முறைகளை தினசரி பழக்கமாக மாறினால், இரவில் ஏற்படும் பதட்டத்தை அமைதிப்படுத்தவும், நிம்மதியான தூக்கத்தைப் பெறவும் பெரிதும் உதவும்.

முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின்   ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை/நிபுணரை அணுகவும்.

இதையும் படியுங்கள்:
ஒரு நாளில் ஒருவர் எவ்வளவு சர்க்கரை சாப்பிடலாம் தெரியுமா?
peaceful sleep

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com