நினைத்தது கிடைக்காவிட்டால் என்ன, முயற்சிக்கு பலன் உண்டு தானே!

Motivation article
Motivation articleImage credit pixabay
Published on

நாம் அனைவரும் வாழ்க்கையில் பல்வேறு இடங்களில் இலக்குகளை வைத்துக்கொண்டு அதை அடைவதற்காக ஓடிக்கொண்டிருக்கிறோம். சில நேரங்களில் நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும் கூட நம் இலக்குகளை அடைவதற்கான வாய்ப்புகள் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கலாம். ஆனால் நாம் செய்த முயற்சிகளுக்கான பலன் ஏதோ ஒரு விதத்தில் நமக்கு நிச்சயம் கிடைக்கும்! இதோ இந்த நரிக்கு கிடைத்ததைப் போல....

ஒரு காட்டில் நரி ஒன்று நீண்ட நேரமாக உணவைத் தேடி அலைந்து கொண்டிருந்தது. காட்டின் பல பகுதிகளில் தேடியும் அந்த நரிக்கு உணவே கிடைக்கவில்லை. சோர்ந்துபோன நரி காட்டை விட்டு வெளியேறி அருகில் உள்ள கிராமத்தை நோக்கி நடக்கத் தொடங்கியது.

அவ்வாறு நடந்து கொண்டிருந்த நரியானது வழியில் ஒரு திராட்சை தோட்டத்தை பார்த்தது. இன்று நமக்கு கிடைத்தது இந்த திராட்சை தான் போல, எப்படியாவது இதனை பறித்து சாப்பிட்டு நம் பசியை போக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தது. வேலியைத் தாண்டி மெதுவாக இறங்கி திராட்சைத் தோட்டத்திற்குள் நுழைந்தது.

தூரத்தில் இருந்து தோட்டத்தை பார்த்த நரிக்கு   திராட்சை குலைகள் பக்கத்தில் தொங்குவதைப் போன்று தெரிந்தது. ஆனால் பக்கத்தில் வந்தவுடன் திராட்சைத் தோட்டமே சற்று பள்ளத்தில் இருந்ததால், திராட்சை குலைகள் சற்று உயரமாக தெரிந்தது. நரி எவ்வளவோ முயற்சித்து பார்த்தது. ஆனால் நரியால்   திராட்சைக் குலைகளை தொடவே முடியவில்லை.

நரியானது தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்தது. ஆனாலும் ஒரு திராட்சையை கூட அதனால் சாப்பிட முடியவில்லை. சோர்ந்துபோன நரி, இந்த பழம் நமக்கு சாப்பிட கிடைக்காது  போல என்று எண்ணி அந்த இடத்தை விட்டு நகர ஆரம்பித்தது. சற்று தூரம் நடந்த பின் சோர்வாக இருந்த நரி, இவ்வளவு தூரம் முயற்சி செய்து விட்டோம், கடைசியாக ஒரே ஒருமுறை முயற்சி செய்யலாம். இதற்கு மேலும் காட்டிற்குள் சென்று உணவு தேட உடம்பில் தெம்பில்லை என நினைத்தது. தன் உடலில் உள்ள முழு பலத்தையும் திரட்டி, சென்ற இடத்திலிருந்து ஓடி வந்து திராட்சை குலைகளை நோக்கி தாவி குதித்தது.

இதையும் படியுங்கள்:
இயல்பான நிலையில் இருப்பவர்களுக்கு எப்போதும் சந்தோஷம்தான்!
Motivation article

ஆனால் இந்த முறையும்  திராட்சை குலைகள் நரியின்  வாய்க்கு எட்டவே இல்லை. விழுந்த வேகத்தில் நரியானது பக்கத்தில் உள்ள திராட்சை கொடியின் மீது மோதி  கீழே விழுந்தது. நரி மோதிய வேகத்தில் பக்கத்துக் கொடியில் இருந்த திராட்சை குலைகள் அனைத்தும் கீழே விழுந்தன. நரிக்கு வலி  வேறு தாங்க முடியவில்லை, இருந்தாலும் தனக்கு முன்னால் கொட்டப்பட்டு கிடக்கும் திராட்சை பழங்களை பார்த்ததும் நரிக்கு மிகுந்த சந்தோசமாக இருந்தது. மெதுவாக எழுந்து அந்த திராட்சை பழங்களை எல்லாம் சாப்பிட தொடங்கியது. சிறிது நேரத்தில் களைப்பு நீங்கி மீண்டும் காட்டை நோக்கி பயணிக்க தொடங்கியது.

எனவே வாழ்வில் நாம் செய்யக்கூடிய முயற்சிகள் ஒருபோதும் பலன் இன்றி போகாது! ஏதோ ஒரு இடத்தில் அதற்கான பலன் நமக்கு கிடைத்தே தீரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com