
மாற்றம் ஒன்றே மாறாதது. மற்ற அனைத்தும் மாறுதலுக்கு உட்பட்டதே!
சிறு மாற்றம் தான் மகத்தான உலகத்தின் உதயம்!
புகைவண்டிப் பயணத்தின் போது ஓர் இளம் வழக்கறிஞர் தூக்கி எறியப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தின் புதிய அத்தியாயமே எழுதப்பட்டது. காந்தியாக இருந்தவர் மகாத்மாவாக மாறினார்.
“ஆங்கிலேயர்கள் பயணிக்கும் முதல் வகுப்பு பெட்டியில் நீ அமரக்கூடாது. பொருட்கள் ஏற்றும் மூன்றாம் வகுப்பு பெட்டியில் போய் உட்கார்ந்துகொள்.“
தென்னாப்பிரிக்காவின் பீட்டர் மாரீட்ஸ் பெர்கில் ரயில் அதிகாரி எச்சரிக்கிறார்.
“என்னிடம் முதல் வகுப்பு டிக்கெட் இருக்கிறதே“ என்று பதிலளிக்கிறார், காந்தி.
“அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. பொருட்கள் ஏற்றும் பெட்டிக்குத் தான் நீ போயாக வேண்டும். இல்லை யென்றால் போலிஸ்காரரை அழைக்க வேண்டி வரும்“ என்று மீண்டும் எச்சரிக்கிறார், ரயில் அதிகாரி.
“உரிய கட்டணம் செலுத்தித்தான் முதல் வகுப்பு டிக்கெட் பெற்றிருக்கிறேன். நான் ஏன் மூன்றாம் வகுப்பு பெட்டிக்கு செல்ல வேண்டும்.“
தன் முடிவில் உறுதியாக இருந்த காந்தியை அந்த ரயில் அதிகாரி ரயில் பெட்டியிலிருந்து வெளியில் இழுத்துப் போடுகிறார்.
காந்தி எடுத்துச் சென்ற போர்வை அவருடைய பெட்டியோடு சேர்ந்து ரயில் நிலைய அதிகாரியிடம் சிக்கிக்கொள்கிறது. இரவு முழுக்க கடும் குளிர், நடுங்கிக் கொண்டே உட்கார்ந்திருக்கிறார். யாரிடமாவது உதவி கேட்கலாமா? யோசிக்கும் போதே அச்சமாக இருக்கிறது.
மீண்டும் மீண்டும் நினைவுக்கு வருகிறது ரயில் நிலையத்தில் நடத்தேறிய அவமானம்.
தன்னுடைய உரிமைக்காகப் போராடுவதா? இந்தியாவுக்கு திரும்பி விடுவதா?
அவமானம் மனதை விட்டு அகல மறுக்கிறது. இது லேசானது அல்ல. நிற துவேசம்! இது கொடிய நோயின் அறிகுறியாகத்தான் இருக்க வேண்டும். இந்த நோயை அடியோடு ஒழிக்க வேண்டும். இது தனக்கு இழைக்கப்பட்ட அவமானமல்ல. தனக்கு நேர்ந்து விட்ட அநீதியல்ல. உலகம் முழுமைக்குமானது. காந்தி... மகாத்மாவாக மாறினார்.
தென்னாப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலா சொன்னார்.
“நீங்கள் எங்களுக்கு காந்தியைக் கொடுத்தீர்கள். நாங்கள் உங்களுக்கு மகாத்மாவைத் திருப்பிக் கொடுத்தோம்.“
மாற்றம் என்பது என்ன?
மாற்றம் என்பது முன்னிருந்த நிலையிலிருந்து, மாறுபட்ட நல்ல நிலையைப் பற்றிக் கொள்வது.
மகத்தான செயல்கள் எல்லாம் முதலில் 'முடியும்' என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்டவை தான்!
எந்த ஒரு சாதனையும் அது சாதிக்கப்படுமுன் கடினமாகத்தான் தோன்றும். முயன்று வெற்றிக் கண்டால்... பூ... இவ்வளவு தானா என்றே தோன்றும்!
மாற்றம் பிறக்கட்டும்!