
வாழ்க்கையில் நாம் அன்றாடம் செய்யும் ஒரு மாபெரும் தவறு நம்மை மற்றவர்களுடன் அடிக்கடி ஒப்பிட்டுப் பார்ப்பது தான். இது நமக்கு அமைதியின்மையையும், பொறாமையையும், கவலையையும் தருகிறது. ‘இது வேண்டாம், ஒபைடோரி வாழ்க்கை முறையைத் தெரிந்து கொள்ளுங்கள்’ என்கிறது ஜப்பானிய வாழ்க்கைத் தத்துவம்.
'ஒபைடோரி' என்ற ஜப்பானிய வார்த்தை நான்கு மரங்களைச் சுட்டிக் காட்டும் வார்த்தை. செர்ரி, ப்ளம், பீச், ஆப்ரிகாட் ஆகிய நான்கு மரங்கள் பூத்துக் குலுங்கும் விதத்தையும் அதன் தனித்துவமான பாணியில் அவை நன்கு வளர்ந்து மலர்வதையும் இந்த வார்த்தை சுட்டிக் காட்டுகிறது!
செர்ரி மரம் ப்ளம் மரத்தைக் கண்டு அது சீக்கிரமாக மலர்வதைக் கண்டு பொறாமைப் படுவதில்லை. இதே போல் பீச் மரம் ஆப்ரிகாட்டின் அழகிய நிறத்தைக் கண்டு வருந்தி பொறாமைப்படுவதில்லை. அந்தந்த மரம் அததற்குரிய பாணியில், அதற்குரிய காலத்தில், வழியில் வளர்ந்து அற்புதமாகப் பெரிதாகிப் பரிணமிக்கின்றன. இதே போலத்தான் மனிதர் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும் என்று கூறுகிறது ஒபைடோரி தத்துவம்.
ஒவ்வொருவரும் தனிப்பட்ட குணாதிசயங்களையும், திறமைகளையும், விருப்பங்களையும் கொண்டுள்ளோம். இப்படி இருக்கையில் எதற்காக நம்மை அடுத்தவருடன் ஒப்பிட வேண்டும்? ஒபைடோரியைக் கடைப்பிடிப்பவர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள்.
ஒவ்வொருவருக்கும் ஒரு காலம் உண்டு! மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை உண்டு! வெற்றிகளும் உண்டு! அவர்கள் தம்மை மற்றவருடன் ஒரு காலத்திலும் ஒப்பிட்டுப் பார்ப்பதே இல்லை. ஆகவே எதிர்மறை விமரிசனம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போகிறது. நிம்மதியான வாழ்க்கை உறுதியாகிறது!
அவர்கள் தங்களின் தனித்தன்மையை உணர்ந்து தங்களை அன்புடன் நடத்திக் கொள்கிறார்கள். அவர்கள் தங்களது பலம் வெற்றிகள், திறமைகள் பற்றி நன்கு அறிவர். அவர்கள் தினமும் தங்களுக்குள் இருக்கும் திறமைகளுக்கு நன்றி தெரிவித்து அன்று நடந்த நல்ல விஷயங்களை நினைவுபடுத்திக் கொள்கிறார்கள். அல்லது டயரியில் எழுதிக் கொள்கிறார்கள்.
அவர்கள் மற்றவர் போல ஆக முயற்சிக்காமல் தங்களுக்குள் இருக்கும் திறமைகளை வளர்ப்பது பற்றிச் சிந்தித்து அவற்றை வளர்த்து அதன் மூலம் வெற்றி பெறுகிறார்கள். அவர்கள் மற்றவர்களின் வெற்றியைக் கண்டு காப்பி அடிக்காமல், பொறாமைப் படாமல் அவற்றை ஊக்கமூட்டும் சக்தியாக மட்டும் எடுத்துக் கொண்டு வளர்கிறார்கள்.
செர்ரி, ப்ளம், பீச், ஆப்ரிகாட் ஆகிய நான்கு மரங்களும் அருகருகே பக்கத்தில் வளர்ந்தாலும் அவை பூத்துக் குலுங்கும் காலம் வேறுபட்டது. அவை தரும் பலன்கள் மாறுபட்டது. ஆனால், அனைவருக்கும் அவை மகிழ்ச்சியைத் தருகின்றன.
பிரம்மாண்டமான சமதளத்தில் அவை வெவ்வேறு காட்சிகளைத் தருவதோடு மனதை மயக்கும் நறுமணத்தையும் பழங்களையும் பூக்களையும் தருகின்றன அல்லவா?
அமெரிக்க ஜனாதிபதியான தியோடர் ரூஸ்வெல்ட், “இன்னொருவருடன் ஒப்பிட்டுப் பார்க்கும் தன்மையானது சந்தோஷத்தைத் திருடும் திருடனே” என்று கூறியிருக்கிறார்.
ஆகவே, எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் ‘அடுத்தவருடன் ஒப்பிடும் மனப்பான்மை’ என்ற வியாதிக்கு அருமருந்து ஒபைடோரியே தான்!
ஒபைடோரியை மேற்கொள்வோம். நம் வழியில் உயர்வோம். நிம்மதியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்வோம்!