
ஓர் இளைஞன் தன்னுடைய வாழ்கையின் இலக்கு என்ன என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இலக்கை இனம் காணுவது என்பது எல்லோரும் நினைப்பதுபோல் அவ்வளவு சுலபமானது இல்லை. கல்யாண சாப்பாடு சாப்பிடுவது போல்தான் இதுவும். நல்ல பசியோடு கல்யாண விருந்து சாப்பிட ஒருவன் சென்றால் அவனுக்கு ஒழுங்காக முறையாக தெரியாவிட்டால் சாப்பிட்ட அரைமணியிலேயே மீண்டும் பசிக்கும்.
அவனால் அதை வெளியில் சொல்லவும் முடியாது. கேட்டால் கல்யாண விருந்துண்ட கொஞ்ச நேரத்தில் பசியா என்று சிரிப்பார்களே. அவனுக்குத்தானே அவன் அங்கு சாப்பிட்ட லட்சணம். வாழ்வின் கல்யாண லட்சியத்தையும் விருந்தையும் ஒப்பிடுவது உங்களுக்குக் கொஞ்சம் விந்தையாக இருக்கலாம்.
ஆனால் கொஞ்சம் நிதானமாக நான் சொன்னதை யோசித்து பாருங்கள். கல்யாண விருந்தில் ஏகப்பட்ட உணவு வகைகள் இருக்கும். நிச்சயமாக சராசரியாக சாப்பிடும் ஒரு மனிதனால் அனைத்தையும் வயிறு புடைக்கச் சாப்பிட முடியாது. அதே நேரம் இலையில் பறிமாறப்படும் அனைத்தையும் சாப்பிட வேண்டும் என்ற ஆசையும் வருவது இயற்கை.
அதனால் எல்லா வகையான உணவுகளையும் ருசி பார்த்துவிட்டு நமக்கு அத்தியாவசியமான குழம்பு, ரசம், மோர், பொறியல் ஆகியவற்றை வயிறு நிரம்ப உண்ண வேண்டும். இதுதான் சாப்பிடும் ரகசியம். வாழ்க்கையும் அதேபோல்தான். ஓர் இளைஞனின் முன்னால் ஏகப்பட்ட துறைகள் அவனை வருக வருக என்று அழைக்க எதைத் தேர்ந்தெடுப்பது என்பது குழப்பம். 'சட்'டென்று முடிவுக்கும் வரமுடியாது. ஏனென்றால் இது வாழ்க்கையைத் தீர்மானிக்கும் விஷயமாக இருக்கிறது.
பள்ளிப்படிப்பு முடியும் பருவகால கட்டத்தில்தான் இளைஞர்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக எதையும் கேட்க கூடாது. அவர்கள் சொல்வதை வைத்து எந்த முடிவும் குறிப்பாக தங்கள் எதிர்காலம் தொடர்பான எந்த முடிவும் எடுக்கக் கூடாது.
இதில் இளைஞர்கள் மிகவும் கவனமாகவும் உஷாராகவும் இருத்தல் அவசியம். இந்த திடமான புத்திதான் அவர்களுக்கு எதிர்காலத்தில் எடுப்பார் கை பிள்ளைகளாக இல்லாமல் நிச்சயமாக தீர்கமாக சிந்தித்து தீர்மானமான முடிவுகளை எடுக்கும் ஆற்றலைத் தரும். இளைஞர்களின் இளங்கலை வகுப்பில் சேரும் காலகட்டம் மிக மிக முக்கியமான பருவமாகும்.
இந்தக் கட்டத்திலேயே தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை முடிவு செய்துவிட்டால் அந்த இலக்கை நோக்கி பயணிப்பது அவர்களுக்கு சுலபமாகிவிடும். அதை விடுத்து இதுவா இல்லை அதுவா என்று தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பினார்களேயானால் இந்தக் கட்டத்தில் அவர்களை நல்ல ஆலோசகர்களிடம் அழைத்துச்செல்வது நல்லது.
இளைஞர்கள் முதலில் தங்களுக்கு எதில் நாட்டம் இருக்கிறது என்பதை நன்கு யோசித்து முடிவு செய்துவிட்டாலே வாழ்க்கை பயணத்தில் பாதி தூரம் போனமாதிரிதான். மீதமுள்ள சிகரத்தைச் சீக்கிரம் தொட்டுவிடலாம்.