பிரச்னை ஏற்படும்போது, அவற்றைத் தீர்க்க நீங்கள் இறங்கிச் செல்லுங்கள்!

agricultural lands...
agricultural lands...Image credit - .makaan.com
Published on

பிரச்னைகள் ஏற்படும்போது, அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டுமென்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவக்க முன்வாருங்கள் - வேதாத்திரி மகரிஷி.

ஒரு கதையைப் பார்ப்போம். 

இரண்டு சகோதரர்கள் அருகருகே விவசாய நிலத்தைக் கொண்டிருந்தனர். இருவரும் ஒத்துதவி பயிரிடுவது, அறுவடை செய்வது என்று பல தசாப்தங்களாக வாழ்ந்து வந்தனர். ஒருவருக்கொருவர் கருவிகளைப் பகிர்ந்து கொள்வது, வேலையாட்களைப் பகிர்ந்து கொள்வது என்று அருமையாக ஒற்றுமையாக விவசாயம் செய்து வந்தனர். மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். 

திடீரென ஒரு நாள், ஒரு சிறிய வாக்கு வாதம், பெரிய பிரச்னையாக உருமாறி, தகாத வார்த்தைகள் பரிமாறப்பட்டு, சகோதரர்கள் உறவு முறிந்தது. 

பெரிய சகோதரன் வீட்டிற்கு, ஒரு தச்சர் வந்தார். அவர், பெரிய சகோதரரிடம் வேலை கேட்டார்.

'அதோ பாருங்கள். எனது நிலத்திற்கும் அடுத்த நிலத்திற்கும் இடையே ஒரு நீரோடை ஓடுகிறது. அது நேற்று முளைத்த நீரோடை. அங்கு முன்பு பச்சை பசேலென்ற புல்வெளி இருந்தது. எனது தம்பி, எங்களது சண்டையின் காரணமாக, ஆற்றின் முகத்துவாரத்திற்கு சென்று, கரையை உடைத்து, இந்த நீரோடையை எங்கள் இருவரின் நிலங்களுக்கு நடுவே உண்டாக்கிவிட்டான். என் மீது காழ்ப்புணர்ச்சியினால் இவ்வாறு செய்துள்ளான். நான் அவனுக்கு இன்னும் ஒரு படி மேலே போகப் போகிறேன். அதோ பாருங்கள். என் நிலத்தில் வெட்டப்பட்ட மரங்கள். அவற்றைக் கொண்டு, 8 அடி உயரத்திற்கு சுவர் அமையுங்கள். எனது தம்பியின் முகத்தைக் கூட, நான் பார்க்க விரும்பவில்லை' என்றார் அண்ணன்.  

தச்சர் வேலை செய்யத் தொடங்கினார். அண்ணனுக்கு நகரத்தில் சில அலுவல்கள் இருந்தபடியால், அண்ணன் காலையிலேயே நகரத்துக்கு கிளம்பிவிட்டார். 

அண்ணன் மாலை வந்தபோது, தான் கண்ட காட்சியைக் கண்டு அதிர்ந்து போனார். அங்கு மரச்சுவருக்கு பதிலாக, நீரோடைக்கு மேலாக, அழகிய ஒரு மரப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. அது கைப்பிடிகளுடன் இரு நிலங்களுக்கும் சென்று வரும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

பாலத்தின் அந்தக் கரையில், தம்பி தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தார். 

'அண்ணா. நான் உங்களுக்கு இவ்வளவு தொந்தரவு கொடுத்த பிறகும், நீங்கள் பாலம் கட்டியுள்ளீர்கள். நான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கிறேன்' என்றார் தம்பி.

தம்பியும், அண்ணனும் பாலத்தின் நடுவில் சந்தித்துக் கொண்டு, ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டனர். 

அண்ணன் திரும்பியபோது, தச்சர் கிளம்பத் தயாராக இருந்தார். 

இதையும் படியுங்கள்:
மனச்சோர்விற்கான மாமருந்து எது தெரியுமா?
agricultural lands...

'நீங்கள் சில நாட்கள் எங்களுடன் தங்கியிருங்கள்' என்றார் அண்ணன்.

'அது இயலாது. எனக்கு சில பாலங்களைக் கட்ட வேண்டியுள்ளது' என்றார் தச்சர்

எனவே, இங்கு பாலம் அமைத்து, அண்ணனின் சார்பாக தச்சர் பிரச்னையில் இறங்கிச் சென்று, பிரச்னையைத் தீர்த்தார். பாலம் இருவரையும் இணைத்தது. சுவர் இருவரையும் பிரித்திருக்கும். 

எனவே, எந்த ஒரு பிரச்னையிலும், அடுத்தவர் இறங்கி வர வேண்டுமென்று எண்ணாமல்,  நீங்களே பேச்சைத் துவக்க முன் வாருங்கள். நீங்கள் இறங்கி சென்று பிரச்னையைத் தீருங்கள். 

பிரச்னைகளைத் தீர்த்து, மகிழ்ச்சியாக வாழ்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com