யாரு ஹீரோ?

A man in front of apartment
A man in front of apartment
Published on

காதலிக்க நேரமில்லை என்று ஒரு படம் வெளி வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது அனைவருக்கும் தெரிந்ததே. அதில் யாரு ஹீரோ? புதுமுகமாக அறிமுகமான ரவிச்சந்திரனா...? முத்துராமனா...? இருவருமே இல்லை. காமெடிதான் அந்த படத்தின் ஹீரோ!

சாதாரண கதையை கையிலெடுத்து, கோபுவை துணைக்கு வைத்துக் கொண்டு ஸ்ரீதர் அந்த படத்தை இயக்கினார். பாலையா, நாகேஷ், சச்சு கூட்டணி, நகைச்சுவையில் அசத்தி இருப்பார்கள். இந்த படத்தை ரீமேக் பண்ண பலர் முயற்சி செய்தார்கள். முடியவில்லை. காரணம் பாலையா, நாகேஷ் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமானவர்கள் கிடைக்கவில்லை.

"வானம் பொழிகிறது பூமி விளைகிறது...", "சௌத்ரி நெவர் ஃபெயில் மை டியர் சன்..." - இது போன்ற வசனங்கள் பேசும் ஒரு ஹீரோ இனிமேல் வருவாரா? கப்பலோட்டிய தமிழன், திருப்பூர் குமரன், நம் கண் முன்னே கொண்டு வந்தாரே அவர்தான் அந்த ஹீரோ.

சாதாரண கிராமத்து பொண்ணு... 'அன்னக்கிளி' யை ...மச்சான பாத்தீங்களா ' பாட வச்சு தெருவெங்கும் அதை ஒலிக்க வச்சாரே... அந்த ஹீரோ... 'ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது... நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுதுன்னு சொல்லும் அளவுக்கு உயர்ந்த ஹீரோ யாரு... இசைஞானி தானே.

சில சமயம் ஒரே இடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஹீரோக்கள் கூடி விடுவார்கள். அப்படி அமைந்த படம் 'முள்ளும் மலரும்'. கல்கி இதழின் வெள்ளி விழா போட்டியில் முதல் பரிசு பெற்ற உமா சந்திரன் அவர்கள் எழுதிய நாவல் தான் முள்ளும் மலரும். அதை அப்படியே அளவான... அழகான வசனங்களோடு படமாக்கியிருப்பார் மகேந்திரன்.

இதையும் படியுங்கள்:
காரணமே இல்லாம கோபம் வருதா? உங்களுக்குள் ஒளிந்திருக்கும் 'அந்த' ஒரு ரகசிய பிரச்னை இதுதான்!
A man in front of apartment

அற்புதமாக ஒளிப்பதிவு செய்திருப்பார் பாலுமகேந்திரா. இனிமையான பாடல்களை தந்தார் இளையராஜா. காளியாக வாழ்ந்து காட்டினார் ரஜினி. படத்தின் வெற்றிக்கு இந்த ஹீரோக்கள் காரணம்.

ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் 'ஹீரோ' என்ற பெயரில் ஒரு கவிதை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். ஒரு சிறு பையன் எப்படி ஹீரோவாக மாறி தன் தாயை காப்பாற்ற, ஆபத்தான பயணத்தை மேற்கொள்கிறான் என்பதை அழகான கற்பனையில் சொல்லி இருப்பார். ஹீரோ எந்த வயதிலும் உருவாவான். ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு ஹீரோ இருப்பார்.

யாரு ஹீரோ...?

இந்த கேள்வியை நமக்கு நாமே கேட்டு பாத்துக்கிட்டா எப்படி இருக்கும். உடனே நம்ம மனசு பக்கத்து வீட்ல சந்தோஷமா குடும்பம் நடத்திட்டு இருக்காரே... அவரா... எதிர்த்த வீட்டில் மனசுக்கு பிடித்த வேலை... மனசுக்கு பிடித்த மனைவி... என்று வாழ்ந்திட்டு இருக்காரே... அவரா என்று தான் அது சொல்லும்.

"நீ தான் அது" என்று டக்குன்னு சொல்லுமா...? சொல்ல வைக்கும் நிலை தான் சிறந்த நிலை. அதற்கு நம்மை நாமே முதலில் நம்ப வேண்டும். அன்றலர்ந்த மலர் போல் இருக்க வேண்டும்.

"ஹீரோ யாரு?" என்ற கேள்விக்கு... "நான் தான்... நாம் தான்" என்பவர் எல்லாவற்றையும் வென்று சாதிப்பார்.

அப்படிப்பட்ட ஒரு ஹீரோ என்ன பாடுவார்.. 'உலகம் பிறந்தது எனக்காக.. ஓடும் நதிகளும் எனக்காக...'

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com