
பொதுவாக எல்லோருமே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என விரும்புவது இயல்பான ஒன்று. ஆனால் முரண்பாடாக, மகிழ்ச்சி வேண்டும் என்று அதைத்தேடி துரத்தும்போது விளைவுகள் அத்தனை இனிப்பாக இருப்பதில்லை. துயரத்தில்தான் முடிகிறது. அது ஏன் என்பதற்கான காரணங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
நிலையற்ற உணர்ச்சி;
மகிழ்ச்சி என்பது கோபம், சோகம், உற்சாகம், ஆத்திரம் போன்ற ஒரு உணர்ச்சி. பொதுவாக கோபமோ வருத்தமோ, ஏமாற்றமோ ஏற்பட்டால் அந்த உணர்ச்சி சில நிமிடங்களில் மறைந்துவிடும். அதைப் போலத்தான் மகிழ்ச்சியும். ஆனால் மனிதர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று நினைப்பதனால் ஏமாற்றத்திற்கு ஆளாகிறார்கள். ஏனென்றால் மகிழ்ச்சி என்பது நிரந்தரமாக இருக்கும் ஒரு உணர்ச்சி அல்ல. பிற உணர்ச்சிகளைப் போலவே மகிழ்ச்சியையும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நிலைக்கும் என்பதை மனிதர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
மகிழ்ச்சி என்பது என்ன?
மகிழ்ச்சி என்பது என்ன என்று நிறைய மனிதர்களுக்குப் புரிவதில்லை. பெரிய வீடு, ஆடம்பரமான கார், பகட்டான உடைகள், அதிக விலையில் வாங்கிய செல்போன் போன்றவை தமது அந்தஸ்தை பிறருக்கு பறைசாற்றும். பிறர் அவற்றைப் பார்த்து தன் மீது மதிப்பு கொள்வார்கள். அதனால் தனக்கு மகிழ்ச்சி உண்டாகும் என்று தவறாக மனிதர்கள் நினைக்கிறார்கள். வாடகை வீட்டில் வசிக்கும் ஒருவர் சொந்த வீடு வாங்கினால்தான் தனக்கு மகிழ்ச்சி என்று நினைக்கிறார். சிறிய பதவியில் இருக்கும் ஒருவர் பதவி உயர்வு கிடைத்து அதிகாரம் உள்ள பதவி பெரிய பதவியில் அமர்ந்தால்தான் மகிழ்ச்சி என்று நினைக்கிறார்.
பட்டுப்புடவை அணிந்து கொண்டு விசேஷத்துக்கு சென்றால் தான் மகிழ்ச்சி என்று ஒரு பெண்மணி நினைக்கிறார். பட்டுப்புடவையும், வேலையில் ப்ரமோஷனும், புதிய பெரிய காரும் வீடும் வாங்கிய பிறகு அந்த மகிழ்ச்சி சில நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும். பின்பு வேறு எதையோ தேடி மனம் ஓடும். மகிழ்ச்சிக்கான அளவுகோல்களாக பொருள்களை நினைப்பதால்தான் மனதில் துயரம் ஏற்படுகிறது.
தற்காலிக மகிழ்ச்சி;
செல்போனில் ரீல்ஸ் பார்க்கும்போது மனதில் மகிழ்ச்சி உண்டாகிறது. ஆனால் 10, 20 என்று மணிக்கணக்கில் பார்த்தாலும் இன்னும் வேண்டும் என்று மனதும் மூளையும் கேட்கிறது. மது, புகை, போதைப் பழக்கங்களில் மகிழ்ச்சியைத் தேடுவோருக்கு விமோசனமே இல்லை. துயரமான விளைவுகள் மட்டுமே உண்டாகும்.
முதலில் மகிழ்ச்சி என்பது அடையக்கூடிய இலக்கு அல்ல என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். மனநிறைவோடு கூடிய மகிழ்ச்சிதான் ஒருவருக்கு உள்ளார்ந்த மகிழ்ச்சியை தரும். உண்மையில் நிறைவான வாழ்க்கை என்பது அனைத்து உணர்ச்சிகளையும் உள்ளடக்கியதுதான். ஏமாற்றம், கோபம், சோகம், துயரம், மகிழ்ச்சி, விரக்தி என்று கலவைகளின் கூட்டுதான் மனித வாழ்க்கை. இவை எல்லாவற்றையும் அனுபவிக்க தெரியவேண்டும்.
உண்மையான மகிழ்ச்சி;
உண்மையான மகிழ்ச்சி என்பது பொருள்களிலோ, பதவியிலோ இல்லை. சில பயிற்சிகளின் மூலம் உண்மையான மகிழ்ச்சியை அடையலாம். நன்றியுணர்வை பயிற்சி செய்ய வேண்டும். தன்னிடம் ஏற்கனவே உள்ள விஷயங்களுக்காக அவற்றை மனதார நினைத்து நன்றி சொன்னால் புதிய பொருள்கள் வேண்டும் என்று நினைத்து மனது ஏங்காது.
எதிர்காலத்தில் இதெல்லாம் கிடைக்குமா என்று நினைத்து விரக்தி அடையாமல் நிகழ்காலத்தில் வாழவேண்டும். தன்னுடைய சிறிய வெற்றியைக் கூட முழு மனதோடு கொண்டாட வேண்டும். இந்தப் பயிற்சிகளை செய்யும்போது மனதிற்கு உண்மையான மகிழ்ச்சி கிடைக்கும். மகிழ்ச்சி என்பது உள்ளத்தில் இருந்து வரவேண்டும். அது வெளியில் தேடி கிடைக்கக்கூடிய ஒரு பொருள் அல்ல என்பதை உணர்ந்தாலே நாம் மகிழ்ச்சியைத்தேடி ஓடமாட்டோம்.