உடல் என்னும் ஆசானை உணர்ந்து கொள்வோம்!

Motivational articles
Health awareness
Published on

மது உடலின் இயக்கத்தைக் கூர்ந்து கவனித்தால், அறிவையும் மனத்தையும் நாம் சரியாக வைத்துக் கொள்வது எப்படி என்பதை அதுவே சொல்லித்தருவதாகத் தோன்றும்!

நமது உடலே நமக்கு ஆசானாக இருக்க முடியுமா என்ன... முடியும்.

நாம் கற்றுக்கொள்ளத் தயாராக இருந்தால், தனது இயக்கத்தின் வாயிலாக நமக்குப் பல பாடங்களைச் சொல்லித்தருகிறது, நமது உடல்!

மூக்கு எதற்கு வாய்க்கு மேல் இருக்கிறது...? 'இயற்கையின் படைப்பு அப்படி... என்னும் பதில் சரியானதுதான். ஆனால், வேறு மாதிரியும் எண்ணிப் பார்க்கலாம்.-

ஓர் உணவு, உண்ணத் தகுந்ததாக இருக்கிறதா அல்லது கெட்டுப்போய்விட்டதா என்பதனை, உணவின் மணமே பெரும்பாலும் காட்டிக்கொடுத்துவிடும்.

வாய்க்குள் உணவு செல்வதற்கு முன்பே, அது கெட்டுப் போனதாக இருந்தால் மூக்கு நம்மை எச்சரித்துவிடுகிறது. 'உள்ளே அனுப்பாதே.

இதற்குத் தப்பி, கவனமில்லாமலோ அல்லது நமது ஆசையினாலோ, கெட்டுப்போன உணவு உள்ளே போனால் ஜீரணம் செய்ய மறுத்து, 'இதற்கு மேல் கொஞ்ச நேரம்கூட இது உள்ளே இருக்கக் கூடாது....' என்று வாய் வழியாகவே உடல் வெளியே தள்ளிவிடுகிறது!

வாய் வழியே வெளியே வராமல் தப்பி உள்ளே சென்றவற்றை ஜீரணமே செய்யாமல் மிக வேகமாக் கீழே தள்ளிவிடுகிறது உடல்!

அந்த உணவு ஏதோ ஒரு வகையில் வெளியேறும்வரை, உடம்பு நம்மைப் படுத்தும்பாடு கொஞ்சமில்லை.

உடம்பு எவ்வளவு பெரிய செய்தியை நமக்கு சொல்லித்தருகிறது...?

இதையும் படியுங்கள்:
அவரவர்களுக்கு ஒரு பாா்வை, தன்மை, மனது, நாம் தமது வேலையைப் பாா்ப்பதே!
Motivational articles

நம் மனத்துக்கு அறிவு மூக்காகவும், அறிவுக்கு மனம் மூக்காகவும் இருந்து செயல்பட வேண்டும்.

'இந்த செய்தி மனத்துக்குள் போகத் தகுதியற்றது...' என்று சொல்லி அறிவு தடுத்துவிட வேண்டும். 'இது அறிவுக்குள் போகக்கூடிய செய்தி அல்ல...' என்று மனம் தடுத்துவிட வேண்டும்!

தவறுதலாக உள்ளே போய்விட்ட உணவை ஜீரணம் செய்ய மறுத்து உடலே வெளியே தள்ளிவிடுவதுபோல, உள்ளே போய்விட்ட தேவையற்ற செய்திகளை அறிவும் மனமும் கூட்டாக செயல்பட்டு அப்படியே வெளியே தள்ளிவிட வேண்டும். அவற்றை சிந்தனைகளாக மாற அனுமதிக்கவே கூடாது.

ஜீரணத்துக்கு ஏற்றுக்கொண்ட உணவைக்கூட, உடல் அப்படியே ஒப்புக்கொள்வதில்லை.

தேவையான அமிலங்களைத் தூவிப் பிசைந்து கூழாக்கி, ரத்தத்தில் கலக்கக் கூடியவற்றைத் தனியாகவும், தேவையற்றவைகளைத் தனியாகவும் பிரிக்கிறது. தனக்குத் தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு, தேவையற்றவைகளை உடனுக்குடன் வெளியேற்றிவிடுகிறது.

இதையும் படியுங்கள்:
கதைப்போமா? மாற்றம் ஒன்றே மாறாதது...மீண்டும் மாறுவோமே..
Motivational articles

கழிவுகளை வெளியேற்ற உடம்பு காட்டும் அவசரத்தையும் அவசியத்தையும், நமது அறிவும் மனமும் கற்றுக் கொள்ளுமானால், தேவையற்ற பழக்கங்களும் ஆசைகளும் நம்மை அண்டும் வாய்ப்பில்லை.

கண்ணிலே அன்பிருந்தால், கல்லிலே தெய்வம் வரும்..' என்று திரைப்பாடலில் எழுதினார் கண்ணதாசன்.

அதுபோல, நாம் கற்றுக்கொள்ளத் தயாராக இருந்தால், நமது உடலே நமக்கு ஓர்ஆசிரியராக மாறும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com