மற்றவர்களில் இருந்து வேறுபட்டு சமூகத்தில் நம் பெயரை பதித்துவிட்டுப்போக ஆசையாக இருக்கிறது. அதற்கு நாம் என்ன செய்யவேண்டும். மற்றவர்கள் உங்களை கவனிக்க வேண்டும் என்று ஏன் நினைக்கிறீர்கள்?
அந்த திரையரங்கம் நிரம்பியிருந்தது. "எங்கள் இருக்கைகளை வேறு ஒருவன் ஆக்ரமித்துள்ளான். எவ்வளவு சொன்னாலும் நகர மறுக்கிறான்" என்று ஒரு தம்பதி மேனேஜரிடம் புகார் செய்தனர்.
மேனேஜர் கோபமாக உள்ளே சென்றார். ஒரு ஆள் மூன்று இருக்கைகளை ஆக்ரமித்து மல்லாக்க கிடப்பதைப்பார்த்து, "தம்பி, குடித்துவிட்டு வந்தாயா? உனக்கான இருக்கையில் உட்கார்" என்றார். அவர் அசையவேயில்லை. போலீசை கூப்பிட்டார். போலீஸ் கோபத்துடன் அவன் பெயர் மற்றும் எங்கிருந்து வருகிறாய் என்று கேட்க, அவன் தன் பெயர் சங்கர் என்றும் பால்கனியில் இருந்து வருகிறேன் என்றார். இப்படி மற்றவர்கள் கவனத்தைக் கவரவா ஆசை? இல்லை என்னை மற்றவர்கள் போற்றும் அளவுக்கு நடக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள்?.
வாழ்க்கையில் எதை அணுகினாலும் நான் என்ன ஆவேன்? எனக்கு என்ன கிடைக்கும் என்ற கணக்குகளை நீக்கிவிட்டுப் பாருங்கள். உங்களுக்கான ஆதாயங்களைப் பற்றிய கவனமில்லாமல் உங்கள் வாழ்க்கையின் நோக்கம் அமைந்துவிட்டாலே நீங்கள் பெருமைக்குரியவராக ஆகிவிடுவீர்கள். தவிர ஒருவர் வாழும் நாட்கள் சரித்திரத்தில் எந்தக் கட்டத்தில் இருக்கின்றன என்பதைப் பொறுத்து அவருக்கான பெருமையும் மாறும்.
ஊழலிலே மூழ்கிப்போன அரசியல்வாதி ஓய்வு எடுக்கத் தனியே கடற்கரை போனார். தண்ணீரில் நின்றபோது அலைகள் அவரை உள்ளே இழுத்தன. இதைக் கவனித்த ஒரு இளைஞன் பாய்ந்து அவரைக் காப்பாற்றிக் கரையில் சேர்த்தான். அரசியல்வாதி அவனிடம் "எனக்கு பெரும் செல்வாக்கு இருக்கிறது. உனக்கு என்ன வேண்டும் கேள்" என்றார்.
ஐயா என் இறுதிச்சடங்கை ராணுவ மரியாதையுடன் செய்ய வேண்டும் என்றான் அவன்
அரசியல்வாதி திகைத்தார். "உனக்கு ஏன் மரணத்தைப் பற்றிக்கவலை" என்றார்.
அதற்கு அவன் "நான் யாரைக் காப்பாற்றியிருக்கிறேன் என வெளியில் தெரிந்தால் என் உயிருக்கு என்ன உத்தரவாதம்? என்றான். இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் நிறைந்த இன்றைய இந்தியாவில் மகாத்மா காந்தியே தேர்தலில் நின்றால் கூட ஜெயிக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.
உங்கள் ஆதாயக் கணக்கை நீக்கிவிட்டு உங்களைச் சுற்றியுள்ளவர்களை கவனியுங்கள். தானாகவே உங்களால் என்ன செய்ய முடியும் என்பதைத்தான் கவனிப்பீர்கள். தேவையானவற்றை செய்வதற்கு உங்கள் திறமையை இன்னும் எப்படி மேலோங்கச் செய்யலாம் என்று யோசிப்பீர்கள்.
இந்தியாவிலேயே செய்வதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கும்போது வேலையில்லா திண்டாட்டம் என்பது வேடிக்கையாக இருக்கிறது. செய்து முடிப்பதற்கு பல நூறு விஷயங்கள் உள்ளன. அவற்றைக் கவனிக்காமல் உங்கள் தேவைகளை முன்னிறுத்தி மட்டுமே வேலை தேடுவதால்தான் இந்த கஷ்டம்.
எனக்கு என்ன கிடைக்கும் என்ற கணக்கு விலகியதும் நீங்கள் பிரகாசிக்க தொடங்குவீர்கள். உங்களுக்கு எந்த அளவு பெருமை மற்றும் மதிப்பு கிடைக்கும் என்பது உங்கள் திறமையைப் பொறுத்துதான் அமையும். தேசத்தில் உயர்ந்தவராக நீங்கள் அறியப்படலாம். உங்கள் தெருவில் கவனிக்கப்படுபவராக இருக்கலாம். எதுவும் இல்லாமல் உங்கள் வீட்டளவில் மட்டுமே நீங்கள் சிறப்பானவராக மதிக்கப்படலாம். மற்றவர்கள் உங்களை மகாத்மா என்று அழைக்கட்டும், அழைக்காமல் போகட்டும். அது ஒரு பொருட்டல்ல. உங்கள் அளவில் நீங்கள் ஒரு மகாத்மாவாக உணர்வீர்கள். மகாத்மாவாக வாழ்வீர்கள்.