நீங்கள் வெற்றியடைய எவ்வளவுதான் கடின உழைப்பை போட்டாலும், வெற்றியடைவதில் தாமதம் ஏற்படுகிறதா? இந்த உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் வெற்றி பெறுவதில் மாறுபாடுகள் இருக்கிறதா? இதையெல்லாம் தெரிந்துக்கொள்ள இந்த கதையை படியுங்கள்.
ஒருநாள் எறும்பும், பறவையும் தங்களுக்குள் ஒரு போட்டி வைத்துக் கொள்கின்றன. அங்கிருக்கும் மலையுடைய உச்சியை யார் முதலில் தொடுகிறார்கள் என்பதுதான் அந்த போட்டி. பறவை எறும்பை பார்த்து ஏளனமாக சிரித்துவிட்டு மலை உச்சியை நோக்கி வேகமாக பறக்கிறது. சிறிது நேரத்திலேயே பறவை மலையுடைய உச்சியை அடைந்து விடுகிறது. அங்கிருந்து எறும்பு எங்கேயிருக்கிறது என்று பறவை எட்டிப்பார்க்கிறது.
அந்த எறும்பு மலையுடைய பாதி தூரத்தைக் கூட கடக்கவில்லை. இதை பார்த்த பறவை எறும்பிடம் சொல்கிறது, எனக்கு அப்போதே தெரியும். உன்னால் இதையெல்லாம் செய்ய முடியாது என்று. ஒரு பறவையிடம் எறும்பு போட்டி போடலாமா? என்று கூறிவிட்டு சென்றுவிடுகிறது.
ஆனால் எறும்பு அந்த போட்டியை கைவிடவில்லை. கொஞ்சம் நாளிலேயே அந்த எறும்பின் விடாமுயற்சியால் மலை உச்சியை அடைந்துவிடுகிறது. அந்த வழியாக சென்ற பறவை இதை ஆச்சர்யமாக பார்க்கிறது. அப்போது எறும்பு அந்த பறவையிடம் சொல்கிறது, வெற்றி என்பது எல்லோருக்கும் பொதுவானது. சிலருக்கு அது வேகமாக கிடைக்கும், சிலருக்கு அது கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் நம்மிடமிருந்தால் நாம் வெற்றியடைவதை யாராலும் தடுக்க முடியாது என்று எறும்பு சொன்னது.
இதேபோலத்தான் நம்முடைய வாழ்க்கையிலும் சிலருக்கு வெற்றி இளம் வயதிலேயே கிடைத்துவிடும். இன்னும் சிலருக்கோ வயதான பிறகே வெற்றிக் கனியை சுவைக்க முடியும் . ஆனால் வெற்றி என்பது எல்லோருக்குமே பொதுவானதுதான். உதாரணத்திற்கு, அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடனுக்கு தன்னுடைய 81 ஆவது வயதில்தான் அமேரிக்காவை ஆட்சி செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. இதையே இவருடைய மிகபெரிய வெற்றியாக சொல்லலாம்.
இதுவே ஹாரிபாட்டர் திரைப்படத்தில் நடித்த டேனியல் ரெட்கிளிப்க்கு அந்த படவாய்ப்பு கிடைக்கும் போது அச்சிறுவனின் வயது 11 தான். எனவே, வெற்றி என்பது அனைவருக்குமே கிடைக்கும். ஆனால் அது ஒவ்வொருவருக்கும் கிடைக்கக்கூடிய காலநேரமே மாறுப்படுகிறது. இதை நன்றாக புரிந்துக் கொண்டு விடாமுயற்சியுடன் உழைத்தால் நிச்சயமாக வாழ்க்கையில் வெற்றியடைய முடியும். முயற்சித்துப் பாருங்களேன்.