வெற்றி என்பது பல நூறு ஆண்டுகளாக மனித குலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் ஒன்றாகும். இதன் நோக்கம் அதிக பணத்தை சேர்ப்பதாக இருந்தாலும், தனிப்பட்ட மனநிறைவை அடைவதாக இருந்தாலும் அல்லது உலகில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தாலும் வெற்றியை தேடிச்செல்வது ஒரு பொதுவான பயணமாகும். வெற்றி அடைவது கடினமானது இல்லை என்றாலும், அதைப் பெரும்பாலான நபர்களால் அடைய முடிவதில்லை. இந்தப் பதிவில் அதற்கான சில காரணங்கள் என்னவென்று பார்க்கலாம்.
தெளிவு மற்றும் நோக்கமின்மை: பல மனிதர்கள் வெற்றியடையாமல் போவதற்கு முதன்மைக் காரணமாக இருப்பது தெளிவு மற்றும் நோக்கமின்மையாகும். பெரும்பாலான நபர்களுக்கு தான் உண்மையில் எதை சாதிக்க விரும்புகிறோம் என்பதைப் பற்றிய தெளிவான புரிதல் இருப்பதில்லை. இதன் காரணமாகவே அவர்களுக்கு சரியான இலக்குகள் இன்றி வாழ்வில் ஏதோ ஒரு திசையில் பயணித்து வெற்றியை ருசிக்காமலே போய்விடுகிறார்கள்.
தோல்வி பயம்: பயம் என்பது மிகவும் மோசமானதாகும். இது ஒரு மனிதனின் முழு திறமைகளை உணரவிடாமல் தடுக்கிறது. தோல்வி பயம், பிறரால் நிராகரிக்கப்படுவது அல்லது Comfort Zone-ல் இருந்து வெளியேறுவது பெரும்பாலான நபர்களுக்கு கடினமாக உள்ளது. இந்த விஷயங்கள் ஒருவரை தைரியமாக முடிவெடுப்பதைத் தடுக்கிறது.
ஒழுக்கம் மற்றும் விடாமுயற்சி இல்லாமை: வெற்றி என்பது ஒரே இரவில் வந்துவிடாது. இதற்கு நிலையான முயற்சி, ஒழுக்கம் மற்றும் நீண்ட கால அர்ப்பணிப்பு தேவை. பலருக்கு அவர்களின் இலக்குகளைப் பின்பற்றத் தேவையான ஒழுக்கம் இருப்பதில்லை. தொடக்கத்தில் ஒரு புதிய விஷயத்தை அவர்கள் உற்சாகமாகத் தொடங்கினாலும், காலப்போக்கில் ஏதேனும் தடைகள் அல்லது பின்னடைவுகளை எதிர்கொள்ளும்போது, தங்களின் கனவுகளை அவர்கள் எளிதாக விட்டுக்கொடுத்து விடுகின்றனர். வெற்றிக்கு வழிவகுக்கும் பழக்கங்களையும், செயல்களையும் இவர்கள் ஒருபோதும் செய்வதில்லை.
தொடர் கற்றல் மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தன்மை இல்லாமை: இன்றைய நவீன உலகில் ஒருவர் வெற்றி பெறுவதற்கு தொடர்ச்சியான கற்றல் மற்றும் வித்தியாசமாக சிந்திக்கக்கூடிய ஆற்றல் தேவை. ஆனால் துரதிஷ்டவசமாக, பலர் ஏதோ ஒரு சிறிய வெற்றியைப் பார்த்த உடனேயே மன நிறைவை அடைகின்றனர். அதன் பின்னர் புதிய விஷயங்களை நோக்கி பயணிப்பதை நிறுத்தி விடுகின்றனர். எதையும் புதிதாகக் கற்க முயல்வதில்லை. திறன்களை வளர்த்துக்கொள்ள முயற்சிப்பதில்லை. சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டு வித்தியாசமாக எதை வேண்டும் முயற்சித்துக் கொண்டிருந்தால் மட்டுமே வெற்றியை தக்க வைக்க முடியும் என்பது பலருக்குத் தெரிவதில்லை.
வெற்றி என்பது முடிவு என யாரும் நினைக்கக்கூடாது. வெற்றி பெற்ற பிறகு அதைத் தக்க வைப்பதற்கு வாழ்நாள் முழுவதும் தொடர்ச்சியாக நாம் உழைக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.