

வாழ்க்கை வாழ்வதற்கே. அப்படிப்பட்ட வாழ்க்கை எப்பொழுதும் ஒரு தனி நபரின் விருப்பப்படியே அமைந்துவிடுவது இல்லை. நேர்க்கோட்டில், சுகமாக, எந்தவிதப் பிரச்சனைகளும் இன்றிப் பயணித்து முன்னேறவே பலர் விரும்புகின்றனர். ஆனால், அவ்வாறு பயணம் செய்வது நடைமுறை வாழ்க்கைக்கு அப்பாற்பட்டது என்பதே நிதர்சனமான உண்மை.
எவ்வளவுதான் அனுபவம் பெற்றிருந்தாலும், தீர்க்கமாகச் சிந்தித்துத் திட்டம் போட்டிருந்தாலும், பல நேரங்களில் எதிர்பாராத நிகழ்வுகள் தடங்கல்களாக உருவெடுப்பதைத் முன்கூட்டியே கணிக்கவோ அல்லது தவிர்க்கவோ முடியாது. இத்தகைய நிகழ்வுகள், சீராகச் சென்று கொண்டிருக்கும் வாழ்க்கைப் பயணத்திற்கு இடையூறாக அமைவதுடன், ஒரு வேகத்தடையைப் போலச் செயல்பட்டு நம்மை நிலைகுலையச் செய்யவும் கூடும்.
மேலும், இத்தகைய தடங்கல்கள் கவனத்தைச் சிதறடிக்கத் தூண்டுகோலாகவும் செயல்படுகின்றன. இவை:
நேர விரயம் மற்றும் கால தாமதம்,
அதிகப்படியான செலவு மற்றும் அனாவசியப் படபடப்பு (Tension),
தேவையற்ற சிந்தனைகள் மற்றும் கவலைகள்,
ஆகியவற்றை அதிகரிக்கச் செய்து, மன அமைதியையும் நிம்மதியையும் இழக்கக் காரணமாக அமைகின்றன.
இருப்பினும், இத்தகைய நிகழ்வுகளே வாழ்க்கைப் பாதை என்பது நேர்க்கோடு அல்ல; அது கரடுமுரடான, ஏற்ற இறக்கங்கள் நிறைந்த கடினமான பாதை என்பதை நமக்கு நடைமுறையில் உணர்த்துகின்றன. உண்மையில், முன்னேறிச் செல்லும் பாதை நேர்க்கோடு போலச் சுகமாக அமைந்தால், அதுவே ஒரு தடையாகத்தான் செயல்படும்.
வளைவுகள் மற்றும் ஏற்றத்தாழ்வுகள் கொண்ட வாழ்க்கைப் பயணம்தான் முன்னேற நினைப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைகின்றது என்று சொன்னால் அது மிகையல்ல. அத்தகைய கடினமான பயணங்களே:
எவ்வாறு துணிவை வளர்த்துக்கொள்வது?
தன்னம்பிக்கையை எப்படி வலுப்படுத்துவது?
என்பதைப் பற்றி அறிந்து கொள்ளவும், அவற்றைச் சோதித்துப் பார்க்கவும் இடைவிடாது வாய்ப்பளிக்கின்றன. எதிர்பாராத நிகழ்வுகளைக் கையாண்டு முன்னேற முடியும் என்ற நம்பிக்கையைக் கரடுமுரடான பாதையே நமக்குக் கற்றுக்கொடுக்கிறது.
தவிர்க்க முடியாத சூழ்நிலைகளைக் கட்டாயமாக எதிர்கொள்ளும் பொழுது புதிய அனுபவங்கள் கிடைக்கின்றன. அதைக் கடந்து செல்லும்போது, "நம்மாலும் இக்கட்டான சூழல்களை எதிர்கொண்டு விடை காண முடியும்" என்ற நம்பிக்கை உருவாவதுடன், மனோ தைரியமும் வலுப்பெறுகிறது.
துணிவாகச் செயல்பட மேடு பள்ளம் நிறைந்த வாழ்க்கைப் பயணமே சிறந்த படிப்பினை அளிக்கும் களமாகும் (Learning ground). நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், முன்னேற்றத்தை நோக்கிய வாழ்க்கைப் பாதை அதன் தொடக்கத்திலிருந்து முடிவு வரை நேர்க்கோட்டில் பயணிக்க விடாது என்பதே யதார்த்தமான உண்மை.