

துணிச்சல் மிக்க செயல் என்பது பயத்தை அகற்றி, எந்த காரியத்தையும் துணிச்சேலோடு செய்வது ஆகும். இதற்கு உதாரணம் இக்கதை.
ஒரு சிறு நாட்டில் உள்ள அரசன், காட்டில் ஆசிரமத்தில் வாள் சண்டை நடத்தி வந்த குருவிடம், தன் மகனை அனுப்பிவைத்து சண்டை கற்றுக் கொள்ள வைத்தான்.
இளவரசன் வந்து அக்கறையாக கற்றுக் கொண்டான். ஒரு நாள் குருவிடம் சென்று "நான் நாட்டிலேயே சிறந்த வீரன் என்று பெயரெடுக்கும் அளவுக்கு பயிற்சி பெற்று விட்டேன். நான் அரண்மனைக்கு திரும்பி செல்லலாமா?" என்று கேட்டான்.
"நீ அப்படி நினைத்தால் மகிழ்ச்சி. உனக்கு ஒரு பரிசு தருகிறேன்" என்றார் குரு. உள்ளே எழுந்து சென்று ஒரு வாளை எடுத்து வந்தார். அழகிய கைப்பிடியுடன் அது பளபளத்தது.
"இந்தப் பிரதேசத்தில் ஒரு காலத்தில் வாழ்ந்த துணிச்சலான மாவீரன் ஒருவன் வைத்திருந்த வாள் இது. அவன் எப்போதும் தோற்றதே இல்லை" என்று சொல்லி அந்த வாளை இளவரசனுக்கு கொடுத்தார். கூடவே ஒரு வேலையும் சொன்னார். தூரத்தில் தெரிந்த மலை உச்சியை காட்டி, "அங்கே இருக்கும் மாமரத்தில் இருந்து எனக்கு கொஞ்சம் மாம்பழங்கள் பறித்து வந்து கொடுத்து விட்டுப் போ! வழியில் யாரிடமும் நீ இளவரசன் என்று சொல்லக்கூடாது" என்றார் குரு.
இளவரசன் அந்த வாளுடன் உற்சாகமாக கிளம்பி போனான்.
காட்டு வழியில் சில கொள்ளைக்காரர்கள் அவனை வழி மறித்தார்கள். இவன் தன் வாளை உருவி கையில் பிடித்துக் கொண்டு அவர்களுடன் சண்டை போட்டான். ஆனால் அவர்கள் கைத்தடிகளை வைத்துக்கொண்டு இவனைத் தாக்கினார்கள்.
ஒவ்வொரு அடியும் இடியாக, உடலில் இறங்க வலி தாங்க முடியாமல், அவன் தோற்று ஓடி வந்தான்.
குருவின் முன்பாக தலை குனிந்து நின்றான். "மாம்பழங்கள் எங்கே?" என்று குரு கேட்டார்.
அவன் நடந்ததை சொல்லி "இன்னும் வாள்பயிற்சி பெற்று அடுத்த முறை அவர்களை வென்று கொண்டு வருவேன்" என்றான்.
மீண்டும் தீவிரமாக பயிற்சி எடுத்துக் கொண்டு அடுத்த மாதமே போனான். இந்த முறையும் தோல்வி தான் கிடைத்தது.
அடுத்த தடவை நிறைய பேருடன் ஒரே நேரத்தில் வாள் சண்டை போட்டு பயிற்சி எடுத்தான். மூன்றாவது முறையும் போனான்.
உடலில் நிறையக் காயங்களுடன் சோகமாக திரும்பி வந்தான். தன் வாளைத்தூக்கி போட்டான். "இந்த வாள் எனக்கு வெற்றியை கொடுக்கவில்லை. நீங்கள் பொய் சொல்கிறீர்கள். இது ஒன்றும் அவ்வளவு சிறப்பான வாள் இல்லை," என்றான்.
குரு சிரித்தார். "இந்த வாளை வைத்திருந்தவன் துணிச்சலான வீரன் என்று பொய் சொன்னேன். அவனுக்கு இந்த வாள் மட்டுமே வெற்றியைக் கொடுக்கவில்லை. அவன் மன உறுதி தான் வெற்றியைத் கொடுத்தது. அவனிடம் இந்த வாள் இருந்ததால் பெயர் பெற்றது. மற்றபடி இந்த வாளை நம்பி அவன் இருக்கவில்லை," என்றார்.
"இம்முறை வெறுங்கையோடு போய் மாம்பழங்கள் பறித்து வா" என்றார் குரு.
அவன் தயங்கினான். ஆனாலும் துணிச்சலோடு போனான். சூழ்ந்து கொண்ட கொள்ளையர்களை காட்டில் கிடைத்த தடிகளை வைத்து வெறியுடன் சண்டை போட்டு தாக்கினான்.
அவர்கள் பயந்து ஓடினார்கள். அச்சமற்ற மனமே துணிச்சலை கொடுக்கிறது என்பதை அவன் புரிந்து கொண்டு மாம்பழங்களை பறித்து கொண்டு குருவிடம் வந்து கொடுத்தான்.
குருவும் அவனிடம் இப்போது, "அச்சமற்ற மனதோடு துணிச்சலாக சண்டை போட்டு வெற்றி பெற்றாய். இனி சிறந்த வீரன் என்று பெயர் எடுக்கும் அளவுக்கு பயிற்சி பெற்று விட்டாய். நீ அரண்மனை சென்று தந்தைக்கு சிறந்த மகனாகப் பெயர் எடு," என வாழ்த்தி அனுப்பினார் குரு.
எந்த செயலிலும் இறங்கும் போது அச்சம் இல்லாமல் இறங்கினால் வெற்றி கிடைக்கும்!