மனித வாழ்வில் ஒவ்வொருவரும் பல்வேறு சூழ்நிலைகளையும் சவால்களையும் எதிர்கொள்கிறோம். இந்த சூழல்களில் நம் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டி, சிலர் பிறரிடம் கெஞ்சி அவர்களுக்கானதை சாதித்துக் கொள்வார்கள். ஆனால் நம்முடைய தேவைக்கு பிறரிடம் கெஞ்சுவது சரியானதா? என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். ஒருவர் ஏன் எந்த சூழ்நிலையிலும் பிறரிடம் கெஞ்சக்கூடாது என்பதைப் பற்றி இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
பிறரிடம் கெஞ்சுவது என்பது நம்மால் எதையும் தனியாக சாதிக்க முடியாது என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. இதனால் நம் தன்னம்பிக்கையை பெரிதும் குறைந்து, எதிர்காலத்தில் எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ளும் திறனை நாம் இழக்க நேரிடும்.
பிறரிடம் கெஞ்சுவதால் மற்றவர்களிடம் நம் மதிப்பு குறைகிறது. ஏனெனில் கெஞ்சுபவர்களை மற்றவர்கள் பலவீனமாகவும் தன்னம்பிக்கை இல்லாதவர்களாகவும் நினைக்கத் தொடங்குகிறார்கள்.
அதிகமாக கெஞ்சி நம்முடைய வேலையை சாதித்துக் கொள்வது நமக்கும், மற்றவர்களுக்கும் இடையேயான உறவுகளை பாதிக்கிறது. ஏனெனில், கெஞ்சுவதன் மூலம் நாம் மற்றவர்களுக்கு அழுத்தம் கொடுக்கிறோம். இது உறவுகளில் விரிசல்களை ஏற்படுத்தி நம்மை தனிமைப்படுத்தி விடும்.
கெஞ்சுதல் என்பது நாம் தன்னிறைவு அடையாமல் மற்றவர்களை நம்பி வாழ வேண்டிய நிலைக்கு தள்ளுகிறது. இது நம் சுதந்திரத்தை கட்டுப்படுத்தி, நம் வாழ்க்கையை மற்றவர்களின் கைகளில் ஒப்படைகிறது.
சதா எல்லா விஷயங்களுக்கும் கெஞ்சிக்கொண்டே இருந்தால், அது நம் மனதில் எதிர்மறை எண்ணங்களை விதைக்கிறது. ஏனெனில், கெஞ்சுவதன் மூலம் நம்மை நாமே குறைத்து மதிப்பிடுகிறோம். இது நம் மனதை பாதித்து, மன அழுத்தம், பதட்டம் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
எனவே, எந்த சூழ்நிலைகளிலும் இனி யாரிடமும் கெஞ்சாமல், உங்களுக்கான விஷயங்களை நீங்களே செய்துகொள்ள முயலுங்கள். யாரிடமும் எதற்காகவும் கெஞ்சி உங்களுக்கான காரியத்தை சாதிக்காதீர்கள். குறிப்பாக, பிறரது அன்பை கெஞ்சி வாங்க முயலாதீர்கள். உங்கள் மீது உண்மையான அக்கறை இருப்பவர்கள் எந்த எதிர்பார்ப்பும் இன்றி உங்கள் மீது அன்பு காட்டுவார்கள்.
கெஞ்சுதல் என்பது உங்களின் தனிப்பட்ட வளர்ச்சியைத் தடுக்கும் செயல். இது உங்கள் தன்னம்பிக்கையைக் குறைத்து, பலவீனப்படுத்தி, வாழ்க்கையை பெரிதாக பாதிக்கிறது. உங்களை நம்பி, உங்கள் திறமைகளைப் பயன்படுத்தி உங்களால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.