“நேற்று என்பது உடைந்த பானை. இன்று என்பது கையில் உள்ள வீணை. நாளை என்பது மதில்மேல் பூனை”. இது ஒரு அர்த்தம் நிறைந்த பொன்மொழி. உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சி அடையச் செய்யும் மூன்று வாக்கியங்கள். நேற்று நடந்து நடந்ததுதான். இனி அதை நம்மால் எதுவும் செய்ய முடியாது. அது கடந்த காலம். நாளை என்ன நடக்கப் போகிறது என்பதை யாராலும் சொல்ல முடியாது. அது வருங்காலம். இன்று என்பது நிகழ் காலம். இன்று நாம் ஏன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளுவோம்.
நம்மில் பலர் கடந்த கால நிகழ்வுகளை மனதில் ஆழமாகப் பதிய வைத்து அடிக்கடி அவற்றை நினைத்து தனக்குத்தானே வருந்திக் கொண்டிருப்பார்கள். “நான் அப்படி இருந்தேன். இப்படி இருந்தேன். எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குதுன்னே தெரியலையே. நாளைக்கு என்ன ஆகுமோன்னு நெனைச்சாலே பயமா இருக்கு” என்பது மாதியாக பிறரிடம் பேசிக் கொண்டிருப்பார்கள். நேற்று நடந்தது அது நல்லதோ கெட்டதோ. நடந்ததை நினைத்து வருத்தப்படுவதால் எதுவும் மாறிவிடப் போவதில்லை என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
இன்று உங்களைத் தேடி ஒரு பிரச்னை வருகிறது என்றால் அதற்காகக் கவலைப்பட ஆரம்பித்து விடாதீர்கள். எல்லா பிரச்னைகளுக்கும் ஒரு தீர்வு இருக்கிறது அல்லவா? அதை மகிழ்ச்சியோடு திடமான மனதோடு எதிர்கொள்ளத் தயாராகுங்கள். பிரச்னைக்கான காரணம் என்ன என்பதைக் கண்டறியுங்கள். கவலைப்படுவதால் பிரச்னை தீர்ந்து விடுமா என்ன?
உதாரணமாக இன்று உங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து கவலைப்படுகிறீர்கள் என வைத்துக் கொள்ளுவோம். இரண்டொருநாளில் அந்த பிரச்னை தீர்ந்து உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படலாம். அந்த இரண்டொரு நாளும் பிரச்னையை நினைத்து நீங்கள் கவலையிலேயே மூழ்கி இருந்தீர்கள் என வைத்துக் கொள்ளுவோம். அப்படியெனில் அந்த கவலையால் இரண்டு நாட்களும் மகிழ்ச்யை இழந்திருப்பீர்கள் அல்லவா? பிரச்னை சுமூகமாக தீர்ந்தபிறகு அடடா நாம் இரண்டு நாட்கள் தேவையில்லாமல் கவலைப்பட்டுக் கொண்டிருந்தோமே என்று உங்கள் மனது நினைக்கக்கூடும். பிரச்சினை என்றால் கவலை ஏற்படுவது இயல்புதான். அதற்காக அதையே நினைத்து மனமுடைந்து தொய்ந்து போகாதீர்கள்.
சிலர் எதிர்காலத்தை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். நாளை என்ன நடக்கும் என்பது தெரியாத நிலையில் எதற்காக நாம் கவலைப்பட வேண்டும். வரும் காலங்கள் உங்களுக்கு வசந்த காலங்களாக அமையக்கூடும். நல்லதே நடக்கும் என்று திடமாக நம்புங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும்.
இன்றைய பொழுது எனக்காக விடிந்திருக்கிறது என்று மனதில் நம்பிக்கை வையுங்கள். இன்று என்ன நடந்தாலும் நான் மகிழ்ச்சியாக இருக்கப் போகிறேன். இப்படி நினைத்து ஒருநாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருந்து பாருங்கள். நிச்சயம் மகிழ்ச்சியாக இருந்த அந்த ஒருநாள் உங்கள் வாழ்க்கையில் பொன்னாளாக அமையும். ஒவ்வொரு நாளும் இப்படி நினைத்துக் கொண்டே உங்கள் பணிகளை கவனமாக செய்தபடி அனைவரிடமும் கோபப்படாமல் அன்பாகப் பேசி நடந்து பாருங்கள். முடிந்தால் பிறருக்கு உங்களால் முடிந்த சிறுசிறு உதவிகளைச் செய்யுங்கள். அவர்கள் உங்களுக்குச் சொல்லும் நன்றி என்ற வார்த்தை உங்கள் மனதில் மகிழ்ச்சியை உருவாக்கும். ஒவ்வொரு நாளும் மனதானது மகிழ்ச்சியால் நிரம்பும் போது வாழ்க்கையின் மீது உங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை பிறக்கும்.
இந்த நாள் இனிய நாள். காலை எழுந்ததும் மகிழ்ச்சியாக எழுந்திருங்கள். இந்த நாள் முழுவதும் என்னுடையது. மகிழ்ச்சிகரமாக இருக்கப் போகிறது. அப்படி இல்லையென்றாலும் அதை நான் மகிழ்ச்சிகரமாக மாற்றிவிடுவேன் என்று உங்களுக்குள் நீங்களே சபதம் எடுத்துக் கொள்ளுங்கள்.
பொழுது எல்லோருக்கும் ஒரே மாதிரியாகத்தானே விடிகிறது. எல்லாவற்றிற்கும் மனம்தான் காரணம் என்பதை நம்புங்கள். மனதில் உறுதிவேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும். பிறகென்ன இந்த நாள் மட்டுமல்ல. இனி வரும் நாட்கள் எல்லாம் உங்களுக்கு மறக்க இயலாத நாட்களாக மகிழ்ச்சிகரமான நாட்களாக அமையும். இந்த நாள் இனிய நாள். இந்த நாள் நமது நாள்.