சேகரும் ராஜாவும் பள்ளிக்காலத்தில் இருந்தே நண்பர்கள். சேகர் எப்போதும் ஏதாவது ஒரு வழியில் முயற்சி செய்யும் நேர்மறை சிந்தனையாளன். ராஜா எதை செய்தாலும் அதில் இருக்கும் குறைகளை கண்டுபிடித்து செய்யத் தயங்கும் எதிர்மறை எண்ணங்களை மனதில் விதைத்துக் கொண்டிருப்பவன்.
இருவரும் ஒருமுறை சந்திக்கிறார்கள். அப்போது ராஜா சொல்கிறான் "சேகர் எப்போதுமே எனக்குள் ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கிறது. நான் செல்லும் வழிகள் எல்லாம் அடைத்து விடுகிறது. எவ்வளவு முயற்சி செய்தும் அடைத்த வழிகளில் செல்ல முடிவதில்லை. மீண்டும் புதிதாக முயற்சிக்க வேண்டியதாக இருக்கிறது. இதிலேயே என் வாழ்க்கை கரைந்துவிடும்போல இருக்கிறது" என்றெல்லாம் புலம்புகிறான்.
சேகர் சொல்கிறான் "நண்பனே நானும் இப்படித்தான் ஒரு காலத்தில் ஒரு வழி அடைத்து விட்டால் வேறு வழியே இல்லை என்று புலம்பி கொண்டிருந்தவன். புத்தருக்கு போதி மரத்தடியில் புத்தி வந்தது போல் ஒரு லிஃப்ட் தான் எனக்கு ஞானத்தை தந்தது எப்படி என்று கேட்கிறாயா?
ஒருமுறை செய்த தொழில் நசிந்து தோல்வி பயத்தில் இருந்த நான் ஒரு அலுவலக மாடிக்கு செல்ல லிஃப்ட்டில் ஏறி பொத்தானை அழுத்தினேன். அது மேலே சென்றது பார்த்தால் கதவு திறக்கவே இல்லை. நானும் எவ்வளவோ முயற்சி செய்தும் கதவு திறக்கவில்லை. சரி என்று நான் கீழே வந்தேன். அப்போது மேலும் சிலர் என்னுடன் ஏறினார்கள். சரி இவர்கள் சரியாக மாட்டிக் கொள்ளப் போகிறார்கள் நாமும் சென்று பார்ப்போம் என்று அவர்களுடன் மேலே சென்றேன். லிஃப்ட் நின்றது. நான் என்ற பக்கம் கதவு திறக்கவில்லை. இவர்களும் மாட்டிக்கொண்டார்கள் என்று சிரித்தபடி பார்த்தால் எனக்கு பின் வந்தவர்கள் லிப்டின் பின்னால் இருந்த மற்றொரு கதவு திறக்க அதன் வழியே வெளியேறிக் கொண்டிருந்தார்கள். இந்த இடத்தில் நான் முட்டாளாக போனேன்.
ஆனால் தோல்வி பயத்தில் இருந்த எனக்கு அந்த இடத்தில் பொறி தட்டியது. ஒரு வழி அடைத்து இருக்கலாம் ஆனால் மறு வழி திறந்து இருக்கிறது என்று. இதேதான் நண்பா எல்லா விடயத்திலும் நிகழும். அன்றிலிருந்து நான் இதை மனதில் பதிய வைத்துக் கொண்டு என் செயல்களில் வெற்றியை பெற்றுக் கொண்டிருக்கிறேன் இதையே நீயும் முயற்சித்து பார். நிச்சயம் உனக்கு ஒரு வழி கிடைக்கும். பூட்டிய கதவைத் திறப்பதற்கு முயற்சி செய்து நேரங்களை வீணடிப்பதை விட வேறு வழியை தேடி கண்டுபிடிப்பது மிக எளிது" என்று சேகர் சொல்ல மனதில் நம்பிக்கையுடன் கிளம்பினான் ராஜா.
வெற்றியை நோக்கி இலக்குடன் செல்லும்போது சில சமயம் நாம் நினைத்தது நடக்கும். சில சமயம் நடவாது. ஆனால் நாம் நினைத்ததை அடைய வேறுவழி எப்போதும் இருக்கும். அதைத்தேடி மீண்டும் பயணத்தை தொடர முயற்சி செய்யுங்கள் அதை விட்டு பூட்டிய கதவைத் திறக்க முயற்சி செய்யாதீர்கள். இதனால் நமது நேரங்களும் செயல் திறனும் உற்சாகமும் குறைந்து நமக்கு பின்னடைவை தரும். ஆகவே எதனால் இந்த வழி அடைத்தது என்பதை ஆராய்ந்து வேறு வழியில் பயணித்து அந்த இலக்கை அடைவது புத்திசாலித்தனம்.