உங்களின் பலம் வெற்றிகளில் இருந்து வருவதல்ல. உங்களின் போராட்டங்கள்தான் உங்கள் வலுவைக் கட்டமைக்கின்றன".~ Arnold Schwarzenegger.
போராட்டங்கள் இல்லாத வெற்றி எது? எந்த ஒரு மனிதரும் அவர் எந்த நிலையில் இருந்தாலும் சாதிப்பதற்கு ஊக்கமாக அமைவது அவரவரின் போராட்டங்களே. போராட்டங்களின் விதங்கள் வேண்டுமானால் வேறுபட்டு இருக்கலாம். ஆனால் அடிப்படை அது தரும் வலிகளும் அவமானங்களும்தான். இந்த நிலை அனைவருக்கும் பொதுவானதே. ஆனால் அதை எதிர் கொண்டு பெறும் வெற்றியில் தான் சிலர் பின்தங்கி விடுகின்றனர்.
சாதித்த மனிதர்களின் கதைகளை ஊன்றி கவனித்து பாருங்கள் ஏதோ ஒரு வலியின் பின்னணியில்தான் அவர் சாதித்திருப்பார். எல்லா வசதிகளும் இருந்தும் எந்த இலக்கும் இன்றி பயணித்து மடிவது என்பது பயிரின் இடையே விளையும் களைகள் போல பயனற்று வீழ்வது வாழ்க்கை அல்ல.
"தடம் பார்த்து செல்பவன் மனிதன் தடம் பதித்து செல்பவன் மாமனிதன்" என்னும் கூற்றுக்கு ஏற்ப போராட்டங்களை தாண்டி வெற்றி பெறுவதில் தான் இருக்கிறது. இதற்குச் சான்றாக பலரின் வாழ்க்கை வரலாறுகள் என்றாலும் அதில் ஒரு தங்க மகனின் வெற்றி இங்கு.
1995 இல், தமிழ்நாட்டின் சேலத்தில் உள்ள கிராமத்தில் பிறந்த மாரியப்பன் தங்கவேலுவின் குழந்தைப்பருவ ஆண்டுகள் துன்பங்கள் மற்றும் போராட்டங்களால் நிரப்பப்பட்டன. ஆம். ஐந்தாவது வயதில் பொறுப்பற்ற குடிமகனால் நடந்த ஒரு சோகமான விபத்து அவர் காலை இழக்க வைத்து நிரந்தர இயலாமைக்கு ஆளாக்கியது.
அவரது குடும்பத்தை தந்தையும் விட்டுச்செல்ல பெரிய குடும்பத்தை தாங்கிய தாய் சரோஜா தந்த தைரியத்தில் மாரியப்பன் நாட்கள் பிறரின் பரிதாப பார்வையில் கழிந்தது.
செங்கல் தூக்கியும், மரக்கறி விற்றும் கஷ்டப்பட்டு தங்களை காப்பாற்றியதைக் கண்ட மாரியப்பன் வலிகளுக்கு இடையில் சாதனை படைக்க மனதில் உறுதிகொண்டார்.
தனது காலை இழந்தநிலையிலும் மாரியப்பனுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் இருந்தது. இவரது பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் ராஜேந்திரன் பரிந்துரைப்படி, இவர் உயரம் தாண்டுவதில் பயிற்சி எடுத்துக் கொண்டார். கடுமையான பயிற்சிகள்… தளரவில்லை மாரியப்பன். ஆதரவுக்கு தாயாரும் ஆசிரியரும்.
பலன் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் தூனிசியாவில் நடந்த ஐபிசி கிராண்ட் பிரீ போட்டியில் 1.78 மீ தாண்டி இரியோ மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கத் தகுதிபெற்று விளையாடி இந்தியாவின் தங்கமகனானார். தொடர்ந்து 2020 டோக்கியோவில் நடைபெற்ற போட்டியில் வெள்ளியும் தற்போது 2024 ல் பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் வெண்கலமும் வென்று நாட்டுக்கும் தனது தாய் மற்றும் ஆசிரியருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
மாரியப்பன் மனதுக்கு சாதிக்கும் வலு சேர்த்தது அவர் எதிர்கொண்ட போராட்டங்களே. வெற்றி தரும் வலுவை நாமும் நமது போராட்டங்கள் மூலம் பெறுவோம். சாதிப்போம்.