
அதிகாலை பிரம்ம முகூர்த்தம் என்பார்கள். அந்த நேரம் மிக அமைதியான நேரம். பறவைகள் கீச்சிட்டபடி வானில் பறக்கும் நேரம். கதிரவன் எழும் நேரம். இப்படியான நேரத்தை வெற்றியாளர்கள் தங்களுக்கு பிடித்த பழக்கமாக மாற்றி கொள்கிறார்கள். ஆகையால்தான் அவர்கள் வெற்றியாளர்களாக திகழ்கிறார்கள்.
அப்படி நீங்களும் வெற்றியாளர்களாக திகழ இந்த பழக்கங்களைப் படித்து கடைபிடியுங்களேன். அதிகாலையில் கதிரவன் எழுமுன்னே எழுவது.
பெரும்பாலானவர்களுக்கு அதிகாலை நேரத்தில்தான் அயர்ந்த உறக்கம் வரும். ஆனால் வெற்றியாளர்கள், அந்த உறக்கத்தை புறந்தள்ளி நாள்தோறும் அதிகாலை எழும் பழக்கத்தை மேற்கொள்கிறார்கள். ஒரு நாளும் இதில் அவர்கள் சமரசம் செய்து கொள்வதில்லை.
அன்றைய வேலையை அட்டவணைப்படுத்துதல்
வெற்றியாளர்கள் உறக்கத்தில் எழுந்து நின்று என்ன செய்வது? எப்படி செய்வது? என ஒரு நாளும் திகைத்து நிற்பதில்லை. முந்தைய நாளே அடுத்த நாளுக்கான வேலைகளை அழகாக பட்டியலிட்டு அதை மறுநாள் நிறைவேற்றுகிறார்கள்.
உடற்பயிற்சி அல்லது யோகா பயிற்சி
வெற்றியாளர்கள் சிறிது நேரம் உடற்பயிற்சி அல்லது யோகா பயிற்சியை மேற்கொள்கிறார்கள். இப்படி செய்வதால் உடலில் எண்டோர்பின்களை வெளியிட்டு மனநிலையை உற்சாகமாக வைக்க உதவுகிறது. பின் தியான பயிற்சிக்கு செல்கிறார்கள்.
தியான பயிற்சி மற்றும் சுவாச பயிற்சி
வெற்றியாளர்கள் நாள்தோறும் அதிகாலையில் காலைக்கடனை முடித்துவிட்டு பத்து நிமிடங்கள் சுவாச பயிற்சியும், பின்னர் தியான பயிற்சியும் மேற்கொண்டு உடலையும் மனதையும் மகிழ்ச்சிகரமான நிலையில் வைத்துகொண்டு அன்றைய அலுவல்களில் ஈடுபடுகிறார்கள்.
தங்கள் இலக்குகளை மதிப்பீடு செய்தல்
வெற்றியாளர்கள் பெரிய இலக்குகள் மட்டுமல்லாது சிறிய இலக்குகளை கூட நிர்ணயித்து அவற்றை மதிப்பீடு செய்கிறார்கள். இப்படி செய்வதால் அவர்களுக்கு கடினமான இலக்காக அமையாமல் இலகுவான இலக்காக அமைந்துவிடுகிறது.
நீண்ட கால இலக்கு
குறுகிய கால இலக்கு, அந்த நாளுக்கான முக்கிய முன்னுரிமை ஆகியவற்றை சிறிய நாட்குறிப்பு புத்தகத்தில் எழுதி வைத்து கொள்ளும் பழக்கத்தை மேற்கொள்கிறார்கள்.
அதிகாலையில் அலைபேசியை தவிர்த்தல்
பெருமபாலான மக்கள் காலை எழுந்தவுடன், அலைபேசி வாட்சப் செய்திகள் மற்றும் தேவையற்ற செய்திகளில் நாட்டம் செலுத்துகிறார்கள். ஆனால் வெற்றியாளர்கள் அப்படி செய்வதற்கு பதிலாக, அமைதியான நிலையில் இசையைக் கேட்பது, பாடல் கேட்பது அல்லது ஆழ்ந்த கருத்துக்கள் அடங்கிய புத்தகங்களைப் படித்தல் ஆகியவற்றை மேற்கொள்கிறார்கள்.
உடலுக்கும் மனதிற்கும் உகந்த உணவை உண்ணுதல்
பெரும்பாலான வெற்றியாளர்கள் காலையில் அதிக புரத சத்துக்கள் அடங்கிய உணவை காலை உணவாக ஏற்றுக் கொள்கிறார்கள். உடலுக்கும் மனதிற்கும் எந்த உணவுகள் உகந்த தோ அந்த உணவுகளையே உண்ணும் பழக்கத்தை கடைப்பிடிக்கிறார்கள்.
ஒழுக்கத்தை மேற்கொள்ளல்
வாழ்க்கையில் ஒருவன் வெற்றியாளராக மாற வேண்டுமென்றால், முதலீடு உழைப்ப மட்டுமல்லாது ஒழுக்கமும் வேண்டும். இந்த ஒழுக்கம் பற்றி தமிழ் மறையான திருக்குறளில் இப்படி ஒரு குறள் உள்ளது
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.
ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும், அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும் என தமிழ் வல்லுநர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
ஒழுக்கத்தை மேற்கொள்வதோடு தங்களுடைய உணர்ச்சிகளை ஆராய்ந்து அதனை கட்டுப்படுத்தி தங்கள் மேன்மைக்காக மடைமாற்றுகிறார்கள்.
அவர்கள் அவர்களாகவே இருத்தல்
பெரும்பாலான மக்கள் குடும்ப வாழ்க்கையில் ஒரு முகம் பொது இடத்தில் ஒரு முகம் என முகமூடி அணிந்து கொண்டு வாழ்க்கையை நடத்துகிறார்கள். ஆனால் வெற்றியாளர்கள் ஒருபொழுதும் அப்படி நடந்து கொள்வதில்லை. அவர்கள் அவர்களாகவேநாள்தோறும் இருக்கிறார்கள்.
இப்படியான பழக்கங்களை மேற்கொள்வதால்தான் அவர்கள் வெற்றியாளர்களாக மாறி உள்ளார்கள். எனவே நீங்களும் வெற்றியாளர்களாக மாற இந்த பழக்கத்தைக் மேற்கொள்ளலாமே!