பகைவனையும் நண்பனாக்கும் 'சொல்' ஆயுதம்... உங்கள் நாக்கிலே ஒளிந்திருக்கிறது!

Words that hurt, Words that heal book
Word power Tamil motivation
Published on

நாம் ஒரு நாளில் எத்தனையோ வார்த்தைகளைப் பேசுகிறோம். சில நேரங்களில் கோபத்தில் கத்துகிறோம், சில நேரம் விளையாட்டாகக் கிண்டல் செய்கிறோம். "சும்மா பேச்சுக்குத்தானே சொன்னேன்" என்று நாம் அதைச் சாதாரணமாகக் கடந்து போகிறோம். ஆனால், நம்முடைய ஒரு சொல் இன்னொருவரின் வாழ்க்கையையே மாற்றும் வல்லமை கொண்டது (Word power) என்பதுதான் நிதர்சனமான உண்மை. ஜோசப் டெலுஷ்கின் எழுதிய ‘Words that hurt, Words that heal’ என்ற புத்தகம் இந்த உண்மையை மிக அழகாக விளக்குகிறது.

1. வார்த்தைகள் ஆழப் பதியும் சுவடுகள்:

நாம் சொல்லும் வார்த்தைகள் காற்றில் கரைந்து போவதில்லை; அவை கேட்பவர் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொள்கின்றன. உதாரணமாக, ஒரு குழந்தையிடம் "உனக்கு ஒன்றும் தெரியாது, நீ எதற்கும் லாயக்கில்லை" என்று அடிக்கடி சொன்னால், அந்தப் பிஞ்சு மனம் அதை அப்படியே நம்பத் தொடங்கிவிடும். வளர்ந்து பெரிய ஆளான பின்பும், 'நமக்கு ஒன்றும் தெரியாது' என்ற தாழ்வு மனப்பான்மையிலேயே அந்த நபர் வாழ நேரிடும்.

நாம் எறியும் கற்களை விட, நாம் வீசும் சொற்கள் அதிக வடுக்களை ஏற்படுத்தும். எனவே, மற்றவர்களின் தன்னம்பிக்கையைச் சிதைக்கும் சொற்களைத் தவிர்ப்பது அவசியம்.

2. உண்மையும் ஒரு ஆயுதமே:

“நான் உண்மையைத்தானே சொல்கிறேன், இதில் என்ன தவறு?" என்று பலர் மற்றவர்களைப் பற்றிப் பின்னாடி பேசுவதை நியாயப்படுத்துகிறோம். ஆனால், ஒருவரைப் பற்றிய ரகசியத்தையோ அல்லது அவரின் குறையையோ அவர் இல்லாத இடத்தில் பேசுவது மிகப்பெரிய தவறு. பொய்களை விட உண்மையான கிசுகிசுக்கள் ஒரு மனிதனின் மரியாதையை மொத்தமாகச் சிதைத்துவிடும். ஒருவரின் பலவீனத்தை ஊர் முழுக்கப் பேசுவது அவருக்குச் செய்யும் துரோகம். பேசப்படும் விஷயம் உண்மையாக இருந்தாலும், அது ஒருவரை காயப்படுத்தும் என்றால் மௌனமாக இருப்பதே அறம்.

3. திருத்தும் கலை:

குழந்தைகளோ அல்லது மற்றவர்களோ தவறு செய்துவிட்டால் அவர்களைத் திருத்த வேண்டியது அவசியம். ஆனால், “உனக்கு அறிவே இல்லையா? ஏன் இப்படிப் பண்ணினாய்?" என்று அதிகாரத்தோடு கேட்பது காயத்தைத்தான் உண்டாக்குமே தவிர, மாற்றத்தை ஏற்படுத்தாது. அதற்குப் பதில், ‘நீ நன்றாகத்தான் செய்கிறாய், ஆனால் இதை இப்படிச் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்" என்று அன்பாகச் சொல்ல வேண்டும். அன்போடு சொல்லப்படும் திருத்தம் ஒரு வழிகாட்டுதலாக அமையும்; கோபத்தில் சொல்லப்படும் வசவு ஒரு முள்ளாகக் குத்தும்.

4. மௌனம் ஒரு அநீதி:

தவறான வார்த்தைகளைப் பேசுவது எவ்வளவு பிழையோ, சொல்ல வேண்டிய நல்ல வார்த்தைகளைச் சொல்லாமல் மௌனமாக இருப்பதும் அதே அளவு பிழைதான். ஒருவரை யாராவது அநியாயமாகத் திட்டும்போது நீங்கள் பேசாமல் வேடிக்கை பார்த்தால், நீங்களும் அந்த அநீதிக்குத் துணை நிற்கிறீர்கள் என்று அர்த்தம். அதேபோல், ஒருவரைப் பாராட்டத் தோன்றும் போது தயங்காமல் சொல்லிவிடுங்கள். நல்ல சொற்களைப் பகிர்ந்து கொள்ளாமல் மனதிற்குள்ளேயே பூட்டி வைப்பதால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை.

இதையும் படியுங்கள்:
"நான் யார்?" - இந்த கேள்விக்கு விடை தெரிந்தால் உங்கள் வாழ்க்கை ராயல் தான்!
Words that hurt, Words that heal book

5. பாராட்டு - ஒரு எளிய மருந்து:

“இன்னைக்குச் சாப்பாடு ரொம்ப நல்லா இருக்கு", “நீ இந்த ட்ரெஸ்சில் அழகா இருக்க", "இந்த வேலையைச் சூப்பரா செஞ்சிருக்க" - போன்ற சின்னச் சின்னப் பாராட்டு வார்த்தைகள் ஒருவரை நாள் முழுவதையும் உற்சாகமாக வைத்திருக்கும். நல்ல வார்த்தைகளைச் சொல்லப் பணம் தேவையில்லை. ஆனால், அது தரும் பலன் கோடிகளுக்குச் சமம். மற்றவர்களின் உழைப்பை அங்கீகரிக்கும்போது, அவர்கள் இன்னும் சிறப்பாகச் செயல்பட அது ஊக்கமருந்தாக அமையும்.

வார்த்தை என்பது வெறும் ஒலியல்ல; அது ஒரு ஆற்றல். ஆகவே பேசும் முன் ஒரு நிமிடம் யோசிப்போம். நம் வாயிலிருந்து வரும் சொல் ஒருவரை வாழ வைக்கப்போகிறதா அல்லது வீழ்த்தப்போகிறதா? நாவடக்கம் என்பது வெறும் ஒழுக்கம் மட்டுமல்ல, அது சக மனிதர்கள் மீது நாம் காட்டும் ஆகச்சிறந்த அன்பு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com