
வார்த்தைகள் என்று சாதாரணமாக சொல்லி விடுகிறோம்… ஆனால் அந்த வார்த்தைகளின் தாக்கத்தை உணர்ந்தால் தான்புரியும்.. ஒருவனை மாடு என்றால்…..சுருக்கென்று கோபம் வந்து “நான் என்ன மாடா?" என்பான். "நீ குருடா?" என்றால் எப்படி கோபிப்பான். அதையே, நீங்கள் “பசு மாதிரி இருக்கீங்க” என்றால் அவருக்கு உச்சி குளிரும். மாடும், பசுவும் ஒன்றேதான். அதைக் கையாளும் விதத்தில் இருக்கிறது. நீ குருடா? என்பதை, “நீங்க கவனிக்கலைப் போலிருக்கே” என்பது மனதைக் காயப்படுத்தாத வார்த்தையாகும்.
அலுவலகத்தில் பணியாளர் ஒருவர் ; சற்றே கண்ணயர்ந்து விடுகிறார். நீங்கள் ஒரு உயர் அலுவலர் ; உடனே “என்ன மிஸ்டர் ; ஆபிஸ்ல தூங்கறீங்களா… தூங்கறதா இருந்தா வீட்டுக்கு போங்க” என்றால்…. பணியாளர் உள்ளுக்குள் குமைவார். அதையே… “ஒடம்புக்கு சுகமில்லையா….. இல்லே இராத்திரி சரியா தூங்கலையா”? என்று கேட்டால்…. அடுத்த நிமிடமே ஓடிப்போய் முகத்தை கழுவிக் கொண்டு தெளிவாக இருக்கைக்கு திரும்புவான்.
வீட்டில் வைக்கும் ரசத்தில் உப்பு சற்று தூக்கல்… உடனே மனைவியிடம் “சே… ஒரு ரசம் வைக்கக்கூட துப்பில்லே!… ஒங்கம்மா என்ன சமையல் சொல்லிக் கொடுத்தாங்களோ?" என்று தாம்-தூம் என்று குதித்தால்… அன்று இரவு “என்னங்க எனக்கு ஒடம்பு அசதியா இருக்கு…" என்பாள் மனைவி….."நீங்கள் ஓட்டலைத் தேடி போக வேண்டும் சாப்பிட…."
ஆனால்... “என்னம்மா … உன்னை எப்பவும் நெனைக்கிற மாதிரி செய்யறீயே” அப்படின்னு கேட்டு, ரசத்தில் உப்புத் தூக்கலை நாசுக்காக சொன்னால் “எம் புருஷனைப் போல வருமா?” என்று அடுத்த வீட்டுக்காரியிடம் பெருமிதம் கொள்வாள்.
ஒரு குடிலுக்கு திருடப் போனான் ஒருவன்…. அக்குடிலில் திருவோடு தவிர ஏதுமில்லை… திருடனுக்கு கோபமோ கோபம்…. குடிலில் இருந்த பெரியவரை ஏகத்துக்கும் பேசினான்.. ஆனால் அவர் கோபப்படவில்லை. “ஓ… இவர் ஒருமாதிரி ஆசாமியோ!” என முணுமுணுத்துக் கொண்டே வெளியே போக… “டேய் கதவை மூடிவிட்டு ….நன்றி சொல்லி விட்டு போடா…." கடுமையான குரல். அவன் எதிர்பார்க்கவில்லை… அவனும் கதவை மூடிவிட்டு “நன்றி பெரியவரே” என்று சொல்லி கிளம்பினான்.
சிலநாள் கழித்து, திருடனை கைது செய்து அரசன் முன்நிறுத்தினார்கள். அவன் எவ்வளவோ வாதித்தும்… அரசன் ஏற்கவில்லை… கடைசியாக “உனக்கு தெரிந்த யாராவது ஒருநபர் உனக்கு உத்தரவாதம் அளித்தால் விட்டு விடுகிறேன்" என்றார. அக்குடிலில் இருந்த பெரியவர் ஞாபகம் வர அதனைச் சொன்னான்.
அரசவைக் காவலர்கள் பெரியவரை அழைத்து வந்து அரசரின் முன்னால் நிறுத்த ...அவரும் “அவனை எனக்கு தெரியும்… எனக்கு நன்றி சொல்லி விட்டு போன நண்பன் தான்" என்றவுடன், திருடனை விடுதலை செய்தார் அரசன். திருடனைக் காப்பாற்றிய பெரியவர் ஒரு துறவி என்பது திருடனுக்கு தெரியாது!
வசந்த வார்த்தைகளைக் கையாண்டு வளமாக வாழலாமே.