நல்ல வார்த்தை சொல்ல வேண்டும் அன்பர்களே...

Kind persons
Kind persons
Published on

பல நேரங்களில் நல்லதாக, அன்பாக சொல்லப்படும் நான்கு வார்த்தைகள் ஏற்படுத்தும் தாக்கத்தை, பணத்தாலும், பொருளாலும் ஏற்படுத்த முடிவதில்லை.

அதுவும், துன்பமான காலங்களில் ஒருவன் சிக்கித் தவிக்கும் போது, அவனிடம் அன்பாகவும், ஆறுதலாகவும், நம்பிக்கையூட்டும் விதமாக சொல்லப்படும் வார்த்தைகள் ஏற்படுத்தும் நன்மைகளுக்கு அளவேயில்லை.

கல்கத்தா வீதிகளில் யாசகம் (பிச்சை) செய்துக் கொண்டிருந்த தொழுநோயாளி ஒருவரது உடல்நிலை மிகவும் மோசமாகி விட, அவர் அன்னை தெரசாவின் கருணை இல்லம் ஒன்றில் அடைக்கலம் புகுந்தார்.

சில இடங்களில் அழுகிய நிலையில் இருந்த அவர் உடலைச் சுத்தம் செய்து கொண்டிருந்த சேவகர் ஒருவர், ஒரு கட்டத்தில் அந்த நெடியைத் தாங்க முடியாமல் பின்வாங்க, அன்னை தெரசா அந்த வேலையை தானே மேற்கொண்டு தொடர்ந்தார்.

சிறிதும் முகம் சுளிக்காமல், நெடியைப் பொருட்படுத்தாமல் அன்னை தொடர்ந்து செய்த அந்தப் பணி, அந்தத் தொழுநோயாளியின் கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது. "அம்மா இது போன்ற அருவருக்க வைக்கும் வேலையைச் செய்ய உங்களுக்கு சிரமமாகத் தோன்றவில்லையா?" என்று அவர் கேட்டார்...

"சகோதரரே..! நீங்கள் அனுபவிக்கும் இந்த வேதனையுடன் ஒப்பிடும் போது, நான் செய்வது ஒரு சொல்லத்தக்க செயலே இல்லை," என்று அன்புடன் பதிலளித்தார் அன்னை தெரசா.

இதையும் படியுங்கள்:
அமைதியாக இருப்பது மட்டுமே இலக்கை வெல்லும் ரகசியம்… ஏன் தெரியுமா? 
Kind persons

அன்னையுடைய அந்தத் தன்னலமில்லாத சேவைக்கு இணையாக, அந்தத் தொழுநோயாளியின் இதயத்தைத் தொட்டது அந்த அன்பான வார்த்தைகள்.

சொற்கள்! சக்தி வாய்ந்தவை. அவை ஆக்கமும், அழிக்கவும் வல்லமை படைத்தவை. மற்றவர்கள் வருத்தத்தில் மூழ்கியிருக்கையில் ஆத்மார்த்தமாய் ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லுங்கள்.

வருத்தங்களும் தோல்விகளும் இயல்பானவை என்பதையும் அதைத் தாண்டாமல் யாரும் பெரிய வெற்றிகளை அடைந்ததில்லை என்பதை நினைவூட்டுங்கள். உங்களுக்குத் தெரிந்து அதே போன்ற நிலைகளில் இருந்து விடுபட்டு மேலுக்கு வந்தவர்கள் பற்றி எடுத்துச் சொல்லி தைரியப்படுத்துங்கள்.

அதன் மூலம் அதிலிருந்து மீண்டு வர அவர்களுக்கு நீங்கள் உதவுகிறீர்கள். காணும் ஒவ்வொரு திறமையையும் சுட்டிக் காட்டி வாழ்த்தத் தயங்காதீர்கள். ஒரு திறமை வெளிப்படுகையில் அடையாளம் காணப்பட்டு பாராட்டப்படும் போது அந்தத் திறமை வேரூன்ற உதவுகிறீர்கள்.

தங்கள் திறமைகள் மீது உண்மையிலேயே நம்பிக்கை ஏற்படும் வரை எல்லாத் திறமையாளர்களுக்கும் ஆரம்பத்தில் இதுபோன்ற நல்ல வார்த்தைகள் தேவைப்படுகின்றன. அந்த நல்ல வார்த்தைகளைச் சொல்ல என்றுமே தயங்காதீர்கள்.

இதையும் படியுங்கள்:
விரும்பியதை செய்ய முயற்சியுங்கள் வெற்றி நமதே!
Kind persons

நீங்கள் தொடர்ந்து நல்ல வார்த்தைகளை பேசி வந்தால் உங்கள் மனநிலை மட்டும் அல்ல உங்கள் வாழ்க்கையும் உயரும். ஒருவருடைய மதிப்பு உயர வேண்டுமென்றால், அது, அவர்கள் விடும் வார்த்தையில் தான் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com