எச்சரிக்கை: 'பர்ன் அவுட்' (burn out) ஆகிவிடாதீர்கள்! உங்கள் மூளையை மழுங்கடிக்கும் 'ஒர்க்கஹாலிசம்'!

அளவுக்கு மீறினால் உழைப்பும் நஞ்சு!
Workaholism and burnout
WorkaholismCredits AI Image
Published on

‘ஓடி ஓடி உழைக்கணும்! ஊருக்கெல்லாம் கொடுக்கணும்!’ என்பது நல்லதுதான். ஆனால், எதற்கும் ஓர் எல்லை உண்டு! எல்லைகள் மீறப்படும்போது எல்லாம் அபத்தமாகவும், ஆபத்தாகவும் முடியும். ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்பது உண்மைதானே!

அது ஓர் ஆராய்ச்சி நிறுவனம். புதிய நோய்களுக்கு மருந்தைக் கண்டுபிடித்து, பூலோக மக்களைக் காப்பாற்றும் புனிதமான தொழிலே அதன் பிரதான நோக்கம். ஆனந்த் அந்தப் பணியை விரும்பி ஏற்றவன். எல்லா கண்டுபிடிப்புகளிலும் அவனின் அயராத உழைப்பே முன்னிலை வகிக்கும். டீமிலுள்ள அனைவருக்கும் ஆனந்த் என்றால் உயிர்; அவனும் அப்படியே எல்லோரிடமும் பாசம் காட்டுவான். 30 வயதிலேயே பெரும் சாதனைகளைச் செய்வதாக அவன் 'டீம் ஹெட்' (Team Head) புகழ்வார். 50 வயதைக் கடந்த சீனியர்களும் அவனிடம் அன்பு பாராட்டுவார்கள். எல்லாம் மூன்று மாதங்கள் முன்பு வரைதான்!

இப்பொழுதெல்லாம் அவன் பணியில் பழைய உற்சாகமில்லை. ஆய்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் எட்டப்படுவதில்லை. ஏதேனும் கேட்டால் எரிந்து விழ ஆரம்பித்தான்! டீம் ஹெட் எதைக் கேட்டாலும் உதாசீனப்படுத்த ஆரம்பித்தான். அவரும் பொறுத்துப் பார்த்துவிட்டு, சி.இ.ஓ-விடம் (CEO) புகார் அளித்துவிட்டார்.

“என்ன சொல்கிறீர்கள்? நம்ம ஆனந்தா? நீங்களே அவரைப் பாராட்டிப் பலமுறை பேசியிருக்கிறீர்களே! நம்ம நிறுவனத்திற்கே அவர் 'அசெட்' (Asset) என்றெல்லாம் சொல்லியிருக்கிறீர்களே!” என்றார் சி.இ.ஓ.

“எல்லாம் உண்மைதான் சார்! அப்போ அப்படி 'பிரைட்டாக' (Bright) இருந்தார்; அதான் சொன்னேன். இப்போ ரொம்ப 'டல்லாக' (Dull) இருக்கிறார் சார்! அவரை நிறுவனத்திலிருந்து கூட நீக்கிவிடலாம், அந்த அளவுக்கு மோசமாகிவிட்டார். அவுட்புட்டே (Output) இல்லை. அட்லீஸ்ட் என் டீமிலிருந்தாவது மாற்றிவிட்டு, எனக்கு வேறொருத்தரைக் கொடுங்கள்!”

“இருங்கள்! அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துவிடாதீர்கள். அவர் ‘பர்ன் அவுட்’ (Burn Out) ஆகியிருக்கிறார் என்று நினைக்கிறேன். நான் சொல்வது புரிகிறதல்லவா? மெழுகுவர்த்தி தொடர்ந்து எரிந்தால் என்னவாகுமோ, அந்த நிலைதான்! எரிந்து அடங்கும் நிலை. எப்படி ஆல்கஹாலிசம் (Alcoholism) நம்மை மழுங்கச் செய்யுமோ, அதேபோலத்தான் ஒர்க்கஹாலிசமும் (Workaholism). அதாவது, தொடர்ச்சியான அதீத உழைப்பு ஒருவனின் மூளையை மழுங்கச் செய்திடும்! நம்ம ஆனந்த் அந்த நிலையில் இருப்பதாகத்தான் நினைக்கிறேன். அவருக்கு நல்ல ஓய்வுதான் தற்போதைய மருந்து. சரி, நல்ல முடிவாக எடுப்போம். அவர் போன்ற நல்லவர்களை நாம் இழந்திடக் கூடாது! அவரைச் சரிசெய்து திரும்பவும் பழைய நிலைக்கே கொண்டு வந்துவிடலாம். கவலைப்படாதீர்கள், நான் உடனடி நடவடிக்கை எடுக்கிறேன்!”

சொன்ன சி.இ.ஓ உடனடியாகச் செயலில் இறங்கினார். ஆனந்தைக் கூப்பிட்டு அன்பாகப் பேசினார். ஒரு மாதம் விடுமுறை கொடுத்தார். நிறுவனப் பொறுப்புகளை மறந்துவிட்டு நிம்மதியாக இருக்கக் கூறினார். ஒரு பெரிய தொகையை (Lump sum) ஆனந்த் கையில் கொடுத்து, விரும்பிய இடத்திற்குச் சென்று வரக் கேட்டுக்கொண்டார். தேவையென்றால் நிறுவனச் செலவிலேயே 'கவுன்சிலிங்கிற்கும்' ஏற்பாடு செய்வதாகக் கூறினார்.

உலக அரங்கில் ஜப்பானியர்களைப் போன்று சுறுசுறுப்பானவர்கள் இல்லை என்று சொல்வார்கள். மகாத்மா காந்தியடிகள் சொன்னதைப்போல, அவரவர் பணியை அவரவரே செய்து கொள்வதில் அவர்கள் வல்லவர்கள். உலக அளவிலான கால்பந்துப் போட்டியில் அவர்கள் அணி தோற்ற நேரத்திலும், மைதானத்தைச் சுத்தப்படுத்திவிட்டுத்தான் வெளியேறினார்கள் என்ற செய்தியைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் கண்டு வியந்தோம்.

அதே ஜப்பானில், 1990-களில் பலர் அதிக நேரம் பணியாற்றித் தங்கள் பணியிடங்களிலேயே இறந்து விழுந்தார்களாம். அவ்வாறு இறந்தவர்களுக்குத் தியாகி பட்டம் வழங்கி கௌரவித்தார்களாம். ஜப்பானிய மொழியில் அதற்கு ‘கரோஷி’ (Karoshi) என்று பெயராம். பல நிகழ்வுகளுக்குப் பிறகு 'கரோஷி' தேவையற்றது என்று உணர ஆரம்பித்தார்கள். பணிக்காக உயிரையே தியாகம் செய்வது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என்ற எண்ணம் வளர ஆரம்பித்தது.

ஆனாலும், தங்களைத் தாங்களே அதிக நேரம் உழைப்பில் ஈடுபடுத்திக்கொண்டு, அதன் காரணமாகவே உலகில் ஆண்டுக்கு 7.50 லட்சம் பேர் இறப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் (WHO) விபரம் வெளியிட்டு எச்சரிக்கிறது.

கடின உடல் உழைப்பை வழங்குபவர்களே விரைவில் களைப்படைந்து ஆரோக்கியத்தை இழப்பார்கள் என்று நாம் எண்ணுகிறோம். ஏசி அறையில் அமர்ந்து மூளை வேலை செய்பவர்களுக்குக் களைப்பேதும் வர வாய்ப்பில்லை என்பதே நம்மில் பெரும்பாலோரின் எண்ணம். அது மிகத் தவறானது என்கிறார்கள் ஆய்வாளர்கள். அவர்களுக்கும் களைப்பு ஏற்படுவது இயற்கை என்றும், அவர்களும் முறையாக ஓய்வெடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ஆனந்தைப் போலவே அல்லல்பட நேரிடும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

ஒர்க்கஹாலிக் (Workaholic) ஆக இருப்பவர்கள், ஓய்வின் அவசியத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். தொடர்ந்து எரியும் மெழுகுவர்த்தி சீக்கிரமே அணைந்துவிடும். அடிக்கடி அணைத்து வைக்கப்பட்டுப் பாதுகாப்படும் மெழுகுவர்த்தி நீண்ட நாட்களுக்கு வரும். இவர்கள் தாங்கள் செய்யும் எந்தச் சிறு தவறையும் கூட மன்னிக்க மாட்டார்கள். அவ்வாறு இல்லாமல், தாங்களும் சாதாரண மனிதர்கள்தான் என்பதை உணர்ந்து, தங்களைத் தாங்களே மன்னித்துக்கொள்ள வேண்டும். தவறு நேர்கையில், “கவலைப்படாதே சகோதரா! அடுத்த முறை சரியாகச் செய்துவிடலாம்!” என்று தங்களைத் தாங்களே தேற்றிக்கொள்ள வேண்டும்.

பணியை மட்டுமே பிரதானமாகக் கருதாமல், பிறவற்றிலும் கவனத்தைச் செலுத்த வேண்டும். குடும்பம், உறவு, ஓய்வு என்று உற்சாகமாக வாழ முன்வர வேண்டும். மனிதப் பிறவி ஒருமுறைதான் என்பதை மனதில் நிறுத்த வேண்டும்.

ஒன்றரை மாத விடுமுறைக்குப் பின் வந்து சேர்ந்த ஆனந்த், உற்சாகமாகப் பணியாற்றினார். புதிய நோய்க்கான மருந்து கண்டுபிடிப்பில் அந்த நிறுவனம் விருது பெற்றது! விருது பெறப் பெரிதும் உதவிய ஆனந்திற்கு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் விருதை அளித்துக் கௌரவிக்க, அந்த அரங்கமே கைதட்டலில் அதிர்ந்தது!

இதையும் படியுங்கள்:
'மோட்டிவேஷன்' டோஸ்: ஏழ்மையில் பிறந்து, வாழ்க்கையில் உயர்ந்து, சிகரம் தொட்டவரின் கதை!
Workaholism and burnout

பணியாளர்களே! பர்ன் அவுட் ஆகிவிடாதீர்கள்! நிறுவனத்தினரே! பணியாளர்களுக்கு நிம்மதி அளித்து நல் உழைப்பைப் பெறுங்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com