'மோட்டிவேஷன்' டோஸ்: ஏழ்மையில் பிறந்து, வாழ்க்கையில் உயர்ந்து, சிகரம் தொட்டவரின் கதை!

Lal Bahadur Shastri motivation story
Lal Bahadur Shastri motivation storyImg credit: AI Image
Published on

"வாழ்க்கையில் ஆயிரம் அனுபவங்களைப் பெற்றுவிட்டேன் என்று ஒருவன் சொன்னால், அத்தனை அனுபவங்களிலும் அவன் என்றைக்கும் மறக்க முடியாத ஒன்று இருக்குமானால் அதுதான் ஏழ்மை" என்கிறார் ஜே.ஜி.ஹாலண்ட்.

பெரிய பெரிய சாதனைகளை புரிந்தவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்த்தால் அவர்களில் அனேகமானவர்கள் ஏழ்மையை ஏணிப்படியாக்கியவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்களை உயர தூண்டியதே அந்த ஏழ்மைதான். இதிலிருந்து எப்படி முன்னேறுவது, நம் வீட்டை காப்பது, நம் நாட்டை காப்பது என்று அனுதினமும் சிந்தித்தவாறே அவர்கள் உழைத்த உழைப்பு தான் எப்படியும் முன்னேறி விடலாம் என்ற தன்னம்பிக்கையை கொடுத்தது. அதிலிருந்து பிறழாமல் சொந்த ஒழுக்கத்தை கடைபிடித்து அயராது உழைத்த உழைப்பு தான் அவர்களை பெரிய மனிதர்களாக ஆக்கியது. அந்த உழைப்பு தான் அதற்கான பிரதிபலனை கொடுத்தது என்று கூறினால் மிகையாகாது.

பள்ளியில் படித்த போது புத்தகம் வாங்க பணமின்றி உடன்படித்த மாணவர்களின் புத்தகத்தை இரவலாகப் பெற்று இரவு முழுவதும் நகராட்சி தெரு விளக்கின் கீழ் அமர்ந்து ஒரு நோட்டு புத்தகத்தில் அதை நகல் எடுத்து படித்தவர்தான் இளைஞர் லால் பகதூர்.

அதை ஏற்க மறுத்து அடித்த ஆசிரியரிடம், "ஐயா! நான் புத்தகம் வாங்கும் நிலையில் இல்லை. தந்தையற்ற அனாதை நான்" என்றார். ஆசிரியர் நெகிழ்ந்து போனார்.

நேரம் பார்ப்பதற்கு ஒரு கடிகாரம் இல்லாத நிலையில் ஒன்றுவிட்ட சகோதரனின் பாக்கெட்டு கடிகாரத்தை வாங்கி ஆதவனின் கிரகங்கள் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் வீட்டுச் சுவரில் விழும் இடத்தில் கரித்துண்டால் கோடு கிழித்து நேரம் பார்த்தவர் லால் பகதூர். காசி வித்யா பீடத்தில் படித்த போது தாய் உடல் நல மற்றிருக்கும் செய்தி அறிந்து படகில் செல்ல பணமின்றி கங்கையில் நீந்திச் சென்று முகல் சராயை அடைந்த ஏழ்மையானவர் அவர். "லால் பகதூர் சாஸ்திரி மிக உயர்ந்த நேர்மையின் உறைவிடம். விசுவாசத்திற்கு சரியான எடுத்துக்காட்டு. ஏற்றுக் கொண்ட கொள்கைகளை நிறைவேற்றுவதில் முழு அர்ப்பணிப்பு உடையவர். மனச்சான்றுக்கு மாறாக நடந்தறியாதவர் அவர். ஒரு கடுமையான உழைப்பாளி. அவர் மீது எனக்கு எப்போதும் மிகப்பெரிய மதிப்பு உண்டு. அவரைப் போன்ற மனிதர்களை காண்பது அரிது" என்கிறார் நேரு.

இதையும் படியுங்கள்:
நீங்களும் சூப்பர் ஸ்டார் ஆகலாம் இதை மட்டும் 'கேட்டால்'...
Lal Bahadur Shastri motivation story

பிரதமரான போதும் கூட கார் வாங்காதவர். அவ்வளவு எளிமையானவர். திருமணத்தின் போது கூட காதித் துணி, ராட்டினத்தையே வரதட்சணையாகப் பெற்றுக் கொண்டவர். போக்குவரத்து அமைச்சராக இருந்த பொழுது பேருந்துகளில் பெண்களை நடத்துனராக நியமிக்க வழிவகை செய்தவர் அவர். பசுமைப் புரட்சி, வெள்ளைப் புரட்சி மூலம் உற்பத்தியை பெருக்க வழிவகை செய்தவர் என்று அவர் புகழை கூறிக் கொண்டே போகலாம்.

இவற்றின் மூலம் நாம் அறிந்து கொள்ளும் செய்தி ஏராளம் என்றாலும் 'வறுமையில் செம்மை' என்பதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் என்பதுதான் இவரிடம் இருந்த மிகப்பெரிய பண்பு. நாம் அனைவரும் மண்டியிட்டு கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். இன்றும் அவரின் சீரிய ஒழுக்கங்களைப் பற்றி பேசும்பொழுது இது போன்ற அடக்கமுள்ள பெருந்தலைவரை பார்க்க முடியாது என்பதுதான் அனைவரின் பேச்சு. ஏழ்மை என்பது மனிதனை புடம் போடும் நெருப்பு. அது மனிதனை புடம் போட்டு சரித்திரம் படைப்பவன் ஆகவும், சாதனை படைப்பவனாகவும், சகல உலகம் போற்றும் படியாகவும் மாற்றுகிறது. அந்த உதாரணத்தின் சிகரம் தான் இவர்.

ஆதலால்,ஏழ்மை உலகில் இருப்பவர்கள் நம்மால் மேல் நிலைக்கு வர முடியுமா? என்று நினைக்கத் தேவையே இல்லை. இதுபோல் சீரிய தொண்டாற்ற சிறந்த பண்பாளராக வளரலாம் என்பதை வருங்காலத் தூண்கள் மனதில் இருத்தலாம். அதற்காகத்தான் இது போன்ற மோட்டிவேஷனல் கட்டுரைகளே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com