பொதுவாகவே மனித மனங்களில் சிலருக்கு துணிச்சல் குறைந்து கோழைத்தனம் அதிகமாகிவிட்டது. வாழ்க்கை என்பது வாழ்வதற்காகத்தான். அதில் சில சமயங்களில் வெற்றியும் தோல்வியும் வருவது சகஜம்.
வெற்றி வரும்போது மனது சந்தோஷத்துடன் அதை ஏற்றக்கொள்கிறது. அதேபோல தோல்வி வரும் நிலையில் அதை எதிா்கொள்ளும் மனப்பக்குவமும், சகஜ நிலையும், தைரியமும், அசாத்திய துணிச்சலும், வரவேண்டுமே!
அந்த நிலையில் தோல்விக்கு தற்கொலை மட்டுமே தீா்வாகாது. பெரும்பாலும் தன்னம்பிக்கை இல்லாத கோழைகளே தற்கொலை என்ற முடிவிற்கு போய்விடுகிறாா்கள். இதைத் தடுக்கவும், தற்கொலை ஒரு தீா்வல்ல என்பதை எடுத்துக்காட்டவும் உலக தற்கொலை தடுப்பு தினம் செப்டம்பர் 10ல் உலக அளவில் அனுஷ்டிக்கப்படுகிறது.
பொதுவாக தற்கொலை எண்ணங்களை குறைக்கும் நோக்கத்துடன் மனோரீதியான பாதிப்புகள் அவலங்களை நிறுத்துவது தொடர்பாகவும், சாி செய்யும் நோக்கத்துடனும் உலக சுகாதார அமைப்புடன் ( WHO) சர்வதேச தற்கொலை தடுப்பு மன்றத்தால், சர்வதேச தற்கொலை தடுப்பு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.
மன அழுத்தத்தில் இருப்பவர்களை தற்கொலை எண்ணங்களில் இருந்து மீட்டெடுக்கும் பணியை இந்த அமைப்புகள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இப்போதெல்லாம் தொட்டதற்கெல்லாம் தற்கொலை என்பது சர்வசாதாரணமாகிவிட்டது.
தோ்வில் தோ்ச்சி பெற முடியாத நிலை, நீட்தோ்வு பயம், மதிப்பெண் குறைந்தால் பெற்றோா்கள் திட்டுவாா்கள் போன்றவை பிரதான காரணங்களாகும்.
வரதட்சணை கொடுமை, கடன்தொல்லை, காதல் தோல்வி, கணவன் சரியில்லை, மனைவி சரியில்லை, இப்படி பல்வேறு காரண காாியங்களுக்காக தற்கொலை செய்து கொள்வது என்பது வடிகட்டிய கோழைத்தனத்தின் உச்சம் என்றே சொல்லலாம்.
ஆக எப்போதும் தைரியத்துடன் எந்த சவாலையும் ஏற்றுக்கொள்ளும் மனோபாவத்துடன் ஆண்களோ, பெண்களோ, மாணாக்கர்களோ, குடும்பஸ்தர்களோ யாராக இருந்தாலும் எதையும் சமாளிக்கும் நோ்மறை கொள்கையோடு வாழவேண்டும். தோல்விகளுக்கு தற்கொலை ஒரு தீா்வே அல்ல, என்ற கொள்கையை கடைபிடியுங்கள்.
வாழ்க்கை வாழ்வதற்குத்தான் வாழ்ந்து காட்டலாமே!
எந்தப் பிரச்சினைக்கும் தற்கொலை செய்வது தீர்வாகாது. பிரச்சினை என்று ஒன்று இருந்தால், அதற்கான தீர்வும் நிச்சயமாக இருக்கும். தற்கொலை எண்ணம் தோன்றினால் பின்வரும் எண்களில் ஏதேனும் ஒன்றை அழைப்பதன் மூலம் உதவி மற்றும் ஆலோசனை பெறலாம்.
அகில இந்திய GOVT MH மறுவாழ்வு ஹெல்ப்லைன் - 1800-5990019
அகில இந்திய வந்தரேவாலா அறக்கட்டளை 9999 666 555
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-2464 0050