
மனதில் உறுதி இருந்தால் பெரு மலையும் சிறு குன்றென ஆகும். ஆம்.. உண்மையான இலட்சியவாதி எதிர்வரும் தடைகளுக்கு அஞ்சி தன்னுடைய இலக்கை சுருக்கிக் கொள்ள மாட்டார். சாதனையாளர்கள் தானாக உருவாவதில்லை. பல தடைகளைக் கடந்து தன்னை செதுக்கிக் கொள்ளும் சிற்பிகள் அவர்கள். சிற்பி வடிக்கும் சிற்பம் போல சாதனையாளர்களின் வெற்றி பல உளி வலிகளை சுமந்த உன்னதமானது.
யாருக்குத்தான் பிரச்னை இல்லை? பிரச்னைகளை கண்டு நாம் ஓடத் தொடங்கினால் அது நம்மை துரத்த ஆரம்பிக்கும். அதே பிரச்னையை நீயா நானா வா ஒரு கை பார்ப்போம் என்ற தில்லுடன் திரும்பினால் எந்த பிரச்னையாக இருந்தாலும் நம்மை கண்டு அஞ்சி ஓடிவிடும் என்பதுதான் உண்மை. வறுமை என்பதும் ஒரு பிரச்னைதான்.. அதையே நினைத்து தயங்கிக் கொண்டிருந்தால்…
இதோ சமீபமாக அனைவரின் கவனத்தையும் கவர்ந்து பாராட்டுகளைப் பெற்று வரும் இளம் கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜெயித்த கதை.
டிசம்பர் 28, 2001 அன்று உத்தரபிரதேசத்தில் ஒரு சிறிய ஹார்டுவேர் கடையின் உரிமையாளருக்கு பிறந்த நான்கு குழந்தைகளுள் இளையவராக பிறந்தவருக்கு கிரிக்கெட் மீது அதீத ஆர்வம். வறுமை என்றாலும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பத்து வயதில் ஆசாத் மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சி பெற மும்பை செல்கிறார். ஒரு கடையில் வேலை செய்துகொண்டே பயிற்சியில் ஈடுபடுகிறார்.
பயிற்சி வேலைக்கு இடையூறாக இருப்பதால் வேலையா கிரிக்கெட்டா என முடிவு செய்ய வேண்டிய நெருக்கடியில் இவர் கிரிக்கெட்டை தேர்ந்தெடுக்கிறார். வேலை போகிறது. வருமானத்திற்காக பானி பூரி விற்கிறார். கிரிக்கெட் மைதானத்தில் வேலை செய்பவர்கள் தங்கும் டெண்டிலேயே தங்கிக்கொள்கிறார். ஆனால் இத்தனை தடைகளுக்கிடையேயும் பயிற்சியை மட்டும் விடவில்லை.
மூன்று வருடங்கள் இப்படி சென்ற நிலையில் ஜெய்ஸ்வாலின் கிரிக்கெட் திறனை 2013 டிசம்பரில் சாண்டாக்ரூஸில் கிரிக்கெட் அகாடமி நடத்தி வந்த ஜ்வாலா சிங் என்பவர் கண்டறிந்தார். அவர் ஜெய்ஸ்வாலுக்கு தங்குவதற்கு ஒரு இடத்தை வழங்கியதோடு அவரது சட்டப்பூர்வ பாதுகாவலராகவும் அவரது கனவிற்கு உதவுகிறார்.
பசி, வேலையின்மை, வறுமை என ஒரு இந்திய இளைஞன் சாதிக்கத் தடையாகும் அத்தனை பின்புலங்களையும் வாழ்க்கை இவருக்கு வழங்கினாலும் அதில் சோர்ந்து பின் வாங்கிவிடாமல் இந்த இளைஞர் செய்த விடாமுயற்சியும் கடும் உழைப்பும் இருபத்தி மூன்று வயதில் இவரை இன்று அனைவரும் பாராட்டும் நிலைக்கு கொண்டு வந்துள்ளது.
சர் டான் பிராட்மேன் மற்றும் வினோத் காம்ப்ளிக்குப் பிறகு டெஸ்ட் வரலாற்றில் இரண்டு இரட்டை சதங்கள் அடித்த மூன்றாவது இளம் கிரிக்கெட் வீரர் என்ற பெருமை பெற்ற யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் தடைகளைத் தாண்டிய கிரிக்கெட் பயணம் பலருக்கும் உத்வேகம் அளித்துள்ளது. இந்த வெற்றி பயணம் விரைவில் சிகரம் தொடும். தெளிவான இலக்குடன் விடாமுயற்சியும் பயிற்சியும் இருந்தால், எந்த வறுமையும் விலகி வழி விடும் வெற்றிக்கு என்பதை இவரைப் பார்த்து அறிவோம்.