40 – 30 – 20 – 10! அப்படீன்னா?

40 – 30 – 20 – 10! அப்படீன்னா?

‘வரவு எட்டணா செலவு பத்தணா’ என்ற பழமொழி நம் தாத்தா பாட்டி காலத்தில் மட்டும் இல்லை, இன்றைய காலத்திலும் பலரையும் ஆட்டி வைக்கும் உண்மை மொழியாகவே உள்ளது! ‘உத்தியோகம் புருஷ லட்சணம்’ என்பார்கள். ஆனால், இது அன்றைய கூற்று.

இப்போதெல்லாம் ஆண், பெண் என்ற பாகுபாடு இன்றி, எல்லோரும் வேலைக்குப் போகும் நிலை வந்துவிட்டது. ஆனால், எவ்வளவுதான் சம்பாதித்தாலும் பணம் நம் கைகளில் தங்குவதில்லை. வேலைக்குச் செல்லும் மக்கள் தங்கள் பணத்தை எப்படியாவது இந்த மாதம் சேமித்து விட வேண்டும் என்று பல திட்டங்கள் தீட்டி, அதை கடைப்பிடிக்க முற்படுகிறார்கள்.

ஆனால், நாம் சேமிப்பை ஆரம்பிக்கும் அந்த நேரம்தான் நமக்குத் தெரிந்த உறவினர், நண்பர்கள் வீட்டில் விசேஷங்களும், திடீர் மருத்துவச் செலவுகளும் வந்து சேரும். நமக்கு வேண்டிய பொருளைச் சிந்திக்காமல் வாங்கிவிடுவதும், அதற்கு மாத மாதம் தவணை கட்டுவதும், தவிர்க்க முடியாத அத்தியாவசிய செலவுகளைச் செய்வதும், பொழுது போக்கிற்காக நம்மை அறியாமல் நாமே செலவிடுவதும் என இந்தப் பணத்தைச் சேமிக்கவிடாமல் எத்தனை இடையூறுகள். சிலர் சொல்வார்கள், எங்களின் மாத வருமானமே 10,000தான். இதில் சேமிப்பதாவது? அதை வைத்து வாழ்க்கை நடத்துவதே கடினமாக உள்ளது என்று.

நீங்கள் சம்பாதிப்பது ஒரு லட்சமாக இருந்தாலும், பத்தாயிரமாக இருந்தாலும் செலவழிப்பதும் சேமிப்பதும் இரண்டுமே உங்கள் கைகளில்தானே இருக்கிறது! இதை சுலபமாக்க ஒரு வழி உண்டு. அது என்னன்னு பார்ப்போமா?


அதான் 40 – 30 – 20 – 10!

ங்களின் மாதம் வருமானம் 10,000 ரூபாய் எனில், 40% அதாவது ரூபாய் 4000, உங்களுக்கான உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம் என அத்தியாவசிய செலவுகளுக்காக ஒதுக்கி வைத்துவிடுங்கள்.

30% அதாவது ரூபாய் 3000, புதியதாகப் பொருள் வாங்குவது, மாதா மாதம் வரும் தவணைகளைக் கட்டுவது (EMI) போன்றவற்றுக்காக வைத்துவிடுங்கள்.

20% அதாவது ரூபாய் 2000, உங்கள் எதிர்காலத்திற்காகச் சேமித்து வையுங்கள். ஏதாவது முதலீடு செய்து பணத்தை வைத்து, பணம் சம்பாதிப்பதற்காக வைத்துக் கொள்ளுங்கள்.

10% அதாவது ரூபாய் 1000, உங்களின் பொழுது போக்கிற்காகவும், உங்களுக்கு பிடித்தவர்களுக்காகவும், அல்லது வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்காகவும் வைத்துக்கொள்ளுங்கள்.

இந்த முறையில் உங்கள் வருமானத்தைப் பயன்படுத்திப் பாருங்கள். நிச்சயம் உங்களாலும் சேமிக்க முடியும். உங்களாலும் சந்தோஷமாக வாழ்க்கையை வாழ முடியும்.

எத்தனை ரூபாய் சம்பளம் பெறுபவர்களாக இருந்தாலும் சரி இந்த ஃபார்முலா சூப்பராக வேலை செய்யும். சந்தோஷம் என்பது பணத்தில் இல்லை நம் மனதிலும், செயலிலும், திட்டமிடுதலிலும் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com