
யாராவது ஏதாவது ஒரு வேலையை செய்யச் சொன்னாலோ அல்லது இதை நீ இப்படித்தான் செய்யவேண்டும் என்று கட்டளை இட்டாலோ ஏன் அப்படி சொல்கிறீர்கள்? என்ற கேள்வியை வைக்க வேண்டும். ஆனால் நம்மில் பலர் அப்படி ஒரு வினா எழுப்புவது இல்லை. காரணம் பயம்தான். நாம் கேட்பதால் அவர்கள் நம்மைப் பற்றி தவறாக நினைத்துவிடுவார்களோ என்ற எண்ணம் நமக்குள் எழுவது இயல்பு.
இப்படிப்பட்ட பல்வேறு காரணங்களால் கேள்வி கேட்பதை நிறுத்தி விட்டு, இட்ட வேலையை செய்யத் தொடங்குவோம். அதில் வெற்றி பெற்றுவிட்டால் பிரச்னை இல்லை. தோல்வி ஏற்படும் பொழுது தான் "நம்மை ஏன் அவர் அப்படிச் செய்யச்சொன்னார்" என்ற கேள்வியை எழுப்புகிறோம்.
"ஒரு நொடி துணிச்சல் இருந்தால் இறந்துவிடலாம். ஒவ்வொரு நொடியும் துணிச்சல் இருந்தால் ஜெயித்துவிடலாம் என்கிறார் கண்ணதாசன்". அலெக்சாண்டரின் தந்தை ஒரு சமயம் பயிற்சிக்காக அவரை உயரமான பாறையில் இருந்து குதிக்கச் சொன்னார்.
அப்போது அலெக்ஸ்சாண்டர் பயத்துடன் தந்தையைப் பார்த்தார். அவரது தந்தையோ "பயப்படாதே பயிற்சி செய்" என்றார். அப்போது அலெக்சாண்டர் குதித்தார். அவருக்கு உடலில் அடிபட்டது.
ஒரு தந்தை இப்படி தன் மகனை துன்புறுத்தலாமா? என்று கோபத்தோடு கேட்டார் அலெக்சாண்டர்.
அதற்கு அவரது தந்தை "மகனே நான் உன்னை பயப்படாதே என்று சொன்னேன். ஆனால் சிந்திக்க கூடாது என்று சொல்லவில்லை. நீ சிந்தித்து இருந்தால் கீழே விழுந்து அடிபடுமே! என்று என்னை கேட்டிருப்பாய் அல்லவா?" என்று பதில் அளித்தாராம்.
துணிச்சல் என்று கூறினால் அது நாம் கேள்வி கேட்பதில் இருந்தே தொடங்க வேண்டும். அப்படி தொடங்கினால்தான் பல்வேறு வினாக்களுக்கு விடை கிடைக்கும். பிறகு நாம் அவர்கள் செய்யச் சொன்ன வேலையை எப்படிச் செய்யலாம்? எப்படி எல்லாம் செய்யக்கூடாது? என்பதை சிந்தித்துப் பார்த்து திறம்பட செய்து முடிக்க முடியும்.
கேள்வி கேட்பதற்கு துணிச்சல் உடையவர்கள் குழந்தைகள்தான். அவர்கள் நம்மிடம் கேட்காத கேள்வி ஏதாவது இருக்கிறதா என்ன? அவர்களிடமிருந்து நாம் கேள்வி கேட்பதை கற்றுக்கொள்ளலாமா என்றால் கட்டாயமாக கற்றுக்கொள்ளலாம். ஆதலால் கேள்வி கேளுங்கள். உரிய பதில் கிடைக்கும்.