சாதனைக்கு வித்திடுவது எது தெரியுமா?

Motivation image
Motivation imageImage credit - pixabay.com

சிலர் எந்த செயலை செய்ய ஆரம்பித்தாலும் அதற்கு முட்டுக்கட்டை போடுபவர்கள் உண்டு. அவற்றை யெல்லாம் தகர்த்தெறிய வேண்டும் என்றால் அவர்கள் சொல்வதை எல்லாம் ஒரு காதில் வாங்கி மறுகாதில் வெளியே விட்டுவிட வேண்டும். நாம் என்னவாக ஆக நினைக்கிறோமோ அதில் நம் கவனக் குவிப்பை செலுத்த வேண்டும். தொடர்ந்து நம் முயற்சியையும் பயிற்சியையும் அளித்துக் கொண்டே வரவேண்டும். அதுபோல் செய்து வந்தால் சோதனைகளை எல்லாம் கடந்து சாதனை செய்வது உறுதியாக நடைபெறும்.

எனது வகுப்பு மாணவர் சிறுவயதில் இருந்து பத்தாம் வகுப்பு படிக்கும்வரை எழுத்துக்கூட்டிதான் வாசிப்பான். சரளமாக பேச வரும். ஆனால் படிக்க வராது. ஒரு முறை ஆசிரியர் எல்லோரிடமும் கேட்கும் கேள்வியை அவனிடமும் கேட்டார். நீ என்னவாக விரும்புகிறாய்? என்று. அதற்கு அவன் சட்டம் படித்து வக்கீலாக ஆக வேண்டும் என்றான். வகுப்பில் எல்லோரும் கொல் என்று சிரித்து விட்டார்கள். காரணம் இதுதான். எல்லோரையும் ஆசிரியர் பாடப் புத்தகத்தை வைத்துக்கொண்டு வாசிக்க சொல்லும்பொழுது, அனைவருமே சரளமாக தமிழ், ஆங்கிலம் இரண்டையும் படிப்பார்கள். என்றாலும் அந்த குறிப்பிட்ட மாணவனுக்கு மாத்திரம் தமிழும் ஆங்கிலமும் எழுத்துக்கூட்டிதான் படிக்க வரும்.

படிக்கும் பொழுதே எழுத்துக்கூட்டி திணறுகிறாய். நீயா சட்டம் படிக்கப் போறாய்? என்று அனைவரும் எள்ளி நகையாடினார்கள். ஆனால் அவன் எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. என்னால் எல்லாம் முடியும். நான் சட்டம் படிப்பேன். கட்டாயமாக சட்டத் துறையில்தான் பணிபுரிவேன் என்று தீர்க்கமாக தெளிவாக முடிவைக் கூறினான்.

அதேபோல் தினமும் எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் அல்லது ஒரு மணி நேரமாவது முழு கவனத்துடன் பயிற்சி செய்ய ஆரம்பித்தான். எழுத்துக்கூட்டி படிப்பதை நிறுத்தி வார்த்தைகளாக படிக்க ஆரம்பித்தான். மிகவும் சிரமம்தான் என்றாலும் பிளஸ் 2வில் அருமையாக படித்து பள்ளியில் முதல்வனாக தேர்ந்தான். 

இதையும் படியுங்கள்:
அன்பெனும் நீர் ஊற்ற மகிழ்ச்சியும் வெற்றியும் தேடி வரும்!
Motivation image

அதன் பிறகு ஐந்து வருடம் சட்டப்படிப்பை மேற்கொண்டு பட்டம் பெற்று பணி செய்ய ஆரம்பித்தார். அவருக்கென்று அந்த ஏரியாவில் நல்ல பெயரும் புகழும் கிடைத்தது. அதன் பிறகு உயர்ந்து டெபுடி டைரக்டர் (லீகல் சர்வீசஸ்) பதவியை வகித்து வருகிறார். 

சமீபத்தில் சந்தித்தபோது அவர் சொன்ன பதில் இதுதான். சின்ன சின்ன விஷயங்களை இடைவிடாமல் செய்யும் போது நமக்கு அது நல்ல பயிற்சியாக மாறிவிடும். அப்படி விடாமுயற்சி மேற்கொள்ளும் பொழுது அன்று வகுப்பறையில் நடந்த இந்த மேற்கூறிய சம்பவம்தான் எனக்கு நினைவுக்கு வரும். மற்றவர்களின் அந்த எதிர்மறை பேச்சை எப்படி நேர்மறையாக மாற்றுவது என்பதிலேயேதான் என் சிந்தனை, கவனக்குவிப்பு எல்லாமே நிகழும். அந்த ஒரு எதிர்மறை வார்த்தை ஏற்படுத்திய வெற்றிதான் இது என்று கூறி, என் பிள்ளைகளிடத்தும் நான் கூறும் ஒரே அறிவுரை "எந்த ஒரு சாதாரண செயலையும் விடாமல் செய்து வந்தால் போதும். அதுவே நாம் நினைக்கும் இலக்கை அடைய வழிவகுத்து சாதனைக்கு வித்திடும்" என்று கூறி மகிழ்ந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com