சில சில்லரை வியாபாரிகள் எதை, எப்பொழுது, யாரிடம் விற்றாலும் சரியாக எடைபோட்டு விற்பார்கள். எக்காரணத்தைக் கொண்டும் அளவை குறைத்துக் கொடுப்பதில் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள். ஆதலால் அது போன்றவர்களிடம் பொருள் வாங்குவதை அனைவரும் விரும்புவார்கள்.
மேலும் அவரைப் பற்றி மற்றவர்களிடம் கூறும் பொழுது கூட அவர் மிகவும் நேர்மையானவர். உண்மையானவர். யாருக்கும் எதையும் சரியானபடி அளந்து கொடுப்பார். வசதியில் சற்று குறைவானவராக இருந்த பொழுதிலும் இதில் எல்லாம் சமரசம் செய்து கொள்ள மாட்டார். மற்றவர் காசுக்கு ஆசைப்பட மாட்டார். நல்ல மனிதர். பண்பாளர் என்று புகழ்ந்து பேசுவதைக் கேட்டிருப்போம்.
கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்பதற்கு இணங்க வாழ்பவர்கள் இவர்கள்தான். இதனால் இவர்கள் எந்த இடத்திற்குச் சென்றாலும் தலை நிமிர்ந்து, நேர்கொண்ட பார்வையுடன் நடப்பதை நன்றாக அறியலாம்.
கொரோனா மற்றும் புயல் காலங்களில் சாதாரணமாக விற்கும் ஒரு பால் பாக்கெட்டின் விலை எவ்வளவு உயர்ந்தது என்பதை நம்மால் மறக்க முடியாது. ஒரே நாளில் பணக்காரர்கள் ஆகிவிட வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு. நமக்கும் பாலின் தேவை அதிகம் இருந்ததால் எப்படியோ வாங்கிவிட்டால் போதும் என்ற நிலை. வாங்கினோம், கொடுத்தோம். அதன் பிறகு அவர்கள் தெரிந்தவர்களின் முகத்தில் விழிக்க மிகவும் சிரமப்பட்டார்கள். சில நாட்கள் தலையை கவிழ்ந்தபடியே பால் பாக்கெட்டை எல்லாம் கேட்பவர்களுக்கு எடுத்துக் கொடுத்தார்கள்.
ஒருவர் மாடு வளர்த்தார். மாட்டுக்கு புண்ணாக்கு வேண்டும். அதே தெருவில் மற்றொருவர் புண்ணாக்கு விற்றுக் கொண்டிருந்தார். இருவரும் பண்டமாற்று ஓப்பந்தம் செய்து கொண்டார்கள். தினமும் ஒரு கிலோ புண்ணாக்கு கொடுக்க வேண்டும். அதற்குப் பதில் ஒரு கிலோ பால் தரவேண்டும் என்பதுதான் அது.
ஒரு நாள் புண்ணாக்குக் கடைக்காரர் பாலை நிறுத்துப் பார்த்தார். முக்கால் கிலோதான் இருந்தது. அடடா நாளும் என்னை ஏமாற்றி இருக்கிறானே விடக்கூடாது என்று நினைத்தார்.
ஊர் பஞ்சாயத்தில் புகார் கூறினார். பஞ்சாயத்தார் பால்காரரைக் கூப்பிட்டு விசாரித்தார்கள். அவருக்குப் பால் குறைவாக கொடுத்தாயா? என்று கேட்டார்கள்.
எனக்குத் தெரியாது. அவர் புண்ணாக்குத் தருவார். தராசில் புண்ணாக்கை ஒரு தட்டில் வைத்து மறுத்தட்டில் பால் செம்பை வைத்து நிறுத்துக் கொடுத்து விடுவேன் என்று பால்காரர் சொன்னார். அதைக் கேட்டு புண்ணாக்குக்காரர் தலை குனிந்தார்.
பஞ்சாயத்துகாரர்கள் சொன்னார்கள். நாம் என்ன செய்கிறோமோ அதுதான் நமக்கும் கிடைக்கும்.
நாம் செய்வதை நல்லதாகவே செய்வோம். தலை நிமிர்ந்து நடப்போம்.
அடுத்தவர் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு இருக்க வேண்டுமே தவிர, திருத்தி பார்க்கும் அளவிற்கு இருக்கக் கூடாது நம் வாழ்க்கை.