
அமைதியான வாழ்க்கை வேண்டும் என பலரும் ஆசைப்படுவது உண்டு. ஆனால் அந்த அமைதியான வாழ்க்கை கிடைத்துவிட்டால் வாழ்க்கையில் எல்லாம் கிடைத்துவிடும் என்று நினைக்கிறேன். நிச்சயமாக இல்லை. சவால்கள் நிறைந்த வாழ்க்கைதான் ஒரு மனிதனுக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்கும். நல்லது, கெட்டது, துரோகம், நம் மதிப்பு, நம் மரியாதை என அனைத்தையும் நமக்கு தெரிவிப்பது சவால்கள் நிறைந்த வாழ்க்கைதான்.
அமைதியை தேடுகிறேன், அமைதியை தேடுகிறேன் என்று அலைய வேண்டாம். சவால்களோடு வாழுங்கள் நிச்சயமாக அந்த வாழ்க்கை உங்களுக்கு வசந்தமாக இருக்கும்.
நம்மைச் சுற்றி எங்கும் அமைதி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது வீண். அது இயற்கையில் சாத்தியமில்லை. தொடர் நீர்வீழ்ச்சியைப் போல அன்றாட வாழ்க்கையில் செய்ய வேண்டியது நிறைய இருந்து கொண்டேதான் இருக்கிறது. அது ஓய்வதில்லை.
அந்த வேலைகளுக்கு இடையேயும், அமைதியான உறக்கம் போல, நம் உள் மனம் அமைதியாக இருக்குமானால் அதை விடப் பெரிய சாதனை வேறெதுவும் இருக்க முடியாது. அந்த அமைதியின் முத்திரை நாம் செய்கின்ற செயலின் சிறப்பில் கண்டிப்பாக வெளிப்படும்.
அனைத்து வசதிகளும் அமையப் பெற்று எந்தவித தொந்தரவும் இல்லாத ஒரு சூழலில் வாழ்வது அமைதி அல்ல. அது ஒரு வாழ்க்கையும் அல்ல.
ஆயிரம் துன்பத்திற்கு நடுவே, நிச்சயம் ஒரு நாள் விடியும் என்று தினசரி உழைத்துக் கொண்டு வருகிறார்களே அவர்களிடம் இருப்பதுதான் அமைதி. எத்தனையோ தொல்லைகள் யார் தந்தாலும், எனக்கு நேரும் மான அவமானங்களை விட 'நான் எட்ட வேண்டிய இலக்கே எனக்குப் பெரிது” என்று எதையும் பொருட்படுத்தாது போய் கொண்டு இருக்கிறார்களே… அவர்கள் உள்ளத்தில் உள்ளதுதான் உண்மையான அமைதி.
சாத்தியமில்லாத இடத்தில் சாத்தியப்படுவதுதான் அமைதி. அதாவது பாறைக்குள் வேரைப் போன்று தொல்லைகளும் துன்பங்களும், பிரச்னைகளும் சூழ்ந்து இருக்கும் தருணத்தில் அவைகளைக் கண்டு பதற்றம் அடையாமல் எதிர்கொள்வதே ''உண்மையான அமைதி''.
வாழ்க்கையில் இனி சவால்கள் வந்தால் எதிர்த்து சமாளியுங்கள். அதுதான் உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும். அமைதி கற்றுக் கொடுக்காத பாடங்களை சவால்கள் கண்டிப்பாக கற்றுக் கொடுக்கும்.