
நிறைகுடம் தழும்பாது. குறைகுடம் கூத்தாடும் என்பது பழமொழி. இராமபிரான் நடந்து செல்லும் வழியில் தான் முதலில் காண்பவர்களுக்கு எல்லாம் இவராகவே முதலில் சென்று வணக்கம் கூறுவார் என்று படித்திருக்கிறோம். இப்படி அவர் வணங்கியதால்தான் 'வணங்கியவர் வாழ்வு பெற்று வாழ்வார்கள்' என்பதற்கு பெரிய சாட்சியாக இன்றளவும் நம்மிடையே தெய்வமாக காட்சி அளித்துக் கொண்டிருக்கிறார். அதோடு நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதையும் சாதாரண மனித உருவில் இருந்து நமக்கு வழங்கிவிட்டு சென்றிருக்கிறார்.
இன்னும் சொல்லப் போனால் வணங்க ஆரம்பிக்கும் போதே நீங்கள் வளர ஆரம்பித்து விடுகிறீர்கள். வணங்குங்கள் வளர்வீர்கள் என்பதற்கு ஏற்ப இன்னும் ஒரு பெரியவர் நடத்திய பாடம் இது. திருப்பதி திருமலைக்கு எழுந்தருளினார் ராமானுஜர். அவரை வரவேற்க சடாரி, தீர்த்த பிரசாதம் சகிதமாக காத்திருந்தார் பெரிய திருமலைநம்பி. இவர் யார் என்றால்? ராமானுஜரின் தாய் மாமனார். அதைவிட மேலாக ராமானுஜரின் குருவும் இவர்தான். நம்பியின் கால்களில் விழுந்து பணிந்து ஆசி பெற்றார் ராமானுஜர்.
அப்போது இந்த தள்ளாத வயதில் என்னை வரவேற்க வேறு சிறியோர் யாரையேனும் அனுப்பி இருக்கக் கூடாதா? தாங்களே ஏன் சிரமப்பட்டு வந்தீர்கள்? என பணிவுடன் கேட்டார் ராமானுஜர். அதற்கு நம்பி இந்த திருமலை முழுவதும் சுற்றிப் பார்த்தேன். என்னை விட சிறியவர் யாரும் கிடைக்கவில்லை என்று பதில் அளித்தார்.
எவ்வளவு பெரியவராக இருந்தாலும் அடக்கம் முக்கியம் என்பதற்கு இதைவிட உதாரணம் வேறு என்ன சொல்ல முடியும்? அறவழியில் நடக்கும் பெரியவர்களுடன் அடக்கமுடன் பழகவேண்டும் என்பதற்கு இது போன்ற பெரியவர்கள் வாழ்ந்து காட்டியதுதான் நமக்குப் புகட்டும் பாடம். நாம் கற்றுக்கொள்ள வேண்டியதும் இந்த அறநெறியைத்தான்.
இன்றும் சில குழந்தைகள் பெரியவர்களுக்கு வணக்கம் சொல் என்றால் சொல்வோமா? வேண்டாமா என்று சிந்திப்பதை பார்க்க முடிகிறது. இன்னும் சில இளவட்டங்கள் ஏன் பெரியவர்கள் கூட நாமாக ஏன் முந்திக்கொண்டு வணக்கம் சொல்ல வேண்டும். அவர் சொன்னால், நாம் சொல்லுவோம் என்று இறுமாந்து இருப்பதையும் பார்க்க முடிகிறது. அதுபோன்று இருப்பவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய அருமையான பாடம் இது.
யார் ஒருவர் வழியில் போகும் ஒரு நபரை பார்த்து சிரித்த முகத்துடன் வணக்கம் என்று கூறுகிறார்களோ அடுத்தநாள் முதல் அவர்தான் கூறவேண்டும் என்று அதை பெற்றவர்கள் எதிர்பார்க்க மாட்டார்கள். நாமாகவே முந்தி வணக்கம் சொல்லலாம் என்று திருந்தியவர்களும் உண்டு. ஆதலால் வணங்குவோம்; நல்வாழ்வு பெற்று வளர்வோம்!
பணி உடையன் இன்சொலன் ஆதல் ஒருவர்க்கு அணி; அல்ல மற்றுப் பிற - என்கிறார் திருவள்ளுவர். இதையும் நாம் நினைவில் கொள்வோம்.