மனம் அமைதியாகவும் தெளிவாகவும் இருப்பதற்கு உதவியாக இருப்பது பாசிட்டிவ் என்ர்ஜியே. நீங்கள் பாசிட்டிவ் எனர்ஜியுடன் இருப்பதற்கு பெரிய அளவில் உதவி செய்பவர்கள் உங்களுடன் இருப்பவர்கள்தான். அதேபோல் இயற்கையும் நீங்கள் நேர்மறை ஆற்றலுடன் இருப்பதற்கு பெரிதளவில் உதவி செய்கிறது. அந்தவகையில் உங்களை பாசிட்டிவாக வைத்திருக்கும் எனர்ஜிகளைப் பற்றி பார்ப்போம்.
சூர்ய ஒளி:
காலை வெயிலில் நிற்க சொல்லி நம்முடைய முன்னோர்கள் கூறுவார்கள். அதற்கு காரணம் சூர்ய ஒளி நமக்கு புத்துணர்வையும் புதுவகையான ஆற்றலையும் கொடுக்கும் என்பதால்தான். ஆகையால் காலையில் ஒரு 15 நிமிடங்கள் வெயிலில் நில்லுங்கள். இதனால் அந்த நாளின் முதல் ஆற்றலை நீங்கள் எளிதாக பெற்றுக்கொள்ள முடியும்.
தியானம்:
காலை வெயிலுக்குப் பிறகு 15 முதல் 20 நிமிடங்கள் தியானம் செய்யுங்கள். இதனால் மன அமைதியும் தெளிவும் கிடைக்கும்.
இயற்கை:
காற்று, மரங்கள், செடிகள் ஆகியவற்றுடன் பேசுங்கள். ஏனெனில் அதுவும் நம்மிடம் பேசும். மாலை அல்லது காலை ஒரு 30 நிமிடங்கள் பூங்கா போன்ற இடங்களில் நேரம் செலவிடுங்கள்.
சிரியுங்கள்:
வாய்விட்டு சிரியுங்கள். சிரிப்பதற்கு கணக்குப் பார்க்க வேண்டாம். பூங்காவில் சிலர் பயிற்சி என்று சிரிப்பதை பார்த்திருப்பீர்கள். அதனை முயற்சி செய்வதைவிட மனதிலிருந்து உண்மையாகவே சிலவற்றிற்கு சிரிக்க கற்றுக்கொள்ளுங்கள். இது உடம்பில் உள்ள அழுத்தங்களைக் குறைத்து புத்துணர்வாக்கும்.
சோர்வானவர்களை உடன் வைத்துக்கொள்ளாதீர்கள்:
நீங்கள் புத்துணர்வுடன் இருக்கும்போது உடன் இருக்கும் சோர்வானவர்களைப் பார்த்தால் நீங்களும் சோர்வாகிவிடுவீர்கள். ஆகையால் யாருடன் இருக்க வேண்டுமென்பதை நீங்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.
பிடித்த செல்லப்பிராணிகள்:
செல்லப்பிராணிகள் எப்போதும் உற்சாகமாகவே இருக்கும். அதேபோல் உடன் இருப்பவர்களையும் தனது ஆற்றலாலும் பாசத்தாலும் உற்சாகமாக வைத்துக்கொள்ளும். ஆகையால் உங்களுக்குப் பிடித்த செல்லப்பிராணிகளை உடன் வைத்துக்கொள்ளுங்கள்.
நன்றாக தூங்க வேண்டும்:
இப்போது பலரும் உற்சாகமில்லாமல் சுற்றுவதற்கு முதல் காரணம் தூக்கமின்மைதான். சிலருக்கு இரவு நேரங்களில் தூக்கம் வருவதில்லை. சிலரின் வேலைகள் அவர்களைத் தூங்கவிடுவது இல்லை. ஆனால் போதுமான தூக்கமும் உற்சாகமாக இருப்பதற்கு துணைப் புரிகிறது.
கொஞ்சமாக சாக்லேட்:
சாக்லேட் பொதுவாக சாப்பிடக்கூடாது என்று பெரியவர்கள் கூறுவார்கள். அது நமக்கும் நம் பற்களுக்கும் உள்ள பிரச்சனை. ஆனால் சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமென்றால் தினமும் சிறிதளவு சாக்லேட் எடுத்துக்கொள்வதில் தவறில்லை.
சுய அக்கறை:
மற்றவர்களின் மேல் அக்கறை காட்டுவது ஒரு நிம்மதியை தரும் என்றால், உங்கள் மேல் நீங்கள் காட்டும் அக்கறையும் உங்களுக்கு ஒரு திருப்தியை தரும். உங்களை அழகுப்படுத்திக்கொள்வது, உங்களுக்கு பிடித்த வேலையை செய்வது. இதுபோன்ற விஷயங்களை செய்யுங்கள்.
நன்றாக சாப்பிடுங்கள்:
உணவை நிராகரித்தாலே சோர்வு உங்களை அண்டிவிடும். போதுமான அளவு உணவை நேரம் தவறாமலோ, பசிக்கும்போதோ எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவையனைத்தும் உங்களை எப்போதும் ஆற்றலுடன் வைத்துக்கொள்ள உதவும்.