ஒரு இடத்தில் நாம் சௌகரியமாக இருந்துவிட்டால், அந்த இடத்திலிருந்து வெளிவர நமக்கு மனதே இருக்காது. அந்த வட்டத்திற்குள்ளேயே இருந்துவிடுவோம். அங்கிருந்து வெளியே வந்தால், எந்த சௌகரியமும் இருக்காது, பெரிய கஷ்டம் என்று நினைத்து அங்கேயே இருந்துவிடுவோம். இதனால், நம் வாழ்வில் வளர்ச்சி என்பதே இல்லாத ஒன்றாகிவிடும். ஒரு கம்ஃபர்ட் சோனில் இருந்துவிட்டால், என்னென்ன தீமைகளை நாம் அனுபவிக்கக்கூடும் என்பது குறித்து பார்ப்போம்.
மனித மனம் எப்போதும் பாதுகாப்பான மற்றும் பழக்கப்பட்ட இடத்தில் இருக்கவே விரும்பும். இதைத்தான் நாம் ‘Comfort Zone’ என்று அழைக்கிறோம். இது ஆரம்பத்தில் ஆறுதல் அளித்தாலும், காலப்போக்கில் நமது வளர்ச்சிக்கு ஒரு பெரிய தடையாக மாறிவிடுகிறது. என்னத்தான் ஒரு கூண்டில் பறவை பாதுகாப்பாக இருந்தாலும், கூட்டை திறந்துவிடும்போது வானில் பறக்கும் திறன் அதற்கு இல்லாமல் போய்விடும்.
Comfort Zone என்பது, எந்த அழுத்தமும் இல்லாமல், ஆபத்தும் இல்லாமல் நீங்கள் வழக்கமாக செய்யும் செயல்களையே குறிக்கும். இதில் நிம்மதியாக இருந்தாலும், வளர்ச்சியைத் தடுக்கிறது. காரணம், இங்கு புதிய சவால்களோ, கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயமோ இல்லை.
நீங்கள் Comfort zone –ல் இருப்பதற்கான அறிகுறிகள்:
புதிய முயற்சிகளுக்கு ‘நோ’ சொல்வீர்கள். வேலையிலோ, தனிப்பட்ட வாழ்க்கையிலோ முன்னேற்றம் இல்லாமல் ஒரே இடத்தில் இருப்பீர்கள்.
சவாலான காரியங்களைக் கண்டவுடன் பயப்படுவீர்கள்.
தினமும் ஒரே விதமான வேலைகளை மட்டுமே செய்வீர்கள்.
Comfort Zone-ஐ உடைப்பதற்கான வழிகள்
உடனடியாக ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்காதீர்கள். அது தோல்வி பயத்தை ஏற்படுத்தி, உங்களை மீண்டும் அதே சோனில் இருக்கவைக்கும்.
தினமும் ஒரே பாதையில் வேலைக்குச் செல்வதற்குப் பதிலாக, ஒரு நாள் வேறு பாதையில் செல்வீர்கள்.
அதாவது, கூட்டத்தில் பேசுவதற்குப் பயமாக இருந்தால், முதலில் உங்கள் குழுவில் அக்கருத்தை சத்தமாகப் பேசுங்கள்.
பயம் என்பது உங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது உடல் கொடுக்கும் ஒரு எச்சரிக்கை உணர்வு. ஆனால், Comfort Zone-ஐ உடைக்கும்போது ஏற்படும் பயம் பெரும்பாலும் கற்பனையானது. நீங்கள் எடுக்கும் முடிவின் மிக மோசமான விளைவுகள் என்னவாக இருக்கும் என்று பட்டியலிடுங்கள். பெரும்பாலும், அந்த விளைவுகள் நீங்கள் கற்பனை செய்வதை விட மிகக் குறைவாகவே இருக்கும்.
உங்களுக்கு முற்றிலும் சம்பந்தமில்லாத ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக்கொள்ள நேரத்தை ஒதுக்குங்கள். அது சமையலாக இருக்கலாம், புதிய மொழியாக இருக்கலாம், அல்லது ஒரு இசைக்கருவியாக இருக்கலாம். இது தோல்வியைப் பற்றிய பயத்தை எதிர்த்துப் போராடவும், உங்கள் மூளையைத் தூண்டவும் உதவும்.
உங்கள் இலக்குகளை வசதியான இலக்குகளாக அல்லாமல், வளர்ச்சியைத் தரும் இலக்குகளாக மாற்றியமைக்க வேண்டும். 'இந்த வேலையைச் செய்ய வேண்டும்' என்பதை விட, 'இந்த வேலையின் மூலம் நான் என்ன கற்றுக்கொள்ள வேண்டும்' என்று இலக்கு வையுங்கள்.
தோல்வி உங்கள் Comfort Zone-இலிருந்து வெளியே வந்துள்ளதற்கான அறிகுறியாகும். அது ஒரு முடிவல்ல, மாறாக அடுத்த முயற்சிக்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
உங்கள் Comfort Zone-ஐ விட்டு வெளியேறுவது என்பது ஒரு அசௌகரியம்தான். ஆனால், அது வெறும் தற்காலிகமான ஒன்றுதான். இந்த அசௌகரியம்தான் உங்களை வளர்ச்சி அடைய செய்கிறது. வளர்ச்சி என்பது உங்கள் வசதிக்கேற்றவாறு ஒரு மூலையில் அமர்ந்திருப்பதல்ல; அது சவால்களைத் தேடி, புதிய அனுபவங்களை ஏற்றுக்கொள்வது. இன்றே ஒரு சிறிய சவாலுடன் தொடங்குங்கள். உங்கள் வாய்ப்புகளை நீங்களே உருவாக்குங்கள்!