வாழ்க்கையின் வெற்றி, தோல்விகளால் ஒருவருக்குக் கிடைக்கக்கூடிய மிகுந்த மகிழ்ச்சியோ அல்லது வலியோ அதை அனுபவிக்கும் அந்த நபருக்கு மட்டுமே தெரியும், புரியும். கூட இருப்பவர்களுக்கு, அந்த உணர்ச்சி அல்லது பின்னடைவு அவ்வளவு தூரத்திற்குத் தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. மற்றவர்கள் வாழ்த்துவார்கள் அல்லது தேற்றுவார்கள். அது விரைவில் மறைந்துவிடும்.
ஏன் என்றால் அனுபவித்தவர்கள் அவர்கள் கிடையாது. அந்த நேரத்தில் உடன் இருப்பார்கள். பிறகு அவர்கள் காரியங்களைக் கவனிக்க சென்றுவிடுவார்கள். இது உலக இயல்பு. யாரையும் குறை சொல்ல முடியாது. பாராட்டுதல்கள் வரும், உதவிக்கரம் வரலாம், ஆறுதல் மொழிகள் தைரியம் அளிக்கும். ஆனால், சம்பந்தப்பட்ட நபர்தான் மகிழ்ச்சியோ அல்லது துக்கமோ மேற்கொண்டு நகர முற்பட முயற்சி செய்து நகர வேண்டும். எல்லா நிகழ்வுகளும் அந்த நேரத்தோடு முடிவடைந்து, அடுத்த நிகழ்வு அல்லது நடவடிக்கைக்கு எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ஒவ்வொரு மனிதனும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறான் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டியது இந்தச் சிக்கல் மிக்க வாழ்க்கையின் அம்சம் ஆகின்றது.
எப்பொழுதும், எல்லா நேரங்களிலும் உதவிக்கு மனிதர்கள் கிடைப்பார்கள் என்று கூற முடியாது. அப்படி இருக்கையில் பாதிக்கப்பட்ட நபர் என்ன செய்யலாம்? யாரை நாடலாம்? யாருடன் பேசலாம்? அந்த நபர் பேசக்கூடிய ஒரே ஒரு இடம் அவரது உள்மனதே ஆகும்.
பல வகை பிரச்னைகளில் இருந்து காப்பாற்ற, நம் உள்மனதிலிருந்து எச்சரிக்கை வந்துக்கொண்டுதான் இருக்கின்றது. ஆனால், அவ்வகை எச்சரிக்கைகளைப் புரிந்துகொள்ளாமல் இருப்பதும் அல்லது அலட்சியப் படுத்துவதும் சிலரின் இயல்பு. நடந்த பிறகு நினைத்து வருந்துவது பலனை அளிக்காது. சிலர் உள்மனது கூறியபடி ஒரு குறிப்பிட்ட பதிலை கூறாமலோ அல்லது வேலையை செய்யாமலோ தவிர்த்து அதற்கான பலனை அனுபவித்த தருணங்கள் ஏராளம். உள்மனது முக்கியமாக எச்சரிக்கை கொடுக்கும் பணியைச் செய்கின்றது. எப்படி அறிந்துக் கொள்வது.
பதட்டப்படாமல் சிந்திக்க பழகவேண்டும், முடிந்த வரையில் சிறிது குறிப்பிட்ட நேரம் தனிமையில் அமர்ந்து பிடித்த மகிழ்ச்சியான நிகழ்வுகளை நினைவு கூறிக்கொள்ள வேண்டும். பிறர் நன்மைகளுக்கு உண்மையான பிரார்த்தனை செய்யவேண்டும். உதவி செய்தவர்களுக்கு மனதார நன்றி கூற பழகிக்கொள்ள வேண்டும். சுற்றுப்புறத்தை மறந்து உள்மனதுடன் உரையாட மெள்ள மெள்ள பழகிக்கொள்ள வேண்டும். உங்கள் உள் மனது உங்களுக்குச் சப்போர்ட் செய்யும். உங்களுக்குத் தேவையானபொழுது நீங்கள் அறியாமலேயே, கேட்காமலேயே உங்கள் உள்மனது உங்களுடன் உரையாடி தேற்றிவிடும். உங்களை நீங்களே திடப் படுத்திக்கொள்ளவும் உதவும்.